அன்பினால் கூடும்!
தியானம்: ஏப்ரல் 21 வியாழன்; வேத வாசிப்பு: யோவான் 14:21-31
“என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (யோவான் 14:24).
புதிதாக திருமணமான தம்பதியினர், உறவில் வளர வளர காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுத்து, மற்றவருக்காகத் தங்களையே மாற்றிக்கொள்வார்கள். ‘இது அவருக்குப் பிடிக்கும், பிடிக்காது; இப்படிச் செய்தால் மிகவும் சந்தோஷமடைவார். அவருக்குப் பிடிக்காதது, எனக்கும் வேண்டாம்’ என்று இப்படியாக தம்மையும் அறியாமலேயே காலப்போக்கில் மாறிவிடுகிறார்கள். இவர்களுக்கிடையில் வருகின்ற இந்த மாற்றங்கள் எல்லாம் யாரும் சொல்லிக் கொடுத்தோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ வருவதில்லை; மாறாக, உறவின் அடிப்படையிலும், அன்பின் வெளிப்பாடாகவுமே வருகிறது.
அதுபோலவே, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்” (வச.21) என்றார் ஆண்டவர். ஆகவே, ஆண்டவரின் வசனத்துக்குக் கீழ்ப்படிவதற்கும், அதை ஏற்றுக்கொண்டு கைக்கொள்ளுவதற்கும் அடிப்படைத் தேவை, நாம் தேவன்மீது கொண்டுள்ள அன்பு ஒன்றேயல்லாமல் வேறேதும் இல்லை. அன்பில்லாதவனால் வசனத்தைக் கடைப்பிடிப்பதும், கைக்கொள்ளுவதும் கடினமான காரியமாகவே இருக்கும். தேவன்மீது உண்மையான அன்புள்ளவன், எவரும் சொல்லாமலே அவரது வசனங்களைக் கைக்கொள்ளுவான். தேவனுக்குப் பிடிக்காதவற்றை அவன் செய்யமாட்டான். காரணம், அவன் உண்மையாகவே ஆண்டவரை நேசிக்கிறான். அவனை எவரும் கட்டாயப்படுத்தவேண்டிய அவசியம் கிடையாது, அவன் சரியாக காரியங்களைக் கடைப்பிடிக்கிறானா என்று எவரும் சோதித்துப் பார்க்க வேண்டி இராது. ஏனெனில், அனைத்தையும் ஆண்டவர் மீதுள்ள அன்பின் அடிப்படையிலேயே அவன் செய்கிறான். அன்பு எதையும் விட்டுக்கொடுத்துச் செய்யும். இன்று, கீழ்ப்படிதலைக் குறித்து, அல்லது விட்டுவிடவேண்டிய காரியங்களைக் குறித்து கிறிஸ்தவர்களோடு பேசும்போது, ‘வேதத்தில் எங்கே சொல்லியிருக்கிறது, எடுத்துக்காட்டுங்கள் பார்ப்போம்’ என்றும், ‘இதனால் என்ன நஷ்டம்’ என்றும்; கேள்விக்குமேல் கேள்விகளாகக் கேட்டு, கேட்கிறவர்கள் எல்லோரையும் தடுமாறவைக்கிறார்கள்.
பிரியமானவர்களே, அன்பினால் எல்லாம் கூடும். முதலாவது தேவனை நேசிக்கப் பழகிக்கொள்வோம். அப்பொழுது அவரது கற்பனைகளைக் கைக்கொள்வது நமக்குக் கடினமாயிராது. ஆண்டவரின் மரணத்துக்குப் பின்பாக மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற பேதுருவைப் பார்த்து, ‘என்னை ஏன் மறுதலித்தாய்’ என்று கேட்காமல், ‘என்னை நேசிக்கிறாயா’ என்றுதான் இயேசு கேட்டார். அந்த அன்பினால் உந்தப்பட்டுத்தான் பேதுரு பெலனடைந்து எழுந்தான்.
சிந்தனைக்கு: தேவ அன்பை உதாசீனம் செய்த தருணங்கள் உண்டா? தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்த சந்தர்ப்பங்கள் எவை? அப்படியிருந்தும் இன்றும் நம்மை நேசிக்கும் ஆண்டவரை இன்னமும் துக்கப்படுத்துவோமா?