விசுவாசப் பெயர்ப்பட்டியல்
தியானம்: நவம்பர் 23 புதன்; வேத வாசிப்பு: மாற்கு 11:22-26
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள் (மாற்கு 11:22) என்றார்.
விசுவாசம் என்பது நாமாக உருவாக்குவதோ, அல்லது நேர்முகமாகச் சிந்தித்து நாமாகச் செயற்படுவதோ அல்ல. வெறுமனே ‘நான் விசுவாசிக்கிறேன்’ என்று கூறி, நாம் எதையும் சாதித்துவிட அது மாயமந்திரம் அல்ல. விசுவாசம் என்பது தேவனுடைய ஒரு பெரிய ஈவு. அவரால் எல்லாம் கூடும் என்பதை இயேசுவானவர் கற்றுத்தருகிறார். விசுவாசத்தினால் பல மகத்தான காரியங்களை எதிர்பார்க்கலாம் என்பதை புதிய ஏற்பாட்டின் பல பகுதிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. கிறிஸ்துவில் வைத்த விசுவாசத்தினால் பலர் குணமடைந்தனர். பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டன. மரித்தவன் உயிர்த்தான். ஆனால், இவையாவும் நாம் நினைத்தபடி ஒரு மந்திரவித்தைபோல நடப்பதில்லை. ஆனால், கர்த்தரைச் சேவிக்கும்படிக்கு, விசுவாசத்தினாலே இவற்றை நடப்பிக்கத்தக்க கிருபையை திட நம்பிக்கையை தேவன் நமக்குள் தந்திருக்கிறார்.
பல ஊழியங்கள் விசுவாசத்தினாலே ஆரம்பிக்கப்பட்டு பல்லாண்டு காலங்களாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. நமது ‘வேதாகமத்திற்கு திரும்புதல்’ ஸ்தாபனத்தை ஆரம்பித்த கலாநிதி தியோடர் எஃப் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். தனது பணப்பையிலே ஒரு சிறு தொகை மாத்திரமே இருந்தபோதிலும், தேவன்மேலே விசுவாசமுள்ளவராக தனது கால்களை முன்னோக்கி நகர்த்தினார். 1939ஆம் ஆண்டு அமெரிக்காவிலே ஒரு வானொலி நிலையத்தின் மூலம் வேதாகம நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்தார். இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊழியம் இன்று உலகமெங்கும் பலவித தொழில்நுட்பக் கருவிகளினூடாக சுவிசேஷத்தை அறிவித்து வருகிறது. இது எப்படி? இந்த விசுவாசத்தை அவரே உருவாக்கினாரா? இல்லை! அவருடைய உள்ளத்தில் தூய ஆவியானவர் உருவாக்கி, அதிலே அவரைத் திடப்படுத்தினார்.
விசுவாசமே கிறிஸ்தவ வாழ்வின் மூச்சு. ஒரு விசுவாசப் பெயர்ப்பட்டியலை எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இவ்வுலக ஓட்டத்தை முடித்துக்கொண்டு தேவனுக்கு முன்னே நிற்கும்போது, புதியதொரு விசுவாசப்பட்டியல் வாசிக்கப்படுமானால், நமது பெயரும் காணப்படுமா? ‘நான் ஒரு விசுவாசி’ என்று கூறி, விசுவாசப் பிரமாணத்தையும் மனப்பாடமாகக் கூறிவிடுகின்ற நமது விசுவாசம் உண்மையிலேயே உயிருள்ளதா? அல்லது, விசுவாசம் இன்று பழக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டிருக்கிறதா? விசுவாசித்து தேவனுக்கென பெரிய காரியங்களைச் செய்ய இன்று நம்மை அர்ப்பணிப்போமாக. விசுவாசவீரர்கள், நமக்குச் சாட்சிகளாயிருக்க நாம் ஏன் சோர்ந்து போகவேண்டும்?
ஜெபம்: தூய ஆவியானவரே, மங்கிப்போயுள்ள எங்களது விசுவாச வாழ்வு உயிருள்ளதாகவும், தேவனுக்காய் முன்செல்ல எங்களைப் பெலப்படுத்துகிறதாயும் இருக்க எங்களுக்கு துணை செய்யும். ஆமென்.