உள்ளத்தில் உண்மை
தியானம்: அக்டோபர் 21 புதன்; வேத வாசிப்பு: சங்கீதம் 89:1-52
“…உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்” (ஆதியாகமம் 42:16).
தாவீது ராஜாவைப்போல உண்மையுள்ளவன் இல்லை (1சாமு.22:14) என்று கூறப்பட்டுள்ளது. தாவீது உண்மையுள்ளவராய் இருந்ததற்குக் காரணம், அவர்தான் விசுவாசிக்கும் “கர்த்தர், உண்மையும் நீதியும் உள்ளவர்” என்று அறிந்திருந்தார். ஆகவேதான், “இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்” (சங்.51:6) என்று ஜெபித்தார். அப்படியே மன உண்மையோடு துர்க்குணத்திற்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டார்.
உண்மையுள்ள தேவனைத் தெய்வமாகக் கொண்டிருக்கின்ற நாம், உண்மையாயிருக்கவேண்டியது எத்தனை அவசியம்! “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவா.4:24). நம்மிடத்தில் சரி பிழைகள் இருக்கலாம். ஆனால், அவற்றையும் அறிக்கை செய்துவிடுகின்ற உண்மையான இருதயம் நம்மிடம் உண்டா? உண்மையான உள்ளத்தோடு, தேவனைத் தொழுதுகொள்ளும்போது, தேவன் அவனை உற்றுநோக்குகிறார். அவனை நிறைவான ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார். இக்கட்டுக்கள் எல்லாவற்றிலுமிருந்து காத்துக்கொள்ளுகிறார். உண்மையாகவே தன்னை நோக்கிக் கூப்பிடும் தன் பிள்ளைகளுக்கு உத்தரவு அருளிச் செய்கிறார். மாத்திரமல்ல, உண்மையுள்ளவனை ஏற்றவேளையில் அவனது சத்துருக்களுக்கு மேலாக அவர் உயர்த்துகிறார்.
இன்று பலவிதமான இக்கட்டுகளில் அகப்பட்டுத் தவித்திருக்கும் தேவ பிள்ளையே, “நான் தேவனை நேசிக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் நான் ஆசீர்வதிக்கப்படவில்லையே” என்கிறாயா?; கஷ்டங்கள் இன்னும் தீரவில்லை, கூப்பிடுதலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, வேலை ஸ்தலத்தில் இன்னும் ஒரு உயர்வுமில்லை என்றெல்லாம் ஏங்குபவர்கள் பலர். தேவன் உன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று சொல்லும் நீ, முதலில், உன் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவனாக இருக்கிறாயா என்பதை இன்று சிந்தித்துப்பார். நீ உன் வெளிவாழ்விலே நல்ல கிறிஸ்தவன்போல ஜீவிக்கலாம். ஆனால் உள்ளம் உண்மையுள்ளதா? ஏனெனில் தேவன் இருதயத்தைக் காண்கிறார்; உன் முகத்தை அல்ல. நமது பேச்சிலே நாம் காட்டுகின்ற உண்மைத்துவம் நமது வாழ்விலும் வெளிப்படவேண்டும். ஆகவே, நாம் எந்தெந்த இடத்தில் உண்மையற்றவர்களாய் இருக்கிறோமோ, அவற்றையெல்லாம் உண்மையோடு அறிக்கை செய்து மனந்திரும்புவோமாக. உண்மையுள்ள தேவன் நமது உள்ளத்தின் உண்மைத்துவத்தைக் கண்டு நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
நாவில் ஒன்றும் வாழ்வில் ஒன்றுமாக உண்மைத்துவம் அற்று வாழ்ந்த நாட்களை நினைவுகூருவோம். உண்மையாயிருந்து கஷ்டங்கள் அனுபவிப்பதற்கும், உண்மையற்றவனாய் இருந்து சந்தோஷமாயிருப்பதற்கும் வேறுபாடு உண்டா?