இன்னமும் தாமதம் ஏன்?
தியானம்: அக்டோபர் 19 திங்கள்; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 22:8-16
“இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன?” (அப்போஸ்தலர் 22:16).
கிறிஸ்துவின் பிள்ளைகளைத் துன்பப்படுத்தி, இரட்சிப்பின் செய்தி அறிவிக்கப்படாதபடி தடை ஏற்படுத்தத் தீவிரித்தவன் சவுல். இந்த சவுலையே, கர்த்தர் சந்தித்தார். தான் துன்பப்படுத்துகிறவர் யார் என்றும், அவர் எதற்காகத் தன்னைத் தெரிந்துகொண்டார் என்பதையும் கேட்ட சவுல், முகங்குப்புற விழுந்து தன்னை ஒப்புக்கொடுத்தார். தேவனுக்குச் சாட்சியாக விளங்கப்போகின்ற இந்த சவுலிடம் வந்த அனனியா, “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் நீங்கி, கழுவப்பட நீ இன்னமும் தாமதிக்கிறது என்ன?” என்று கேட்டான்.
பின்னர் பவுல் என்று அழைக்கப்பட்ட இந்த சவுல், முன்னமே தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர். தேவனுடைய திருச்சித்தத்தை அறிந்து, அவரைத் தரிசித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, தேவனுக்கே சாட்சியாக இருக்கும்படிக்கு தேவன் அவரை அழைத்திருந்தார். அப்படிப்பட்ட மேன்மையான அழைப்பைப் பெற்றிருந்தாலும் அவர் செய்யவேண்டியச் சில காரியங்கள் இருந்தன. தேவன் அழைத்தார் என்ற நிச்சயத்தை அனனியா மூலம் அறிந்தவுடன் அவர் அவசரப்பட்டு எழுந்துபோக முடியாது. அவர் தானே சிலவற்றை நிறைவேற்ற வேண்டியதிருந்தது. முதலாவது பவுல் தனது பாவங்கள்போகக் கழுவப்படவேண்டும். ஆண்டவர் அவரை இரட்சித்ததன் மேன்மையான ஒரு அடையாளத்தை அவர் முதலில் தரித்துக்கொள்ளவேண்டும். இரட்சிப்பின் செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதற்கு முன்னர் அந்த இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் பெற்றுக்கொண்டு சில நியமங்களை நிறைவேற்றவேண்டும்.
ஆண்டவராகிய இயேசு தமது ஊழியத்தை ஆரம்பிக்க முப்பது வருடங்கள் காத்திருந்தார் என்றும், தமது ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்னர் தேவ நீதியை நிறைவேற்றவேண்டிய பொறுப்பில் தவறாதவராக, தாமே தம்மை ஞானஸ் நானத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்றும் வாசிக்கிறோம். ஆண்டவரே, ஒரு நியமப்படி ஒழுங்காக நடந்தாரென்றால் நமது காரியம் என்ன?
இப்படியிருக்க, இந்நாட்களில் ஊழியம் செய்யவேண்டுமென்று தீவிரிக்கும் சிலர், தாமே தமக்குள் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெறாதவர்களாகவும் தேவனுடைய சித்தத்திற்கும் நீதிக்கும் தம்மை ஒப்புவிக்காதவர்களாகவும் இருப்பது துக்கத்துக்குரியது. அதற்கு ஒரு காரணம், அவர்களுக்குள் இருக்கும் பயம். சமுதாயத்திற்கு பயந்து தேவனை முழுமனதோடு சேவிக்கப் பயம். இது தவறு. முதலாவது தேவகட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டும். நமக்கு மீட்பு வேண்டும். நம்முடைய பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் வேண்டும். அந்த நிச்சயத்தை, அந்த விடுதலையைப் பெற்றுக்கொள்ளாதவனால், அந்த மகிமையான விடுதலையைக் குறித்து அடுத்தவனுக்கு விளக்கமுடியாது. நாம் எப்படி?
கிறிஸ்தவ பின்னணியத்திலே பிறந்து வளர்ந்திருந்தாலும், பாவ மன்னிப்பின் நிச்சயம், மறுபிறப்பின் அனுபவத்தை நாம் பெற்றிருக்கிறோமா? பெற்றுக்கொண்ட நிச்சயமாவது இன்றும் இருக்கிறதா?