பயனுள்ள ஜெபம்!
அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2015)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: 2 இராஜாக்கள் 19:1-37
“.. கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண் பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்” (2 இரா.19:35).
எசேக்கியா அரசர் தேவனுக்கு முன்பாக உத்தமராய் நடந்து அவரையே நம்பியிருந்தார். ஆயினும் அவருக்கு ஒரு நெருக்கடியான வேளை வந்தது. அண்டை நாட்டினரான அசீரியர்கள் அவருடைய நாட்டின் மீது படையெடுத்து வந்தனர்.
அசீரிய அரசர் சனகெரிப் தனது மூன்று தளபதிகளை இராணுவத்துடன் எருசலேமுக்கு அனுப்பினார். ரப்சாக்கே தனது தளபதிகளுடன் இணைந்து, இஸ்ரவேலரைச் சீண்டினார். யேகோவா தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கேலி செய்தார். எருசலேம் நகர மதிலின் அருகே நின்று, யூதா மக்களைப் பற்றி ஆபாச வார்த்தைகளைக் கூறி, “எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான். கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; …நீங்கள் என்னோடே ராசியாகி,..” (2 இரா.18: 29-31) என்று ஆலோசனை கூறினார்.
தனது நகரின் மதிலருகே அசீரியர்கள் எதிர்த்து நிற்பதைக் கேள்விப்பட்ட எசேக்கியா அரசர், தமது வஸ்திரத்தைக் கிழித்து இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தார். நிலைமை கட்டுக்குள்ளே இருப்பதாக ஏசாயா தீர்க்கதரிசியும் எசேக்கியா அரசரை தைரியப்படுத்தினார். தன்னிடம் நகரத்தை ஒப்புவிக்கச் சொல்லி அசீரிய அரசரிடமிருந்து அவ்வேளையில் ஒரு நிருபம் எசேக்கியா அரசருக்கு வந்தது. அதை படித்த அரசர் ஓர் உண்மை விசுவாச வீரனுடைய தன்மையை வெளிப்படுத்தினார். கர்த்தராகிய ஆண்டவரிடம் தனது நிலையை விளக்கிக் சொன்னார். அதில் ஒரு நீதியுள்ள ஜெபத்தின் பண்புகளை நாம் காண முடிகிறது.
1. அவருடைய ஜெபம் உள்ளுணர்வின் தன்னிச்சையானது (2இரா.19:14). எசேக்கியா இம்மிரட்டல் கடிதத்தைப் பெற்றவுடன் அதனை உடனடியாக தேவனுக்கு முன்பாக விரித்துக் காண்பித்தார். தனது மந்திரிகளின் செயற் குழுவைக் கூட்டுவதற்கோ, மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்பதற்கோ அவர் சிந்திக்கவில்லை. இதைப்போன்றதோர் சூழலில் எலிசா தீர்க்கதரிசியும் (2இரா.4:33), நெகேமியாவும் (நெகே.2:4) செய்ததைப் போலவே அவரும் ஜெபித்தார்.
2. அவருடைய ஜெபம் பயபக்தியுடன் துதிகளால் நிறைந்திருந்தது (2 இரா.19: 15). அவர் தேவனை “கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்” என்று சொல்லுகிறார். கர்த்தருடைய ஜெபமும் இதைப் போன்றதொரு பக்தி வினயமானது.
3. அவருடைய ஜெபம் அந்தரங்கமான நெருக்கமானது (2இரா.19:16). தேவனைப் பயபக்தியுடன் அழைத்த பின்னர், “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்து பாரும்” என்று கெஞ்சுகிறார். தேவனுடைய இறையாண்மையைக் கண்ட அவர் இப்பொழுது அவரை ஒரு நண்பராக பார்க்கின்றார்.
4. அவருடைய ஜெபம் மரியாதையுடன் நினைவூட்டலாக அமைந்தது (2இரா. 19:17,18). இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டுமென்று எசேக்கியா தேவனைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் வாக்குப்பண்ணியதை நினைப்பூட்டுகிறார். ஜெபத்தில் நமது நிலையை நாம் விவரிக்கும்பொழுது, நமது இயலாமையை தேவன் அறியவில்லை என்று பொருளாகாது. நமது இயலாமையை நாம் அறிந்திருக்கிறோம் என்பதையே தேவனுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
5. அவருடைய ஜெபம் சுருக்கமானது (2இரா.19:19). இப்பொழுது எசேக்கியா தனது தேவையை விளக்குகிறார். தேவனுக்கு தமது மன்றாட்டை ஏறெடுக்கிறார். “இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, …எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் …” என்று சுருக்கமாகத் தமது விண்ணப்பத்தைக் கூறினார். எசேக்கியா அரசர் அதிக வசனிப்பில்லாமல் நேரடியாக தமது காரியத்தை விளக்கினார்.
6. அவருடைய ஜெபம் குறிக்கோளைக் கொண்டது. அசீரியர்களிடமிருந்து தங்களை விடுவிக்குமாறு எசேக்கியா மன்றாடினார். “இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும்…” என்று விண்ணப்பம் பண்ணினார் (19:19). தேவையற்ற வார்த்தைகளைக் கூறி அலப்பாமல் தன்னுடைய தேவையை நேரடியாக தேவனிடம் தெரிவித்தார். தேவனுடைய சித்தத்தின்படி தேவமக்களுக்கு எதுவும் நேரிடலாம். ஆனால் நம்முடைய ஜெபமோ, இக்கட்டான சூழலிலிருந்து நம்மை விடுதலை செய்யும் தேவனுடைய கிருபையை உலகமானது அறிந்துகொள்ளும் விதமாய் அமையவேண்டும்.
7. அவருடைய ஜெபம் சக்தி வாய்ந்தது. 2 இரா.19:35 இல் ஒரு நீதிமானின் ஊக்கமான ஜெபத்தின் வல்லமையைக் காட்டுகிறது. “அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.” எசேக்கியாவும் அவரது மனிதர்களும் மறுநாள் காலையில் தங்களுடைய எதிரிகளில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேர் இறந்து கிடந்ததைக் கண்டனர். மகத்துவமான தேவன் தாம் வாக்குப்பண்ணியதை வல்லமையாய் நிறைவேற்றினார்.
தேவனை நாம் ஜெபத்தால் மாத்திரமே நெருங்க முடியும். நாம் ஒவ்வொருவரும் எசேக்கியா அரசரின் ஜெபத்தைக் கருத்துடன் வாசித்து அவருடைய ஜெபத்தின் ஏழு பண்புகளையும் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும். நாமும் எசேக்கியா அரசரைப் போல, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என விசுவாசிக்க வேண்டும்.
அதிகாலைப் பாடல்:
என்னால் சுமக்கமுடியாத பாரங்களையும்
என் சோதனைகளையும் இயேசுவிடம் சொல்லுவேன்;
என் துன்பத்தில் அவர் கருணையுடன் இரங்குவார்
எனக்கு அன்பாய் கைகொடுத்து உதவிடுவார்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை