அரைகுறையான கீழ்ப்படிதல்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 1சாமுவேல் 15:1-35
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெபஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது (1சாமு.15:12).

ஒரு கட்டளைக்கு அரைகுறையாகக் கீழ்ப்படிவது கீழ்ப்படியாமைக்கு சமம். செயலில் கீழ்ப்படியவில்லை எனில் அது மனத்தளவிலும் கீழப்படியாமைக்குச் சமம். இத்தகைய கீழ்ப்படியாமைக்கு சவுல் அரசர் ஓர் உதாரணம் ஆவார். மோவாப், அம்மோனியர், ஏதோம் மற்றும சேபாவின் இராஜாக்கள் மீது பெற்ற வெற்றியினால் இஸ்ரவேலின் அரசராக சவுல் தனது பதவியின் மீது மக்களது நம்பிக்கையையும் பெற்றார். மக்களும் சவுலைத் தங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டனர். சவுலுக்கும் இது தெரிய ஆரம்பித்தது.

ஆயினும் அமலேக்கியரின் மாபெரும் பெடோயின் என்ற நாடோடிகளின் குழுவானது யூதர்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. சீனாய் மலை, வனாந்தரம் போன்ற இடங்களிலும் கிதியோன் காலத்திலும் இந்த அமலேக்கியர் அடிக்கடி இஸ்ரவேலரை முன்னறிவிப்பின்றி தாக்கினர். இத்தீயவர்களான அமலேக்கியரைக் கொன்று அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தீர்க்கதரிசிகள் மூலமாய் தேவன் சவுலுக்கு அறிவித்தார். தாம் பாவத்தை வெறுப்பதை தமது ஜனங்கள் அறிந்து கொள்ள தேவன் விரும்பினார். மேலும் பக்தியற்ற அண்டை நாட்டு மக்களை வெற்றி பெறுவதனால் அவர்களது வழியை அவர்கள் பின்பற்றி விடக்கூடாது என்றும் அவர் விரும்பினார்.

இரண்டாயிரம் காலாட்படையுடனும் யூதாவிலிருந்து வந்த பத்தாயிரம் மனிதர்களுடனும் சவுல் அமலேக்கியரை தென்புறமாகப் படையெடுத்துச் சென்றார். அமலேக்கியர்மேல் முழுவதுமாக வெற்றி பெற்றார். இஸ்ரவேலரின் சேனை அமலேக்கியரை முழுவதுமாக முறியடித்தது. ஆனால் தேவன் கட்டளையிடாததும் தவிர்க்க வேண்டியதுமான ஒரு காரியத்தை சவுல் செய்தார்.

“அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக்கருக்கினாலே சங்காரம்பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப் போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்” (1சாமு.15:8,9).

கர்த்தருக்குக் கீழ்ப்படியாமையினால் தலைவனாயிருக்கும் தகுதியை இழந்தவராய் சவுல் காணப்பட்டார். தனது கீழ்ப்படியாமையினாலும் முரட்டாட்டத்தினாலும் சவுல் அரசராகத் தொடரமுடியாது என்று சாமுவேலுக்குக் கர்த்தர் அறிவித்தார். இது சாமுவேலுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. எனவே இராமுழுவதும் அவர் கர்த்தரிடமும் விண்ணப்பம் பண்ணினார். ஆனாலும் தேவன் தமது முடிவினை மாற்றிக்கொள்ளவில்லை.

“மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைக் சந்திக்கப்போனான்” (1சாமு. 15:12) கில்காலிலே தன்னை சந்தித்த சாமுவேலை சவுல் வாழ்த்தி, “நீர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்”. ஆனால் சாமுவேலோ “அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்”. ஆடுகளின் சத்தமும் மாடுகளின் சத்தமும் பொதுவாக நமக்கு எதையும் அறிவிக்காது. ஆனால் இந்நிகழ்ச்சியில் அவை சவுலின் கீழ்ப்படியாமையை சாமுவேலுக்கு அறிவித்தன.

எண்ணாகமம் 32:23 இல் காணப் படும் “உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும்” என்ற நியமத்தை அது தெளிவாக நிரூபித்தது. தன்னுடைய கீழ்ப்படியாமை தெரியவந்தது என்பதை அறிந்த சவுல் அதற்கு விளக்கம் தந்தார். சவுல் அப்பாவத்தை ஜனங்கள் மீது சுமத்தினார்.

“சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றான்” (வச.20,21).

கர்த்தரின் கட்டளையை சவுலுக்கு நினைவூட்டிய சாமுவேல் அதனை அவர் கைக்கொள்ளாததையும் விளக்கினார். யெகோவாவுக்கு பலிசெலுத்தும் எண்ணத்தை தீர்க்கத்தரிசி அங்கீகரிப்பார் என்று எண்ணி தனது செயலுக்கு மிகப்பொருத்தமான ஒரு விளக்கத்தை சவுல் அளித்தார். ஆனால் கர்த்தர் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலையே விரும்புகிறவர்.

“அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப் பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்” (22,23).

கீழ்ப்படிதலைக்காட்டிலும் மற்ற ஆராதனைகள் தேவனுக்கு பிரியமாகாது. எஜமானருக்குக் கீழ்ப்படிதலே ஒவ்வொரு வேலைக்காரருடைய தலையாய கடமையாகும். பகுதி கீழ்ப்படிதல் என்பது நமது பரம எஜமானை எதிர்ப்பதற்கு சமம்.

அதிகாலைப் பாடல்:

தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நடந்தால்
நம் பாதையில் அவர் மகிமையை அருளுவார்
அவருடைய சித்தத்தை நாம் செய்தால்
அவர் நம்மோடு என்றும் இருப்பார்
அவரை நம்பி கீழ்ப்படியும் அனைவருடனும் இருப்பார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை