நட்பு

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 2 சாமுவேல் 16: 1-17:24
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை (2சாமு.17:22).

மனித உறவுகளில் மிகப்பெரிய ஒரு பரிசு நட்பு ஆகும். “நண்பர்களைப் பெறுவதற்கு ஒரே வழி நாமும் நண்பராக இருக்கவேண்டும்” என்று எமர்சன் என்பவர் கூறியுள்ளார். இதையே நீதிமொழிகள் 18:24ஆம் வசனமும் விளக்குகிறது. நட்பு நம்முடைய வாழ்வை வளப்படுத்து கிறது. சில நேரங்களில் அது நம்மைக் காப்பாற்றவும் செய்கிறது. தாவீதின் வாழ்வில் ஊசாயின் நட்பு மிகச்சிறந்த ஓர் உதாரணமாகும்.

தாவீதின் மாபெரும் பாவத்தைக் கண்டித்த நாத்தான் தீர்க்ககதரிசி கூறிய தேவதண்டனை சீக்கிரமாக நேரிட்டது. அது முதலாவது தாவீதின் குமாரனான அம்னோனுக்கு நேரிட்டது. பின்பு முற்கோபியான அப்சலோ முக்கும் நிகழ்ந்தது. அப்சலோம் தனது தகப்பனுக்கு விரோதமாய் எழும்பினது இஸ்ரவேலை ஆழமாக பாதித்தது. எருசலேமில் வசித்த அவன் மற்ற ஜனங்களை தன் வசப்படுத்திக்கொண்டான். இஸ்ரவேலின் நடுவே தாவீதின் மதிப்பும் பிரசன்னமும் யுத்தத்தில் அவர் காட்டிய வீரமும் அப்சலோமின் எதிர்ப்புகளை நலிவடையச் செய்தன. அவர் தன்னிடமுள்ள வீரர்களுடன் தனது சொந்த தகப்பனையே விரட்டிச்செல்ல ஆரம்பித்தார். மேலும் அவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டார். இதை எவ்வாறு செயல்படுத்துவது?

அப்சலோமின் நெருங்கிய நண்பனான அகித்தோப்பேல் இதனை செயல்படுத்த ஒரு விவேகமான எதிர்ப்பு இல்லாத திட்டத்தை உருவாக்கினார். அதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட பன்னீராயிரம் வீரர்களுடன் இஸ்ரவேலின் சேனைகள் தாவீதைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் சோர்வுற்று தளர்ந்திருக்கையில் அவர்கள் மீது பாய்ந்து தாவீதைமாத்திரம் கொல்லவேண்டுமென்று ஆலோசனை தந்தார். அப்சலோம் இதற்கு உடனடியாக சம்மதித்து, அதனைப் பாராட்டியது நம்பமுடியாத ஒரு செயலாக இருந்தது. ஆனால் அதனை செயல்படுத்துமுன் மற்றொருவரிடமும் ஆலோசனைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுள்ளத்தில் தேவன் உண்டாக்கினார். எனவே அவர் அற்கியனாகிய ஊசாயிடம் கேட் டார். அப்சலோமுக்கு விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஊசாய் தாவீதுக்கே நண்பராக இருந்து அப்சலோமின் நடவடிக்கைகளை தாவீதுக்கு அறிவிப்பவராக இருந்தார்.

ஊசாயின் திட்டம் ஒரு கொலை முயற்சியாக அமைந்தது. தாண் முதல் பெயர் செபா மட்டும் இருக்கிற கடற் கரைமணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் அப்சலோமுடன்கூட யுத்தத்துக்குச் சென்று தாவீதுடன் இருக்கும் அனைவரையும் கொன்றுபோட வேண்டும். அகித் தோப்பேலின் ஆலோசனையைவிட இத்திட்டம் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றியதால் அப்சலோம் இதனை மிகவும் விரும்பினான். இது தன்னை அழிக்கும்படியாக தேவனிடத்திலிருந்து தோன்றிய திட்டம் என்பதை அப்சலோம் அறியாதவனாய் இருந்தான். இப்படிக் கர்த்தர் அப்சலோமின் மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.

தனது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றதும் ஊசாய், அச்செய்தியை தெரிவிக்கவும், ஆபத்தை அறிவித்து தனது நண்பரான தாவீதை எச்சரிக்கவும் ஆசாரியர்களான சாதோக், அபியத்தார் என்பவர்களை அவரிடத்துக்கு அனுப்பினான். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்;     பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை (2. சாமு.17:22). அவர்கள் தாமதிக்கவில்லை. விடியற்காலத்தில் அனைவரும் யோர்தானைக் கடந்து சென்றுவிட்டனர். ஆம்; ஒருநாளின் துவக்கத்திலேயே தீமைக்கு விலகி ஓடுவதே ஞானமுள்ள செயலாகும்.

அப்சலோம் யோர்தான் நதியைக் கடந்து தனது தகப்பனைப் பின் தொடர்ந்தான். அந்த நாளிலேயே அவனது தலை ஒரு பெரிய கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டது. அவன் கொன்றுபோடப்பட்டான். தான் அபிஷேகம் பண்ணிய அரசனுக்கு எதிராகத் தீமை செய்ய எழும்பியவனை, உண்மையும் பயபக்தியுமான ஒரு நண்பன் மூலமாய் தேவன் அழித்தார்.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அறிவியல் வல்லுநரின் சொந்த ஊருக்குச் செல்பவர்கள், அவருடைய தோட்டத்தில் ஒரு “நட்பின் பாதை”யைக் காணமுடியும். அந்தப் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் எடிசனுடைய நண்பர்களால் தரப்பட்டது. ஊசாய் தனது நண்பரான தாவீதை ஆபத்திலிருந்து தப்புவித்து மகிழ்ச்சியை அளித்தார்; அதுபோல நண்பர்கள் ஒவ்வொரு நிலையிலும் தமது நண்பர்களைப் பாதுகாப்பார்கள். எனவே இப்பாதை ஒரு நட்பின் நினைவுச் சின்னமாக அமைந்தது.

உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இருந்தால் அவர்களுடன் மகிழ்ந்து அவர்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். இன்றே அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் கூறுங்கள். அவர்களுக்கு அது எவ்வளவு அர்த்தமுள்ளதாயிருக்கும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்; ஆனால் அவர்கள் அறிவார்கள்.

அதிகாலைப் பாடல்:

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே;
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை