அதிகாலையின் கிருபை!
அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2015)
– Dr.உட்ரோ குரோல்
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய
இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும்
புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” (புலம். 3:22,23).
ஆதிகாலத்து கிழக்கத்திய நாடு களின் இலக்கியங்களில் புலம்பல் புத்தகம் மிகவும் சோகமான ஒன்றாகும். இதிலுள்ள ஐந்து அதிகாரங்களும் ஒருவரது மரணத்தின்போது பாடப்படும் ஓர் இரங்கற்பா போன்றன. ஒவ்வொரு பாடலும் விவரிக்க முடியாத சோகத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அவை கண்ணீரின் காவியம், சோக கீதங்களின் தொகுப்பு, வேதனையின் ஓலங்கள். இப்புத்தகத்தை வேதாகமத்தின் ‘அழுகையின் சுவர்’ என்று அழைக்கலாம். ஆம், அது உண்மையே. அதிகாரத்துக்கு அதிகாரம் சோகங்கள் அதிகரித்து கண்ணீர் பெருகுகின்றது. ஆனால் அந்த சோகத்தின் நடுவிலும் ஒரு நம்பிக்கை வெளிப்படுகிறது. இதுவே இந்த இதழின் தியானமாகும்.
கொடூரமான விரக்தியின் உச்சியிலும் எரேமியா தீர்க்கதரிசி தேவ கிருபையின் வல்லமையையும் ஆழத்தையும் பற்றிய சாட்சியை விளக்குகிறார். புலம்பல் பாட்டில் காணப்படும் இத்துன்ப கார்மேகங்கள் என்றும் நிலையானவை அல்ல. இருண்ட மேகத்தின் நடுவில் ஒரு சிறிய இடைவெளியில் பிரகாசமான சூரியவெளிச்சம் ஊடுருவி வருவதைப் போல, இருண்ட ஒரு காவல றையில் புலம்பல் 3:22,23 ஆம் பகுதி யானது நம்பிக்கையின் கீற்றாகக் கடந்து வருகிறது. எருசலேமின் அழிவின் மத்தியிலும் தேவனுடைய முடிவில்லாத கிருபையை எரேமியா தீர்க்கதரிசி தெளிவாகக் காண்கிறார்.
தேவனுடைய கிருபையை நாம் உரிமை கோரமுடியாது. எனினும் அவைகள் முடிவற்றவைகள். தேவனை கோபமூட்டும் அநேக காரியங்களை நாம் செய்திருந்தாலும் அவர் தம்முடைய கிருபையை நம்மை விட்டு விலக்கவில்லை. அவருடைய கிருபையை தகுதியற்றவர்களாய் பலவேளைகளில் நாம் பெற்றிருக்கிறோம்; பலவேளைகளில் நன்றியற்றவர்களாய் அலட்சியமும் செய்திருக்கிறோம். தேவனுடைய கிருபையை நாம் காணமுடியாவிட்டாலும் அவை மறையவில்லை. ஆதவனின் கதிர்கள் காலையிலிருந்து மாலை வரை மாறுவது போல் தேவனுடைய கிருபைகளும் மாறலாம்; ஆனால் அவை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. தேவனுடைய சிட்சையும் கிருபையின் ஓர் உருவமே. அவர் நம்மை சிட்சியாமல் இருக்கும் வேளையைவிட சிட்சிக்கும்பொழுது அதிக கிருபையை அவர் நமக்கு அளிக்கிறார். புலம்பல் 3:22,23 இல் காணப்படும் நம்பிக்கையின் ஒளியில் தேவனுடைய கிருபை முடிந்துபோவதில்லை; அது காலை தோறும் புதியவைகளாய் இருக்கின்றன. தேவனுடைய உண்மைக்கு அவை சாட்சிகளாக நிற்கின்றன.
மனிதவாழ்வில் அநேக புதுமைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் புதிய கடினமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளன. நம்முடைய புதிய பரபரப்பான சவால்களைச் சந்திக்க தேவனுடைய கிருபை நம்முடன் இருக்கிறது. ஆனால் அவருடைய செயல்பாடுகள் மாறுபடுகின்றன. நம்முடைய தினசரி தேவைகளுக்கு ஏற்ப அவருடைய கிருபை மாற்றமடைகின்றன. அவருடைய கிருபைகள் கற்களை உடைக்கும் உளிகளல்ல; அவை இன்றியமையாத உயிரூட்டக்கூடியன. மோசே, எரேமியா மற்றும் யோவான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பழங்காலக் கிருபைகளை நாம் ஆராய்ந்து பார்க்க அவசியமில்லை. ஏனெனில் நமக்கு தேவன் அருளுகின்ற கிருபையானது நாள்தோறும் புதியதாயும் உயிருள்ள தாயும் உள்ளது. தேவன் தம்முடைய உலகத்தை வசந்த காலத்தில் புதுப்பிப்பதுபோல, தம்முடைய பிள்ளைகளுக்கு தமது கிருபையையும் ஒவ்வொரு நாள் காலையிலும் புதுப்பித்து புத்துணர்ச்சியூட்டுகிறார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இயற்கையானது தேவனைப் புகழ்ந்து போற்றுகின்றது. சூரியன் உதிக்கின்றது, பறவைகள் பாடுகின்றன, மரங்கள் தென்றல் காற்றை அளிக்கின்றன. மனிதர்களாகிய நாம் மாத்திரம் நன்றியற்றவர்களாய் அமைதியாக இருக்கலாமா? கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய கிருபைகளுக்காக நன்றி சொல்ல வேண்டுமே! அவருடைய கிருபைகள் புதுப்பிக்கப்படுவதை ஒத்துக்கொள்ள வேண்டுமே! இயற்கை மட்டுமே சிருஷ்டிகரைத் தொழுது கொள்ள நாம் அனுமதிக்கலாமா?
நம்முடைய காலங்கள் எவ்வளவுதான் இருளாயிருந்தாலும், “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” என்று எரேமியாவுடன் சேர்ந்து சொல்லுவோம் (புலம்பல் 3:22,23).
அதிகாலைப் பாடல்:
தம் கிருபை பெரிதல்லோ!
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே;
இன்னும் தேவை கிருபை தாருமே!