ஆசிரியரிடமிருந்து…
(நவம்பர்-டிசம்பர் 2015)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்படியாக கிருபைசெய்கிற அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்வருடத்தின் இறுதிவரைக்கும் வழிநடத்தி வந்த நம் தேவனைத் துதிக்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலனடையவும் உயிர் மீட்சி அடையவும் தேவன் கிருபை செய்தபடியால் அவரை ஸ்தோத்திரிக்கிறோம். இந்த ஆண்டை மனநிறைவோடும் ஆசீர்வாதத்தோடும் முடிக்க உங்கள் அனைவருக்கும் கர்த்தர் கிருபை அருளும்படி வேண்டுகிறோம். “..தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2கொரி.1:20).
இவ்வூழியத்தைத் தாங்கும் விசுவாசப்பங்காளர்களுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் விருத்தாப்பியம் என்ற புத்தக வெளியீட்டை அனுப்பிவைப்போம். ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு தமிழன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தற்போது ‘புது யுகம்’ சேனலில் ஞாயிறு காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இம்மாற்றத்தை பங்காளர்களும் நேயர்களும் கருத்தில் கொள்ள அன்பாய் கேட்கிறோம். இவ்வருடத்தில் வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்தோர் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்கவும். அவர்கள் பெயரை தியானப்புத்தகத்தில் பிரசுரிப்போம்.
இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள், ‘கிறிஸ்துவுக்குள் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கும் பாக்கியங்களை’ மையமாக வைத்து நவம்பர் மாத தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாத தியானங்களை சகோதரி தர்சினி சேவியர் அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட இருக்கும் நாம் மனதில் கொள்ளவேண்டிய சத்தியங்களை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்வை வளமாக்கவும் சீராக்கவும் வேண்டுதல் செய்கிறோம். நீங்கள் பெற்ற அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள மறவாதீர்கள். உங்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்