கிறிஸ்மஸ் வாழ்த்துமடல்

தியானம்: டிசம்பர் 15 செவ்வாய்; வேத வாசிப்பு: 3யோவான் 1-14

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3யோவான் 2).

கிறிஸ்துமஸ் காலங்களில் தபால் பார்சல்கள் எல்லாம் தேங்கிக் கிடப்பதாக நாங்கள் செய்திகளில் கேள்விப்படுவதுண்டு. விநியோகம் செய்யமுடியாத அளவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துமடல்கள் குவிந்து கிடக்கும் காலம் இது. மே மாதத்தில் ஒருநாள் எனது சிநேகிதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் என்னை அழைத்து, ‘கடந்த ஆண்டு நீங்கள் அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்துமடலை இன்றுதான் பெற்றுக்கொண்டேன்’ என்றார். இது என்னைச் சிந்திக்க வைத்தது. மே மாதத்தில் கிறிஸ்துமஸை நினைவுகூர முடியாதா! பாவமான இவ்வுலகில் வாழ்ந்து, பாவத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும், நம்மை மீட்கும்படிக்கு இப் பாவ உலகில் இயேசு வந்துதித்த நாளை அனுதினமும் நினைத்தவர்களாய் வாழுவதும், அதை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதும் முக்கியமான ஒன்றல்லவா.

கடிதங்களும், வாழ்த்துமடல்களும், செய்திகளும், நமது உள்ளத்தின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு மாத்திரமல்ல, ஆண்டவருக்குள்ளாக ஏனையோரைப் பெலப்படுத்தக்கூடிய வல்லமை நிறைந்த ஒரு கருவியாகவும் இருக்கின்றன. யோவான் தனது மூன்றாம் நிருபத்தில் அழகான ஒரு கடிதத்தை பிரியமுள்ள சகோதரன் காயுவுக்கு எழுதுகிறார். இக்கடிதமானது ஆண்டவருக்குள்ளாக இன்னமும் காயுவைப் பெலப்படுத்துகிறதாக அமைகிறது. “நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன் உண்மைத்துவத்தைக் குறித்து சகோதரர் வந்து சாட்சி கொடுத்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். உன் ஆத்துமா சுகமாக வாழுகிறது. அதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்திருக்க நான் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.

கிறிஸ்துமஸ் காலங்களில் சோர்ந்துபோய் இருப்பவர்களையும், ஆவிக்குரிய வாழ்வில் உயிரூட்டமில்லாமல் செத்துப்போய் இருப்பவர்களையும், கிறிஸ்துமஸின் அர்த்தம் புரியாமல் ஏனோதானோ என்று ஜீவிப்பவர்களையும் தொடும்வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாம் கிறிஸ்துமஸ் வாழ்த்துமடல்களை அனுப்ப எத்தனிக்கவேண்டும். அதையல்லாமல் கடமைக்காக கட்டுக்கட்டாக வாழ்த்து மடல்களை வாங்கி, எந்தவித நோக்கமும் இன்றி அனுப்புவதில் என்ன பயன்? அகதிகளாய் இருப்போர், ஏழ்மையில் இருப்போர், தேவனை அறியாமல் இருப்போர் மத்தியில் செயலாற்றவும் அன்பைக்காட்டவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். அவர்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிந்துகொள்ள நம்முடைய வாழ்வே சாட்சியாக முன்மாதிரியாக வேண்டும்.

இம்முறை நாம் யார் யாருக்கு வாழ்த்துமடல் அனுப்பப்போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்துகொள்வோம். இந்த வாழ்த்துமடல் யார் யாருக்கு என்பது மாத்திரமல்ல, அது தாங்கிச் செல்லப்போகும் செய்தி என்னவென்பதிலும் கவனம் செலுத்துவோமா?