உனக்குரியவைகளா?

தியானம்: பிப்ரவரி 17 புதன்; வேத வாசிப்பு: மாற்கு 10:17-23

“….அவன் தன்னைத்தான் வெறுத்து…” மத்தேயு 16: 24

நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ஒருவன் இயேசுவிடம் வந்தான். தன் சிறுவயது முதல் கற்பனைகளைக் கவனமாகக் கைக்கொண்டு வந்தவன் அவன். நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கத் தனக்குத் தகுதி உண்டு என்று அவன் தன்னைக் குறித்து ஒருவித திருப்தி கொண்டிருந்தான். ஆனால் வழிதான் தெரியவில்லை. இயேசுவோ அவனிடம், சிலுவையை எடுத்துக்கொண்டு தமக்குப் பின்னே வரவேண்டும் எனக் கூறினார். அதைத் தவிர வேறுவழியே இல்லை. ஆனால் சிலுவை சுமப்பதற்கு அவனிடம் ஒரு தடை இருந்தது. அதை நீக்கும்வரைக்கும் அவனால் சிலுவையைச் சுமக்கமுடியாது என்பதை ஆண்டவர் சுட்டிக்காட்டினார். அந்தத் தடை என்ன? அவனுக்கு இருந்த ஐசுவரியமே! அவன் அதிக செல்வந்தனாக இருந்ததால் துக்கத்தோடு திரும்பிப் போய்விட்டான்.

அவனுக்கு இருந்த தடை அவனுடைய பணம். இன்று நமக்கு இருக்கும் தடை என்ன? ஒருவேளை நாம் பணக்காரராக இல்லாமலிருக்கலாம். ஆனால் பணத்தேவை யாருக்குத்தான் இல்லை. இந்தப் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் என்ன பாடுபடுகிறோம். குடும்பத்தைவிட்டு, ஊரைவிட்டு, நாட்டைவிட்டே இந்த பணம், தன்னைத் தேடும்படி நம்மைத் துரத்துகிறது. அது தன்னையே நம்பும்படி நம்மை இழுத்துக்கொள்கிறது. நமது தேவைகளுக்காக பணம் என்னும் நிலை மாறி, பணத்துக்காக நாம் என்ற நிலை வந்துவிடுகிறது. இறுதியில் பணமே நம்மை ஆண்டுகொள்கிறது. அப்போது நமது நேரம், சுகம், உறவுகள், யாவையும் பணம் ஆட்கொள்கிறது. தேவன் பேரில் அல்லாமல், நம்மிடம் உள்ளவற்றிலே நம்பிக்கை நிலைத்துவிடுகிறது. அதன்பின் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, சிலுவை சுமப்பது எப்படி?

அந்த வாலிபனைப்போல நித்திய ஜீவனை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது. அதற்காக, நமக்கிருக்கும் யாவையும் விற்றுவிட்டு ஒன்றுமில்லாதவர்களாக இருக்கும்படி ஆண்டவர் அவனுக்கோ நமக்கோ கூறவில்லை. நமது வீடு, வாகனம், பட்டம், பதவி, பணம் எதுவானாலும், அவை நம் வாழ்வில் முக்கியம் வகிக்குமானால், அதுவே ஆண்டவருக்கும் நமக்கும் இடையில் தடையாகிவிடும். சிலுவை சுமப்பதற்கும் நமக்கும் சம்பந்தமும் இராது. ஏனெனில் சிலுவை என்பது தனக்கென எதையும் வாங்குவதல்ல; தன்னையே கொடுப்பதுதான் சிலுவை. தனக்கென்று சேர்ப்பதல்ல; தன்னையே செலவு செய்வது. இன்று நாம் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்? நமக்கிருக்கும் தடைகள் என்ன? பணமும் வசதிகளும் நமக்குத் தேவைதான். ஆனால் அவைதான் வாழ்வல்ல. கிறிஸ்துவினிமித்தம் எதையாவது விட்டுவிடவேண்டிய நிலை வந்தால், நாம் தயாராய் இருக்கிறோமா? சிந்திப்போம்!

சிந்தனைக்கு: இன்று நம்மை ஆளுகை செய்யும் காரியம் என்னவென்பதை உண்மைத்துவத்துடன் சிந்தித்து, அறிக்கை செய்து, அதைவிட்டு, இயேசுவண்டை சேருவோமா!