தேவனுக்கு அர்ப்பணித்தல்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2016)
– Dr.உட்ரோ குரோல்

 வேதபகுதி:ஆதியாகமம் 32:22-32
“அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார்.
அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மைப் போகவிடேன் என்றான்” (ஆதி. 32:26).

யாக்கோபு மிகவும் இக்கட்டான சூழலில் தன்னுடைய இரண்டு மாபெரும் எதிரிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டார். அவருக்குப் பின்னாக பேராசைக்காரரான அவரது மாமனார் லாபான் துரத்திவர, முன்னே பழிவாங்கக் காத்திருக்கும் அவருடைய சகோதரன் ஏசா, இவ்விருவரிடமும் யாக்கோபுக்கு பேச்சு வார்த்தை கிடையாது. லாபானின் வீட்டைவிட்டு திருடனைப்போல வாக்குப்பண்ணின தேசத்துக்குக் கிளம்பி வந்தார். மிஸ்பாவில் இருவரும் பண்ணின உடன்படிக்கையை (ஆதி.31:49) லாபான் மதிப்பாரா என்ற நிச்சயம் அவருக்கு இல்லை. லாபானுக்கு பயப்படாவிட்டாலும் ஏசாவுக்கு அதிகமாக பயந்தார்.

தமது வாழ்வின் ஆரம்பகாலத்தில் தனது இரட்டை சகோதரனிடமிருந்து யாக்கோபு தந்திரமாக அவனுடைய சேஷ்டபுத்திரபாகத்தையும் தங்கள் தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான். இருபது ஆண்டுகள் கழித்துதான் தவறு இழைத்த தனது சகோதரனைச் சந்திக்க வருகிறான். இடைப்பட்ட இக்காலத்தில் ஏதோம் தேசத்திலே சேயீர் மலையில் ஏசா ஒரு பலசாலியாக மாறியிருந்தான். தனது சகோதரன் திரும்பிவிட்டான் என்பதைக் கேட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார்? யாக்கோபு தனது வருகையை தன் சகோதரனுக்கு ஆட்களிடம் சொல்லியனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து ஏசா நானூறு பேருடன் எதிர்கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். அதனைக் கேட்ட யாக்கோபு மிகவும் பயந்தார்.

அவருடைய அச்சம் அதிகரித்ததால் தேவனைத் தேட ஆரம்பித்தார். தேவனுடைய தயவுக்கு தான் பாத்திரனல்லன் என்றும் தனது சகோதரன் கைக்கு தன்னைத் தப்புவிக்கும்படியாகவும் விண்ணப்பம் பண்ணினார். ஜெபத்திற்குப் பின்னர் தனது சகோதரன் ஏசாவுக்கு தனது மந்தையிலிருந்து வெகுமானங்களை அனுப்பினார். இருட்டோடே தனது மனைவிகளையும் அவர்களது பதினோரு மகன்களையும் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து  அனுப்பி விட்டார்.

பின்னர் யாப்போக்கின் ஆற்றங்கரையில் யாக்கோபு தனியாக விடப்பட்டார். ஒருவேளை அது நடு இரவின் பின்பகுதியாக இருந்திருக்கலாம். அதிகமான இருட்டு. யாக்கோபு ஜெபிக்க ஆயத்தமான பொழுது அவ்விருட்டில் ஒருமனிதர் திடீரென்று அவரைத் தாக்கினார். தனது சகோதரனாகிய ஏசாவே தன்னைப் பழிவாங்குவதற்காகத் தாக்குகிறார் என்று யாக்கோபு முதலில் எண்ணியிருக்க வேண்டும். எனவே இருவரும் மல்யுத்தம் பண்ணினர். அதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று காணப்பட்டது. இருவரில் யார் வெற்றி பெறுவது என்று கண்டறிய முடியாத நிலை. இது அந்த இரவு முழுவதும் தொடர்ந்தது. பொழுது  விடியும் வேளையில் அவனை மேற் கொள்ளாததைக் கண்டு, அம்மனிதர் யாக்கோபுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச் சந்து சுளுக்கிற்று (ஆதி. 32:25). தன்னை எதிர்ப்பவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல; அவர் ஒரு தூதன் என்று யாக்கோபு கண்டு கொண்டார். தனது பலம் அல்ல, தேவனுடைய கிருபையே இந்த யுத்தத்தை இவ்வாறு நீட்டித்தது எனவும் அவர் அறிந்துகொண்டார்.

பல ஆண்டுகளாக யாக்கோபுடன் ஆண்டவர் இடைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் யாக்கோபோ திட்டமிட்டு தனது தந்திரங்களையும் ஏமாற்றுதலையும் உபயோகித்து தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தேடினார். அவர் இருமனதுள்ளவராய் இருந்தார். தேவனை நம்பி தன் வாழ்வை அவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனாலும் தனது மனித உபாயங்களிலேயே சார்ந்திருந்தார். அர்ப்பணிக்கப்படாத நோக்கங்களால் அதிருப்தியான வாழ்வே கிடைக்கும் என்பதை அவர் அறிந்து கொள்ளாத பரிதாபத்தில் இருந்தார்.

ஆனால் பொழுது விடியும் வேளையில் மல்யுத்தப் போட்டி முடிவுக்கு வந்தது. அவர் ஆண்டவரைப் போகவிடுமுன் பெத்தேலில் தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை  மீண்டும் நிலைநிறுத்த வாஞ்சித்தார். ஏசா தன்னை சந்திக்கும் முன்பாக தானே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாரிசு என்பதை அறிந்துகொள்வது அவருக்கு முக்கியமாகத் தோன்றியது. இந்த வேளையில்தானே அப் பரலோக மல்யுத்த வீரர், “உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடு மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்”. மல்யுத்த வீரருடன் யாக்கோபு நடத்திய போராட்டத்தில் சரீரப்பிரகாரமாக யாக்கோபு தோற்றாலும் ஆத்துமாவில் வெற்றியைப் பெற்றார். தனது சுயசித்தத்தை விட்டொழித்து, தனது சரீர பலத்தால் வெற்றியைப்பெற முடியாததை அறிந்துகொண்டார். வெறுமையான பாத்திரத்தில் மாத்திரமே தேவன் தமது ஆசீர்வாதத்தை ஊற்றுவார் என்பது உண்மையன்றோ?

பொழுது விடிந்ததும் யாக்கோபு தேவனை முகமுகமாய்த் தரிசித்த பெனியேலைக் கடந்து சென்றார். அவருடைய தொடைச்சந்து சுளுக்கியதால் அவர் நொண்டி நொண்டி நடந்தார். கர்த்தருடைய தூதனுடன் போரிட்டதற்கு நினைவாக அவர் வாழ்நாள் முழுவதும் அச்சரீர குறைவுடன் இருக்க வேண்டியதாயிற்று.

தேவனுடன் ஜெபத்தில் போராடும் பொழுது நம்முடைய வாழ்விலே சில அடையாளங்களை நாமும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடலாம். ஆனால் அது சிறந்ததே. தேவனைப் பிரியப்படுத்த நம்முடைய பலத்தில் நூறு ஆண்டுகள் நாம் போராடினாலும் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒருநாள் சிறந்ததாகும்.

“ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (பிலி.. 2:13)

அதிகாலைப் பாடல்:

அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவ ஆறாய் பெருகும்

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை