துக்கப்படுத்தாதிருங்கள்!

தியானம்: ஏப்ரல் 8 வெள்ளி; வேத வாசிப்பு: எபேசியர் 4:25-32

“அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தாவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” (எபேசி. 4:30).

ஒருவர் விரும்பாத அல்லது வெறுக்கின்ற காரியத்தை நாம் அவருக்குச் செய்யும்போது நாம் அவரைத் துக்கப்படுத்துகின்றோம். அது போலவே பரிசுத்தாவியானவரின் குரலுக்கு நாம் செவிகொடுக்க மறுக்கும்போது அவரைத் துக்கப்படுத்துகிறோம். அலாரம் அடிக்கும்போது அதை நிறுத்தி எழும்பினால் சரி; மாறாக, சத்தத்தை நிறுத்திவிட்டுப் படுத்தால் ஒருபோதும் எழும்பவும் முடியாது; சமயத்துக்கு அந்த அலாரச் சத்தமே ஒரு தாலாட்டுப்போலாகிவிடும். அதுபோலவே, ஆவியானவரின் சத்தத்துக்கும் கீழ்ப்படியாதவர்களாய் அசட்டை பண்ணுகிறவர்களுக்கு அவரின் சத்தமும் நாளடைவில் பழகிப்போன அலாரச் சத்தம் போலாகிவிடும் அபாயம் உண்டு.

பல காரியங்களைச் செய்யவேண்டாம் என்று எபேசியருக்கு வலியுறுத்திய பவுல், ஆவியானவரைத் துக்கப்படுத்தவேண்டாம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். நாம் மீட்கப்பட்ட நாளிலேயே ஆவியானவர் நம்மைப் பொறுப்பெடுத்து, நமது மீட்பின் அடையாள முத்திரையானார். நமக்குத் துணையாக நம்மை வழிநடத்தும்படிக்குக் கொடுக்கப்பட்ட ஆவியானவரை நாம் ஒதுக்கி அவரது வழிநடத்துதலை அசட்டை பண்ணும்போது அவர் துக்கமடைகிறார். தேவவார்த்தைக்கு நாம் செவிகொடுக்க மறுக்கும்போதும் அவரைத் துக்கப்படுத்துகிறோம். ஆறுதலின் தேவனாக நமக்குள் வாசம்பண்ணும் ஆவியானவரே துக்கமடைந்தால், நாம் ஆறுதல் பெறுவது எப்படி?

நாம் பாவம் செய்யும்போது நமக்கு அது மகிழ்ச்சியைத் தரும். அதனாலேயே அதனை மீண்டும் மீண்டும் செய்யத் துடிக்கிறோம். அதேநேரம் அதனால் ஒருவரைத் துக்கப்படுத்துகிறோம் என்பதை நாம் சிந்திப்பது கிடையாது. நமக்காக, நமது மீட்புக்காக சகலவற்றையும் செய்துமுடித்த ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவராய் பரத்துக்கு ஏறிப்போனபோது, நம்மைத் தனியேவிடாமல் நம்மோடு எப்போதும் இருக்கும்படிக்கு தேவாவியானவராய் நம் மத்தியில் இறங்கிவந்தார். நம்மில் அன்புகூர்ந்து இத்தனையையும் நமக்காகச் செய்த ஆண்டவருக்காய் நாம் எதையுமே செய்யாமல், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அவரைத் துக்கப்படுத்துவது தகுமா? தேவாவியானவரை நாம் துக்கப்படுத்திய சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்து அதிலிருந்து மனந்திரும்புவோம். அவரோடு இணைந்து இசைந்து வாழுவோம். “எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே, இந்நாளில் உம் சித்தம்போல் நடத்திச் செல்லுமையா” என்று சொல்லி அவர் கரத்தில் நம்மை ஒப்புவித்து, அவரை நாம் மகிழ்விப்போமா!

சிந்தனைக்கு: நமது இன்பங்களா? நமது நிமித்தம் தேவாவியானவரின் மகிழ்ச்சியா? எதற்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கப்போகிறோம்?