எனக்குரியதா? கிறிஸ்துவுக்குரியதா?

தியானம்: பிப்ரவரி 18 வியாழன்; வேத வாசிப்பு: பிலிப்பியர் 2: 19-24

“மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்“ (பிலிப்;. 2 : 21).

பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளை, நேரில் போய் விசாரிப்பதற்காக அவர்களிடம் அனுப்புவதற்கு தீமோத்தேயுவைத் தவிர பவுலுக்கு வேறு யாரும் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏனெனில் அநேகமானோர் தமக்குரியவைகளையே நாடித் தேடுகிறவர்களாக இருந்தனர். கிறிஸ்துவினிமித்தம் தன்னைக் கொடுக்கக்கூடியவனாக தீமோத்தேயு ஒருவனே காணப்பட்டான். இவன் ஒரு வாலிபன். பவுலோடுகூட ஊழியத்தில் முழுமூச்சாக ஈடுபட்டவன். வாலிபனாக இருந்தும் தன் வாலிப சந்தோஷங்களை அல்ல; கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளையும் கஷ்டங்களையும் பெரிதென்று நினைத்தவன். கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்துத் தனக்கு இருக்கும் மனநிலை அவனிடமும் இருப்பதை பவுல் கண்டார். மற்றவர்களும் விசுவாசிகள்தான். ஆனால் அவர்களோ தமக்காக மட்டும் வாழுகிறவர்களாய் இருந்தனர்.

“தன் சிலுவையை சுமந்துகொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்” என்றார் ஆண்டவர் (லூக்கா.14 : 27). இயேசு சிலுவை சுமந்தது எருசலேம் நகர் வீதியில் மட்டுமா? இல்லை. அவர் இந்த உலகில் வாழ்ந்த நாட்களில் தாம் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் சிலுவையைச் சுமந்தவராகவே வாழ்ந்தார். சிலுவைப்பலி ஒன்றே அவர் மனதை நிறைத்திருந்தது. பிசாசு அவருக்கு உலகத்தையே கொடுப்பதாகச் சொன்னபோதும், மக்கள் அவரை ராஜாவாக்க நினைத்தபோதும், அதிகாரிகளும் பிரதான ஆசாரியர்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தபோதும், தாம் சுமக்கவேண்டிய சிலுவையை அவர் மறந்து அவர்களுக்கு இணங்கியிருந்தாரானால் இன்று நாம் எங்கே இருந்திருப்போம்? கிறிஸ்து தமது பிதாவுக்கடுத்தவைகளையே தேடினார். இன்று நாமும் கிறிஸ்துவுக்கு ஏற்றவைகளையே நாடித்தேட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தம்மைப் பின்பற்றிவரத் தீர்மானிப்பவன் எவனும் தன் வாழ்வில் மிக அருமையானது என்று எண்ணிக்கொண்டிருப்பவற்றைக்கூட கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் பொருட்டுத் தள்ளிவிட ஆயத்தமாயிருக்க வேண்டும். உலக அதிகாரம், புகழ், வல்லமை, செல்வம் போன்ற இவைகளை இயேசுவைப் பின்பற்றுவதனால் பெறலாம். எனும் எண்ணத்துடன் பின்பற்றுதல் முற்றிலும் மாறானது என்பதையே சிலுவை சுமப்பதன் செய்திக்கூடாக ஆண்டவர் நமக்கு விளக்குகிறார். நாம் இன்று எதைத் தேடுகிறோம்? நமக்குத் தேவையானவற்றையா? கிறிஸ்துவுக்கு அடுத்தவைகளையா? சிலுவையைப்போல கடினமானதும் இல்லை! அதைப்போல இன்பமானதுமில்லை!

சிந்தனைக்கு: அருமையானவர்களே, இன்று நமக்கு இருக்கின்றவற்றை சற்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அவை எனக்குரியதா? அல்லது கிறிஸ்துவுக்குரியதா?