உடைக்கப்பட்ட உள்ளம்
தியானம்: மார்ச் 22 செவ்வாய்; வேத வாசிப்பு: லூக்கா 22:31-34, 54-62
‘…கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவு கூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்’ (லூக்கா 22;:61-62).
மூளையில் பதிவாகும் விஷயங்கள் இலகுவில் அழியாது. தெரியாததுபோல நாம் நடந்துகொண்டாலும், சில அடையாளங்கள் அவற்றை நினைவுபடுத்திவிடும். ‘அட! சீ! ஏன் இப்படி நடந்தேன்’ என்று நம் வாழ்வில் எத்தனைதரம் உள்ளம் உடைந்திருப்போம்!
சீஷர்கள் எல்லாரும் சிதறி ஓடிப்போக, தூரத்திலாவது பின்சென்று பிரதான ஆசாரியனுடைய வீட்டு முற்றம் வரைக்கும் போய், மற்றவர்களுடன் சேர்ந்து குளிர்காயும் வரைக்கும் பேதுருவுக்கிருந்த துணிச்சல், ஒரு வேலைக்காரியின் வார்த்தைக்கு ஆடிப்போனது எப்படி? ‘அவனை அறியேன்’ என்று மறுதலித்தது எப்படி? ‘காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றி வருவேன்’ என்றவனுக்கு இப்போ, தன் உயிர்மேல் ஆசை வந்ததா? ஒருதரத்திற்கு மூன்று தரமாக இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மறுதலிக்கவும், சேவல் கூவவும் சரியாயிருந்தது. ‘சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்’ என்று கர்த்தர் சொன்னது அப்பொழுதுதான் பேதுருவுக்கு நினைவுக்கு வந்தது; நினைவுக்கு வந்ததும் அவன் மனம் உடைந்து, மனங்கசந்து அழுதான். இனி எதுவும் செய்யமுடியாது. ‘ஐயோ, நானா, உம்மோடு சாவேன் என்று சொன்ன நானா’ என்று நொறுங்கியிருப்பான் பேதுரு.
ஆனால், அந்த உடைதல், நொறுங்குதல் வீணாய்ப் போகவில்லை. அந்த உடைந்த மனதைக் கர்த்தர் கண்டார்; இந்தப் பேதுருவிடம்தான் தமது ஆடுகளை மேய்க்கின்ற பெரிய பொறுப்பைக் கொடுத்தார். மாத்திரமல்ல, பெந்தெகொஸ்தே நாளிலே எல்லோர் முன்பாகவும் எழுந்து நின்று, ‘இயேசுவை நீங்களே பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையிலே ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்’ (அப்.2:23) என்று தைரியமாகப் பேசுமளவுக்கு பேதுருவுக்கு எங்கிருந்து துணிகரம் வந்தது? எல்லாவற்றையும் விட்டுவந்தது, இயேசுவை நோக்கி தண்ணீரில் நடந்தது, இவை பேதுருவுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள். ஆனால் இப்போ, அந்த பேதுரு செத்துப்போனான். முடிவிலே கர்த்தரின் நிமித்தம், சிலுவையிலே தலைகீழாக அறையப்பட தன்னை ஒப்புக்கொடுக்குமளவுக்கு உடைதல் அவனைப் புடமிட்டிருந்தது. அதனால்தான், ‘இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்’ (2 பேது.1:14) என்று எழுதிவைத்தார்.
‘உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்’ (1பேது. 1:7).
சிந்தனைக்கு: இன்று தேவனுடைய வார்த்தையே நமக்கு நினைப்பூட்டுதலாயிருக்கும்போது இன்னமும் மனம் உடையாமல் நாம் கடின இதயத்துடன் வாழுவது தகுமா?