பாவத்தை உணர்ந்திடு!

தியானம்: ஏப்ரல் 20 புதன்; வேத வாசிப்பு: ஏசாயா 6:1-10

“….நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்…” (ஏசாயா.6 : 5).

நாகரீகமும், விஞ்ஞானமும் வேகமாகப் பெருகிவரும் இக்கால கட்டத்தில், ‘பாவம்’ என்ற சொல் மறைந்து, பாவ உணர்வும் அற்றுப்போய், மக்கள் தங்கள் வாழ்வில் பாவத்தையே அப்பியாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. எதற்கும் ஒரு தர்க்கத்தை உண்டாக்கி, பாவத்தை, பாவம் அல்ல என்று சாதிக்குமளவுக்கு மனுக்குலம் எங்கேயோ போய்விட்டது. தேவசமுகத்தில்கூட பாவஉணர்வு அற்றவர்களாய் துணிகரமாய் மாய்மாலம்பண்ணி வாழ பலர் துணிந்துவிட்டார்கள்.

இன்றைய தியானப்பகுதியில் ஏசாயா, தேவனுடைய மகிமையின் தரிசனத்தின் முன்பாக, தான் பாவியென்பதை உணர்ந்து அலறுவதைக் காண்கிறோம். பாவியான மனுஷர் மத்தியில் வாழும் பாவிதான் என்பதை உணர்ந்தவராய் அவர் அறிக்கையிட்டபோது, தேவனுடைய பரிசுத்தமாக்குதல் அவருக்குக் கிடைத்தது. எவனொருவன் தன் பாவநிலையையும், தான் பாவியென்பதையும் உணருகிறானோ அவனே தேவனுடைய பரிசுத்தமாக்குதலையும் வாழ்வில் உணர்ந்து கொள்ளமுடியும். பாவத்தை உணராதவனுக்கும், பாவமன்னிப்பு தேவையென்பதை நினைக்காதவனுக்கும் அந்த விடுதலை கிடைக்காது.

ஜெபநேரங்களில், ஆராதனை வேளைகளில், மற்றும் ஆவிக்குரிய கூட்டங்களில் மாத்திரம்தானா இன்று நாம் தேவசமுகத்திற்கு வருகிறோம்? தேவனுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிவருகிறது என்பதை நாம் மறந்துவிடுவதுண்டு. அந்தக் கண்களுக்கு முன்பாக நமது நிலையென்ன? நாம் செய்வதை யாரும் காணமாட்டார்கள், நாம் பேசுவதை எவரும் கேட்கமாட்டார்கள் என்ற துணிகரம் நமக்கு. ஆனால் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவாலயத்துக்கு வரும்போதுகூட தேவசமுகத்திற்கு வருகிறோம் என்ற பயபக்தி நம் மத்தியில் குறைந்து வருகிறது என்பதை மறுக்கமுடியாது. ஏதோ நாம் கிறிஸ்தவர்கள் என்றால் ஞாயிறு ஆலயத்திற்குப் போகவேண்டும், திரு விருந்து எடுக்கவேண்டும் என்று ஒருவித கடமை தீர்க்கும் மன உணர்வு பலருக்கு; வேறு சிலருக்கு, அது ஒருவித சந்தோஷம், அவ்வளவுதான். ஆராதனை முடிந்ததும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குபெறுவது சிலருக்கு இன்பம். அல்லது, வாரத்தில் ஒருநாள் தேவனிடம் சென்று, சுகங்கேட்டு வருவது போலவும் நடப்பதுண்டு. இந்த அலட்சிய மனோபாவம் மாறவேண்டும்.

பரிசுத்த தேவனுக்கு முன்நிற்க பாவிகளாகிய நமக்கு ஏது துணிவு? தேவ பிரசன்னத்தை உண்மையாய் உணர்ந்தால், நமது பாவநிலைமையை நம்மால் உணரமுடியும். அங்கேதான் பரிசுத்தமாகுதலும் நிகழும். நம்மை நாம் உண்மையாய் அறிக்கை செய்யும்வரைக்கும் தேவ பிரசன்னத்தையும் நம்மால் உணர முடியாது. அதுவரை நமது அழைப்பையும் புரிந்துகொள்வது கடினம்.

சிந்தனைக்கு: தேவன் நம்மைக் காண்கிறபடி நானும் என்னைக் காண நம்மை  இந்த நாளில் முழுமனதோடு ஒப்புவிப்போமா!