பூரண வாக்குறுதி

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: ஆதியாகமம் 32:22-32
ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்
பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்; அன்றைய தினத்தில்
மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள் (யோசுவா 6: 15).

உலகத்தில் சுதந்திரமாய் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்துகின்றன. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக முறையானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளையும் விளக்குவதற்கு கூட்டங்கள் போடவும் அதன்படி தங்கள் அலுவல்கள் நடத்தவும் வாய்ப்புகளைத் தருகிறது. பொதுவாக இத்தகைய கூட்டங்களில் அதிகமான உறுதி மொழிகளைத் தந்து வாக்காளரின் எண்ணங்களைக் கவருபவரே வெற்றியைப் பெறுகிறார். ஆனால் இவ்விதமான அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகள் பெரும்பாலும் அக்கூட்டத்திலேயே முடிந்து விடுகிறது என்பதனை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே வாக்காளர்களுக்கு தங்களுடைய வேட்பாளரைப் பற்றிய கரிசனை ஏற்படுவது இயல்பானதே. ஆனால் இவையனைத்துக்கும் மாறாக தேவனுடைய வாக்குகள் உள்ளன. ஒரு விசுவாசி அவைகளில் பூரண நம்பிக்கையை வைக்கலாம். தேவன் தாம் அருளிய தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மிகச் சரியாக பதிவும் செய்து வைக்கிறார்.

தேவன் தமது வாக்குறுதியை பூரணமாய் நிறைவேற்றுகிறார் என்பதற்கு இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தின் மீது பெற்ற வெற்றியை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இஸ்ரவேலருக்கு வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு முன்னர் யோசுவா, யோர்தானுக்கு அப்புறம் உள்ள எரிகோ பட்டணத்தை வேவு பார்ப்பதற்கு இரண்டு மனிதர்களை அனுப்பினார். அவர்கள் அப்பட்டணத்திற்குச் சென்று செய்திகளை சேகரிக்க ஏற்ற இடமான ஓரிடத்துக்கு வந்தனர். அது ராகாப் என்னும் வேசியின் வீடாகும்.

ராகாபின் வாழ்வு முறையை அந்த இஸ்ரவேல் மனிதர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் கர்த்தராகிய தேவன் ராகாபின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்திருந்தார். எரிகோவின் அரசர் அந்த இரு வேவுகாரர்களையும் பிடிக்க முயற்சித்த பொழுது, ராகாப் அவர்களை சணல் தட்டைகளுக்கு மறைத்து விட்டாள். யெகோவா தேவன் மீது தான் வைத்திருந்த விசுவாசத்தை, “.. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (யோசு.2:11). இந்த இரகசிய உளவாளிகளுக்கு ராகாப் உதவியதால், அந்த பட்டணத்தின் அழிவிலிருந்து அவளுக்கும் அவளது வீட்டாருக்கும் தேவன் இரட்சிப்பைக் கட்டளையிட்டார்.

இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு தேவன் கொடுத்த திட்டம் வித்தியாசமானது. ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு பட்டணத்தை அமைதியாய் ஒரு முறை ஆறு நாட்கள் சுற்றிவர வேண் டும். ஏழாம் நாளில் ஏழுதரம் சுற்றி வரவேண்டும். ஆசாரியர்கள் கொம்புகளினால் எக்காளங்களை ஊதும் நெடுந்தொனியாலும், ஜனங்களின் ஆர்ப்பரிப்பு தொனியாலும் எரிகோவின் மதில் விழும் என்பதே அது.

தேவன் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் மக்கள் செய்தனர். ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்; (யோசு. 6 :15) ஏழாம் நாளில் ஏழாம் முறை சுற்றி வந்தவுடன் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எரிகோவின் கோட்டை தரைமட்டமானது. இஸ்ரவேலின் சேனை பட்டணத்துக்குள் தடையின்றி புகுந்து ராகாபும் அவளது குடும்பத்தினரையும் தவிர அப்பட்டணத்தில் உள்ள அனைவரையும் சங்காரம் பண்ணினார்கள். அவர்கள் தேவனுக்கு வெளிப்படையான கிரியையினால் கீழ்ப்படிந்ததினால் ஒரேநாளில் தேவனுடைய இரு பெரிய வாக்குறுதிகள் நிறைவேறியதை மக்கள் கண்டனர். கானான் தேசத்தின் காவல் நுழைவாயிலாக இருந்த எரிகோ பட்டணம் தேவன் தந்த கட்டளையின்படியே முற்றிலும் அழிக்கப்பட்டது. அது போலவே தேவன் வாக்குப்பண்ணியபடி ராகாபும் அவளது குடும்பமும் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

எரிகோ பட்டணத்து வெற்றியில் நாம் மற்றொரு தேவனுடைய வாக்குறுதியைக் காணலாம். தேவன் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதை அவர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதை வெளிப்படுத்த யோசுவா அழிக்கப்பட்ட எரிகோவின் மதிலைக் கட்டுபவனுக்கு ஒரு சாபத்தை அளித்தார். வசனம் 26இல் யோசுவா “இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக் கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன்” என்று மக்களை எச்சரித்தார்.

இந்த சாபமும் ஆகாப் அரசரின் அரசாட்சி காலத்தில் (கி.மு. சுமார் 925ஆம் ஆண்டு) பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினபொழுது நிறைவேறிற்று. கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான் (1இரா.16:34). தேவன் தாம் வாக்குப்பண்ணியதைக் கட்டாயம் நிறைவேற்றுவார்.

ராகாபுக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பின் வாக்குறுதியிலும், ஈயேல் என்பவரின் அழிவிலும் தேவன் கூறி வாக்குறுதியை இலகுவாக நாம் கருதக்கூடாது. தேவன் சொன்னதை நிறைவேற்றியே தீருவார். நீங்கள் அதனை நம்பலாம். வாக்கு மாறாத தேவனுடைய வாக்குகள் அடங்கிய சத்திய வேதத்தை வாசித்து அதனை நமக்கு உரிமையாக்கிக் கொள்ளுவோம்.

அதிகாலைப்பாடல்:

ஐயமும் அச்சமும் என்னைப் புயலெனத் தாக்கும்போது
மாறாத தேவனுடைய வாக்குறுதிகளை நான் பற்றிடுவேன்;
ஜீவனுள்ள தேவவார்த்தைகளே என்றும் என் வாழ்வின்
அடிப்படை நம்பிக்கையாய்க் கொண்டு வாழ்வேன்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை