உறவுகளா?

தியானம்: பிப்ரவரி 16 செவ்வாய்; வேத வாசிப்பு: லூக்கா 14:25-27

“…ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து,…” (மத்தேயு 16: 24).

இந்த நிமிஷம் வரைக்கும் கிறிஸ்துவின் நாமத்துக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்று சற்று சிந்திப்போமா! ஆராதனைகள், நிகழ்ச்சிகள், பரிசுகள், பாடல்கள், ஜெபங்கள், காணிக்கைகள், கொடைகள், தசம பாகங்கள், இவற்றோடு மருத்துவமனை ஊழியம், வயோதிபர் ஊழியம், என எத்தனை! எல்லாமே நல்லது, தேவையானது. ஆனால் இவற்றையெல்லாம் செய்துவிட்டு நாம் மாத்திரம் ஒதுங்கிக்கொண்டால் பிரயோஜனம் என்ன? ஏனெனில் சகலவிதமான நற்கிரியைகளையும் யாரும் செய்யலாம். ஆனால் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது, நம்மைநாமே அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே.

இவ்வுலகிலே நமக்கிருக்கும் முக்கியமான பிணைப்பு, நமக்கிருக்கும் உறவுகள்தான். ஆண்டவரோ, தகப்பன், தாய், மனைவி, பிள்ளை, சகோதரர் யாவரையும் விட்டு தம்மைப் பின்பற்றி வரும்படி அழைக்கிறார். தாய், தகப்பனைக் கனம் பண்ணச் சொன்னவர் இவ்வாறு அழைக்கலாமா? கணவன்-மனைவி உறவை அமைத்தவர் இப்படிச் கூறலாமா? கர்ப்பத்தில் பிள்ளைகளைக்  கொடுக்கிறவர் இப்படிக் கேட்கலாமா? ஆனால் அவர் அப்படித்தான் அழைத்தார். அப்படியானால் ஆண்டவர் சொல்லுவது என்ன? இந்த உறவுகளை உனக்குக் கிருபையாய் கொடுத்த என்னைப் பார்க்கிலும், இந்த உறவுகள் உனக்கு முக்கியமா? இந்த உறவுகளைக் கட்டிக்காக்கும் உனக்கு ஞானமும் பெலமும் தந்த என்னைக் காட்டிலும், இந்த உறவுப் பிணைப்புகளா முக்கியம்? நான் உன்னோடு கொண்டுள்ள உறவின் எடுத்துக்காட்டுகளாக நானே கொடுத்த இந்த உறவுகளைப் பார்க்கிலும், நான் உனக்கு முக்கியமற்றுப் போய்விட்டேனா? நித்திய உறவுக்கென்று உன்னை ஏற்படுத்திய என்னைவிட, நாளை மாறிப்போகும் இந்த மனித உறவுகளா உனக்கு முக்கியம்?

தேவபிள்ளையே, உறவுகள் என்பது தேவனால் நமக்கு அருளப்பட்ட பெரிய ஈவு. அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்குண்டு. ஆனால் அந்த உறவைப் பார்க்கிலும் நமது ஆண்டவர் பெரியவர் அல்லவோ! உறவுகளை உதறித்தள்ளி எறிந்துவிட ஆண்டவர் நம்மை அழைக்கவில்லை. அந்த உறவுகளைக் கட்டிக்காக்க எடுக்கும் சகல தீர்மானங்களிலும் வழிகளிலும் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்பதையே நாம் மனதில் நிறுத்தவேண்டும். கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுக்கும்போது கட்டாயம் அங்கே நமக்கு சிலுவை காத்திருக்கும். எதிர்ப்புகளும் ஏளனங்களும் எதிர்பார்த்திருக்கும். ஆனால் அதுவும் ஒரு சுகமாக இருக்கும். நமது உறவுகளுக்கு நாம் கொடுத்திருக்கும் முன்னுரிமை எப்படிப்பட்டது?

சிந்தனைக்கு: நாம் கர்த்தரைச் சேவிப்பதில் நம்முடைய உறவுகள் ஏதாவது தடையாக இருக்கிறதா? அத் தடைகளையும் மீறி, வைராக்கியத்துடன் இயேசுவைப் பின்பற்றிச்செல்ல இன்று நம்மை ஒப்புவிப்போமா?