இரட்சிப்பு

தியானம்: மே 20 வெள்ளி; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:23-34

‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்’ (ரோம.10:10).

‘எனது பிள்ளைகளை சிறுவயது முதல் கடவுள் பயத்திலும், அவரைக் குறித்த நம்பிக்கையிலும் வளர்த்து வந்தேன். அவர்கள் வாலிபப் பருவத்தை அடைந்தபோது, தாமாகவே தங்களைத் தேவனுக்கு அர்ப்பணித்து, அவர் கிருபையாய் அளித்த இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டனர். அந்த நாள்தான் வாழ்வில் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். அப்படி ஒரு நாளுக்காகத்தான் நான் ஆவலோடு காத்திருந்தேன்’. இது ஒரு தாயாரின் மகிழ்ச்சியான அனுபவம்.

‘ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்’ என சிறைச்சாலைக்காரன் கேட்பதற்கு உந்துதலாக இருந்தது எது? சிறைச் சாலைக் கதவுகள் திறக்கப்பட்டபோதும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் தப்பியோடாமல் இருந்த செயல்தானே! மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தால், அவன் மட்டுமல்ல, அவனது வீட்டாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் நல்ல செய்தியும் அவனுக்குக் கிடைத்தது. வசனத்தைக் கேட்டபோது, அத்துடன் நிற்காமல், தேவனிடத்தில் விசுவாச முள்ளவனாகி குடும்பத்துடன் மனமகிழ்ச்சி அடைந்தான். ஆம், அவனும் அவனது வீட்டாரும் அந்த இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டனர். இரட்சிப்பு ஒவ்வொருவருக்கும் அதிமுக்கியம். ‘…கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்’ (ரோம.10:13).

நமது பிள்ளைகளுக்கு எவ்வளவுதான் பெரிய காரியங்களை நாம் செய்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்துவதே அதிமுக்கியமானதாகும். தேவபயத்தில் நாம் வளர்த்தாலும் அவர்களாக தேவனைத் தமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரது இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இன்று நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளின் இரட்சிப்பைக் குறித்த கரிசனையுடன் இருக்கிறோம். அதற்காக ஊக்கத்தோடு ஜெபிக்கிறோமா? பிள்ளைகள் தேவனின் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு, அவருடன் தமது உறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு, நாம் அவர்களுக்கு உதவியாக இருக்கிறோமா?

நமது வாழ்வு இரட்சிப்பைப் பெற்றுள்ளதா? அந்த வாழ்வு பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறதா? அல்லது ஆண்டவரைவிட்டே ஓடி விடச் செய்கிறதா? என்பதை நாம் தான் சிந்திக்க வேண்டும். இரட்சிப்புக்கு நேராக நடத்த வேண்டியது பெற்றோர் பொறுப்பு, இரட்சிப்பவரோ ஆண்டவர்! எனவே இரட்சிப்பைப் பெற்றவர்களாக சாட்சியோடு வாழுவதும், பிள்ளைகளுக்கு நாமே முன்மாதிரியாக இருப்பதும் நமது முக்கிய பொறுப்பாகும்.

‘அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?’ ரோம.10:14.

சிந்தனைக்கு: கிறிஸ்துவே இரட்சகர் என்பதை நமது பிள்ளைகள் கேள்விப்பட, விசுவாசிக்க, யார் பொறுப்பு? அந்தப் பொறுப்பை நாம் சரிவரச் செய்திருக்கிறோமா?