அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(1) சீகன்பால்க் மொழிபெயர்ப்பு
தமிழில் முதல் தடவையாக வேதாகமத்தை மொழிபெயர்த்து வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்க் என்பவராவார். 1628 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள புல்சினிட்ஸ் எனுமிடத்தில் பிறந்த இவர், தனது 24 ஆவது வயதில் தமிழ் நாட்டுக்கு ஒரு மிஷனரியாகப் பணிபுரிய வந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதையாகிய இவர், தனது 16 ஆவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றதோடு, “ஐரோப்பாவில் நூறு பேரை இயேசுவுக்குள் கொண்டு வருவதை விட, புறமதத்தவர் வாழும் நாட்டில் ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்துவது மேலானது” எனும் ‘ஓபட் பிரைட் தெளப்ட்’ என்பவரது பிரசங்க வார்த்தைகள் காரணமாக மிஷனரியாகப் பணிபுரிய வேண்டும் எனும் வாஞ்சை கொண்டு, 1706 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் தேதி தென்னிந்தியாவிலுள்ள தரங்கம்பாடி எனுமிடத்திற்குத் தன் நண்பரான புளூட்சோ என்பவருடன் வந்து சேர்ந்தார்.
அக்காலத்தில், தரங்கம்பாடியில் டென்மார்க்கைச் சேர்ந்த வியாபாரிகளும் அரச அதிகாரிகளும் பெருமளவில் இருந்தனர். டென்மார்க்கின் அரசன், தன் நாட்டவர் வாழுமிடங்களில் கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டும் என்பதற்காகவே ஜெர்மனியரான சீகன்பால்க்கையும், புளூட் சோவையும் இந்தியாவுக்கு அனுப்பியிருந்தான்.
சீகன்பால்க்கும் புளூட்சோவும் அரச அனுமதியுடன் வந்திருந்தபோதிலும் அச்சமயம் தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள், மிஷனரிகள் தமது குடியிருப்புப் பிரதேசத்துக்கு வருவதை விரும்பவில்லை. மிஷனரிகள் தமது உல்லாச வாழ்வுக்கு எதிராகப் பிரசங்கம் செய்வார்கள் என்பதினால், அவர்கள் சீகன் பால்க்குக்கும் புளூட்சோவுக்கும் உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. இவர்கள் வந்த கப்பலிலிருந்த அனைவரும் கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதிலும், இவர்களிருவரும் சிலநாட்கள் கப்பலிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
பின்னர் தமிழ் மக்களது உதவியுடன் இருவரும் கரைசேர்ந்தனர். எனினும், இவர்கள் கரைக்கு வந்தவுடன் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கடற்கரையிலேயே நிற்கவேண்டியதாயிருந்தது. சீகன்பால்க்கும் புளூட்சோவும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை வாசித்தவாறே கடற்கரையில் இருந்தனர். இவர்களுக்கு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கொடுக்கப்படவில்லை. எனினும், இவர்கள் டென்மார்க் அரசின் கட்டளைப்படி வந்திருந்தமையினால் கடைசியில் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள் சீகன்பால்க்குக்கும் அவரது நண்பருக்கும் எவ்வித உதவியும் செய்யாதபோதிலும், தேவன் அற்புதமான முறையில் அச்சமயம் அங்கிருந்த ஒரு ஜெர்மன் நாட்டவர் மூலம் இவர்களுக்கு உதவினார். சீகன்பால்க் தரங்கம்பாடியில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். சீகன் பால்க்கும் புளூட்சோவும் பாடசாலைப் பிள்ளைகளுடன் தரையில் உட்கார்ந்து, விரலினால் தமிழ் எழுத்துக்களை மணல்தரையில் எழுதுவதன் மூலமாக தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினர். இவர்களுக்கு முதலியப்பன் என்பவர் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தார்.
சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணி வரை முதல் நாளில் தான் கற்ற தமிழ்ச் சொற்களை மனப்பாடமாய்ச் சொல்வார். 8 மணி முதல் 1 மணிவரையும், பின்னர் மாலை 3 மணி முதல் 5 மணிவரையும் தமிழ்ச் சுவடிகளைப் படிப்பார். மறுபடியும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை யாராவது ஒருவரைத் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிவிட்டு அதைக் கவனித்துக் கேட்பார். இவ்விதமாக 8 மாதங்களில் சீகன் பால்க் தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். சீகன்பால்க் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் மொத்தம் 119 தமிழ் நூல்களைக் கற்றுள்ளார். இப்புத்தகங்கள் மூலமாக மட்டுமல்ல, தமிழ் மக்களுடன் பேசுவதன் மூல மாகவும் தமிழைத் தன்னுடைய சொந்த மொழிபோல் அறிந்திருந்தார்.
சீகன்பால்க் ஆரம்பத்தில் ஒரு சில பிரசங்கங்களையும், லூத்தரன் சபையின் உபதேசங்களையும், ஒரு சில துண்டுப்பிரசுரங்களையும் தமிழில் எழுதினார். எனினும், அவரது இலட்சியமாக இருந்தது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பேயாகும். தரங்கம்பாடியில் போர்த்துக்கேய மொழியைப் பேசும் பலர் அக்காலத்தில் இருந்தமையினால், சீகன்பால்க்கோடு வந்த அவரது நண்பர் புளூட்சோ போர்த்துக்கேய மொழியைப் படிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியமையினால், சீகன்பால்க் தனித்தே மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்ய வேண்டியதாயிருந்தது. சீகன்பால்க் இப்பெரிய பணியை ஆரம்பிப்பதற்கு முன்பு ஊக்கமாய் ஜெபித்து, உற்சாகத்தையும் தேவவழி நடத்துதலையும் பெற்று, 1708ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் 1711 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தியடைந்தன.
சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பற்றி கேள்விப்பட்ட இங்கிலாந்திலிருந்த கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்கம், ஒரு அச்சியந்திரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பியது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்க் தனது புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை அச்சிடும் பணிகளை ஆரம்பித்தார்.
(தொடரும்)