ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2015)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அநேகருக்கு அதிக ஆசீர்வாதமாக இருப்பதை இருப்பதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். மேலும் பல புதிய சந்தாதாரர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அன்புடன் வேண்டுகிறோம். இவ்வூழியங்களின் மூலம் தேவன் தந்த ஆசீர்வாதங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வருடத்தில் இந்த உன்னதமான பணிகளை ஜெபத்தோடு தாங்கி வந்த ஒவ்வொருவருக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். உங்கள் ஜெபக்குறிப்புகளையும் மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன ஊழியர் சகோ.எபநேசர் அவர்கள் ஆகஸ்டு 1ஆம் தேதி கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். அவர்களது குடும்பத்திற்காக யாவரும் தங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள் அனைவருக்கும் வருகிற மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய ‘விருத்தாப்பியம்’ என்ற விசேஷித்த புத்தக வெளியீட்டை அனுப்ப ஜெபத்தோடு முயற்சிக்கிறோம். இதற்காகவும் தாங்கள் ஜெபியுங்கள்.

இவ்விதழில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் எழுதிய தியானங்கள் செப்டம்பர் மாதத்திலும், அக்டோபர் மாதத்திற்கு பல்வேறு தலைப்புகளில் தியானங்களை தொகுத்தும் அளித்துள்ளோம். இத் தியானங்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் நம்மைப் பெலப்படுத்தவும், நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்கிறதாயுமிருக்கிறது. இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்