ஆசிரியரிடமிருந்து…
(ஜனவரி-பிப்ரவரி 2016)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற” தேவாதி தேவனின் இனிய நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இன்னுமொரு புதிய ஆண்டிற்குள் கர்த்தரின் கிருபையினாலே பிரவேசித்திருக்கிறோம். கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும். கடந்த நாட்களில் திருவெள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தினால் நமது விசுவாச பங்காளர்களில் அநேகர் பாதிக்கப்பட்டிருப்பதை கேள்வியுற்று அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறோம். அவர்களது இழப்புகள் யாவும் சரிகட்டப்படவும், இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும் கர்த்தர் கிருபை செய்வார். அவர் உங்களை ஸ்திரப்படுத்தி தீமையினின்று விலக்கிக் காக்க தொடர்ந்து நாங்கள் ஜெபிக்கிறோம்.
2015 ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் இவ்வூழியத்திற்காக ஜெபித்து வந்தீர்கள். உதாரத்துவமான காணிக்கையால் தாங்கினீர்கள். யாவருக்கும் ஆண்டவரின் நாமத்தினாலே நன்றி கூறுகிறோம். தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் இவ்வாண்டில் புதுப்பித்துக்கொண்டு இவ்வூழியத்தைத் தாங்க அன்புடன் நினைவூட்டுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.
ஜனவரி மாதமும் பிப்ரவரி மாதம் 10 முதல் 29 வரையுள்ள தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். பிப்ரவரி 1-9 வரை தொகுக்கப்பட்ட தியானங்களை பிரசுரித்துள்ளோம். இத்தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம்.
பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்