தனிமையிலும் உறவாகும் தேவன்

தியானம்: அக்டோபர் 8 வியாழன்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:6-9

“இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்கு போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்” (யோவான் 16:32).

சிலசமயங்களில் பெற்றோர், சகோதரர், உற்றார், உறவினர்கள் என்று யாவரும் நம்மைச் சுற்றியிருப்பினும், தனிமை உணர்வு நம்மைத் தாக்குவதை நாம் மறுக்கமுடியாது. கிறிஸ்தவ ஜீவியத்தில் தனிமை நமக்கு வேதனை தருகின்ற நேரம் அல்ல; அது ஆசீர்வாதமான நேரமாகவே இருக்கிறது. ஏனெனில், நமது தனிமையில் கிறிஸ்து நம்மோடுகூட இருக்கிறார். அந்த நம்பிக்கை நமக்கு இராவிட்டால், சாத்தான் நமது சிந்தனையை ஆட்கொண்டு, தேவ சித்தத்தின் பாதையிலிருந்து நம்மை விலக்கிப் போடுவான்.

தகப்பனால் அதிகமாக நேசிக்கப்பட்ட மகன், சகோதரரின் சதியால் பிரிக்கப்பட்டு, அந்நிய நாட்டிற்கு விற்கப்பட்டு, அங்கேயும் அநியாயமாக சிறையில் இருக்கவேண்டியதிருந்தது. சிறையில் இருந்தாலும், தனிமை உணர்வு தன்னை ஆட்கொள்ள இடமளிக்காததால் கர்த்தருடைய பிரசன்னம் அவனது உள்ளத்தை நிரப்பியிருந்தது. அதனால், அநேக தேவ இரகசியங்களைத் தேவனிடத்திலிருந்து கற்றறிந்தான். இறுதியாக, தன் குடும்பத்திற்கும், மற்றும் அனைவருக்கும் ஆசீர்வாதமான பாத்திரமாக மாறினான். அவன்தான் யோசேப்பு. தாவீதின் வாழ்விலும் பலவேளைகளில் தனிமை அவரை ஆட் கொண்டது. ஆனாலும், தாவீது சோர்ந்துபோகவில்லை. தனிமை வேளைகளில் தேவபிரசன்னத்தினால் தன் இருதயத்தை நிரப்பி தேவனோடு வாழ்ந்தார் தாவீது. இயேசு உலகில் வாழ்ந்தபோது தாமே தனிமையையே நாடிச் சென்று ஜெபத்தில் தன் நேரத்தைச் செலவிட்டு, தன் பிதாவின் பிரசன்னத்தைப்பெற்று, வல்லமையோடு தேவசித்தத்தை நிறைவேற்றினார்.

ஆம்! நமது தனிமை ஆண்டவருக்கு மறைவானது அல்ல. நோக்கமின்றி அவர் நமக்குத் தனிமையை அனுமதிக்கமாட்டார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். தனிமை என்று உணரும்போது, சோர்வுக்கு இடமளிக்காமல், ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் நேரத்தைச் செலவிடலாமே. நம்மை நடத்தும் தேவனோடு நாம் உள்ளத்திலே உறவாடலாமே. தனிமை உணர்வு கொஞ்சமாக நம்மைவிட்டு அகலும்போது, தேவபிரசன்னமும், வழிநடத்துதலும், தேவ இரகசியங்களும் நமக்குள்ளே அற்புதமாக வெளிப்படும். தனிமையில் உழலும் தேவபிள்ளையே, “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா.58:11) இது தேவவாக்கு.

தனிமை என்று நாம் கருதுவது எதனை? அந்த வறட்சியின்போது நாம் யாரை அல்லது எதனை இதுவரை நாடிப் போயிருக்கிறோம்? அதனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் என்ன?