ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி-பிப்ரவரி 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம் மீட்பரும் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

2016ஆம் ஆண்டு முழுவதும் வழிநடத்தி வந்த நமது அன்பின் தேவனை துதிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட தேவபிள்ளைகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இப்பணிக்காகவும் தியானங்களை எழுதுகிற தேவபிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

இவ்வாண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். வருகிற புதிய ஆண்டிலே அநேகர் வேதாகமத்தை முறையாக வாசிக்க வாஞ்சிக்கிறோம். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:2).

நவம்பர் மாதத்திலிருந்து சத்தியவசன வானொலிநிகழ்ச்சிகள் ஃபீபா வானொலியில் திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்கள் காலை 7.00 மணிக்கு மத்திய அலைவரிசை MW 873 Khz இல் ஒலிபரப்பாவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். டிசம்பர் மாதத்திலிருந்து ‘சத்தியம்’ டிவியில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.30 மணிக்கு சத்தியவசனம் புதிய நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளோம். இந்நிகழ்ச்சிகளில் தாங்கள் பங்கெடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுகிறோம்.

ஜனவரி மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள்  தியானங்களை தயாரித்து வழங்கியுள்ளார்கள். பிப்ரவரி மாதம் சகோ.ஏர்னஸ்ட் வஸ்னி அவர்கள் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகள் என்பதைத் தியானிக்கும் தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்களின் வாயிலாக வாசிக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வாதம் அடைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன விசுவாச பங்காளர்கள், வாசகர்கள், நேயர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்