அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
மத்திய அமெரிக்க மொழிகளில் வேதாகமம்
டெளன் சென்ட் 1934 இல் வைக் கிளிப் முகாமை ஆரம்பித்தார். இம் முகாமின் நோக்கம், வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிராத கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதாகும்.
1946ஆம் ஆண்டு, டெளன்சென்ட் தென் அமெரிக்காவிலுள்ள பெரூ எனும் நாட்டுக்குச் சென்று 17 வருடங்கள் அங்கு ஊழியம் செய்துள்ளார். அதன் பின்னர், தென் அமெரிக்காவின் இன்னுமொரு நாடான கொலம்பியாவுக்குச் சென்றார். மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் 50 வருடங்கள் பணியாற்றிய பின்னர் ரஷ்யாவுக்குச் சென்று அங்குள்ள மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளையும் டெளன்சென்ட் ஆராய்ந்தார். “தாய் மொழி வேதாகமமே உலகிலுள்ள மிகப் பெரிய மிஷனரி” எனும் கூற்றைப் பல சந்தர்ப்பங்களில் உபயோகித்த டெளன்சென்ட், உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பதைத் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்.
டெளன்சென்ட் முதன் முதலாக கெளத்தமாலாவில் மொழி பெயர்த்த கக்சிகுவெல் வேதாகமம், அம்மொழி பேசிய அநேகரை இரட்சிப்புக்குள் கொண்டுவந்துள்ளது. 1970இல், கெளத்தமாலாவிலுள்ள 17 கோத்திர மொழிகளில் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாண்டு வரை 7 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மேலும் 11 கோத்திர மொழிகளில் வேதாகமப் பகுதிகள் இருந்தன. டெளன்சென்ட் ஆரம்பித்த வைக் கிளிப் முகாமின் அங்கத்தவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்வடைந்துகொண்டே சென்றது. 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வைக் கிளிப் முகாமில் 5100 பேர் வேதாகம மொழி பெயர்ப்புகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் 700 பேர் புதிய மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதற்குத் தம்மைப் பயிற்றுவித்துக் கொண்டிருப்பதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
டெளன்சென்ட் ஆரம்பித்த வைக் கிளிப் முகாமில் பிரபல்யம் பெற்ற மொழியியலாளராகக் கருதப்படுபவர் கென்னத் பைக் என்பவராவார். 1912 இல் பிறந்த இவர், 1935இல் வைக் கிளிப் முகாமில் பணியாற்றுவதற்காகச் சேர்ந்து மெக்சிகோ நாட்டில் வாழும் மிக்ஸ்டெக் எனும் கோத்திர மக்களிடம் சென்று, அவர்களது மொழியைக் கற்கத் தொடங்கினார். பைக் அம்மொழியை வெகு விரைவில் கற்றதை அறிந்த டெளன் சென்ட் அவரைத் தனது முகாமின் மொழியியல் ஆசிரியராக நியமித்தார். இதனால், ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் பைக், அர்க்கன் சஸ் எனுமிடத்திலிருந்த மொழியியல் கல்லூரிக்குச் சென்றுவந்தார். அதே சமயம், அவர் தனது மொழியியல் கல்வியையும் தொடர்ந்திட்டார்.
1941இல் மறுபடியுமாக மெக்சிகோவுக்குச் சென்ற இவர், பத்து வருடங்களின் பின் 1951இல் மிக்ஸ்டெக் கோத்திர மக்களது மொழிகள் ஒன்றில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். மெக்சிகோவிலுள்ள இன்னுமொரு கோத்திரமான செல்டால் எனும் கோத்திர மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலைகள் பில்பென்ட்லி என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கும் மெக்சிகோவில் இன்னுமொரு கோத்திரத்தினர் மத்தியில் பணியாற்றிய மரியானா என்பவளுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எனினும், அவ்வருடம் ஆகஸ்டு மாதம் பில் மரணமடைந்தார். அதன் பின்னர் பில்லினால் ஆரம்பிக்கப்பட்ட பணியைத் தொடர்ந்து செய்வதற்காகத் தன்னை அர்ப்பணித்த மரியானா, செல்டால் கோத்திர மக்கள் மத்தியில் ஊழியம் செய்யத் தொடங்கினாள். பல உபத்திரவங்களுக்கு மத்தியிலும் சுவிசேஷத்தை அறிவித்த மரியானாவினுடைய முயற்சியினால் 1000-த்திற்கும் அதிகமான செல்டால் கோத்திர மக்கள் கிறிஸ்தவர்களாகியிருந்தனர். மரியானா செல்டால் கோத்திர மொழியில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு 1956 இல் வெளிவந்தது. 1957 இல், மரியானா இன்னுமொரு கோத்திர மக்களது மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிக்கச் சென்றாள்.
8 வருடங்களின் பின் மரியானா, பகாயொன் எனும் அக்கோத்திர மக்களது மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டாள். தனிமை, வியாதி, எதிர்ப்புகள், செளகரியமற்ற வாழ்விடம் என்பவற்றுக்கு மத்தியில், இரு மெக்சிகோ கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்த மரியானா, அதன்பின் கொலம்பியாவிலுள்ள கோத்திர மொன்றின் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்தாள். மரியானாவைப் போல இன்னும் பல வைக் கிளிப் முகாம் மிஷனரிகள் மெக்சிகோ மக்கள் மத்தியில் ஊழியம் செய்துள்ளனர். 1970வரை, மெக்சிகோவிலிருக்கும் 90 கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றில் 8 மொழிகளில் புதிய ஏற்பாடு முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள பலதரப்பட்ட கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாகிய வைக்கிளிப் முகாமினது பணி இன்று மத்திய அமெரிக்காவுக்கும் அப்பால் முழு உலகுக்கும் சென்றுள்ளது. இன்று பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள வைக்கிளிப் முகாம், வேதாகம மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வேறு நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறது. 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதக் கணிப்பீட்டின்படி, வைக்கிளிப் முகாமைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் மொத்தம் 376 உலக மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துள்ளதோடு, தற்சமயம் 50 நாடுகளின் 943 கோத்திர மக்களது மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதை அறிகின்றோம். இதன்படி, வைக்கிளிப் முகாம் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மொத்தம் 1319 மொழிகளில் தேவ வார்த்தையை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென் அமெரிக்க மொழிகளில் வேதாகமம்
தென் அமெரிக்காவில் கொலம் பியா, வெனிசூலா, பொலிவியா, சிலி, பெரூ, அர்ஜன்டீனா, பிரேசில், உருகுவே, பராகுவே, போக்லன்ட், ஈக்குவெடோ எனும் நாடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவைப் போலவே இங்கும் பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். வைக்கிளிப் முகாமைச் சேர்ந்த மிஷெனரிகள் இந்நாடுகளில் பலவற்றுக்குச் சென்று, அங்குள்ள மொழிகளைக் கற்று அம்மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளுக்குச் சென்ற வைக்கிளிப் வேதாகம மொழி பெயர்ப்பாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ரேச்சல் செய்ன்ட் எனும் பெண்மணியாவார்.
வேதாகம மொழிபெயர்ப்பிலும் மிஷெனரிப் பணியிலும் இருந்த ஆர்வம் காரணமாக 1948இல் அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமா எனுமிடத்திலிருந்த மொழியியல் கல்லூரியில் பயின்ற பின்னர் வைக் கிளிப் முகாமில் சேர்ந்த ரேச்சல், ஆரம்பத்தில் பெரூ நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் ஊழியம் செய்தாள். பின்னர் 1955 இல் ஈக்கு வெடோ எனும் நாட்டுக்குச் சென்று அங்குள்ள கோத்திரங்களில் ஒன்றான ஒளக்கா இனரது மொழியைக் கற்கத் தொடங்கினாள். அக்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரேச்சலுக்கு அவர்களுடைய மொழியைக் கற்பித்தாள். இக்கோத்திரமே அந்நாட்டிலுள்ள எல்லா கோத்திரங்களையும் விட பயங்கரமானதும் கொடூரமானதுமான கோத்திரமாக இருந்தது. ரேச்சலின் சகோதரனும் இன்னும் நான்கு மிஷெனரிகளும் இக்கோத்திரத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் அக்கோத்திர மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக அவர்களுடைய மொழியை ரேச்சல் கற்றாள்.
இதன் பயனாக மாற்கு சுவிசேஷம் அக்கோத்திர மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆரம்பத்தில் மிஷனரிகளைக் கொன்றவர்களையும் ரேச்சல் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்துள்ளாள். 1970இல் ஈக்கு வெடோ நாட்டின் ஏழு கோத்திர மக்கள் மத்தியில் வைக்கிளிப் முகாம் மிஷெனரிகள் பணியாற்றினர். மாற்கு சுவிசேஷம் அந்நாட்டின் நான்கு கோத்திர மக்களது மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.
(தொடரும்)