ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2015)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இக்கல்வியாண்டில் புதிதாக பள்ளிக்கு செல்லும் பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காகவும், மேல்நிலைக் கல்வியை முடித்து கல்லூரிகளுக்கு செல்ல உள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். மேற்படிப்புக்கு காத்திருக்கும் பிள்ளைகள் சரியான பாடங்களை தேர்வுசெய்து நல்ல கல்லூரியில் சேர்வதற்கான அனுகூலங்கள் கிடைத்து, பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்கிறோம். அதுபோல வேலைக்கு காத்திருக்கிற பிள்ளைகள் யாவரும் தக்க சமயத்தில் நிரந்தரப் பணிகளைப் பெற்று கர்த்ர் நாமம் மகிமைப்பட கர்த்தர்தாமே கிருபைகளைத் தந்து அவர்களை வழிநடத்துவதற்கும் ஜெபித்து வருகிறோம். ‘குறித்த காலத்தில்’ கர்த்தர் யாவற்றையும் நேர்த்தியாய் செய்வார்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு ஆலோசனையாகவும் வழிகாட்டுதலாகவும் இருப்பதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். புதிய சந்தாதாரர்களை அநேகர் அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். நன்றி கூறுகிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வருடத்தில் சத்தியவசன நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவர உதவும் படி அன்பாய் கேட்கிறோம். உங்கள் ஜெபக்குறிப்புகளையும் மன பாரங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உங்கள் தேவைகளுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இவ்விதழில் சகோதரி ஜெப தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்கள் ஜூலை மாதத்திலும், டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தியானங்கள் ஆகஸ்டு மாதத்திலும் பிரசுரமாகியுள்ளது. இத் தியானங்கள் நம்மை கிறிஸ்துவின் அன்பில் ஊன்றக் கட்டுகிறதாயும், பெலனடைய செய்கிறதாயுமுள்ளது. இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்