வாயினால் மாத்திரமல்ல…

தியானம்: மே 15 திங்கள்; வேத வாசிப்பு: யோவான் 21:15-17

‘என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்” (யோவா. 21:15).

“என்னை நேசிக்கின்றாயா?” என்ற ஒரு பழைய பாடலை நாம் உணர்வோடு பாடுவதுண்டு. “இயேசுவே உம்மை நேசிக்கிறோம்” என்று கண்கலங்க, குரல் தழுதழுக்க வாய்விட்டுச்சொல்லி  ஆராதிக்கிறோம். ஆனால், அந்த நேசம் நம்மில் வெளிப்படுகிறதா? நாம் ஆராதிக்கிறவர் மரணத்தை வென்று உயிர்த்தவர் என்பதை நாம் விசுவாசிப்பது மெய்யானால் நமது நேசம் வெறுமனே வாயுடன் நிற்கமுடியாது.

இதைத்தான் இயேசு பேதுருவின் வாழ்வில் சரிப்படுத்தினார். பேதுரு தம்மை நேசிப்பதை, மறுதலித்து விட்டதை எண்ணி மனவேதனைப்படுகிறான் என்பதை இயேசு அறியாதவர் அல்ல. அவன் கர்த்தரை நேசித்ததால்தான், தன் தகுதியற்ற நிலையை உணர்ந்து அவனுடைய மனம் பின்வாங்கிப்போனது. ஆனால் கர்த்தரோ, அவனை ஒரு படி மேலே உயர்த்தினார். ‘நீ என்னை நேசிப்பது மெய்யானால் நிரூபித்துக் காட்டு’ என்பதுபோல, கர்த்தர் அவனை ஒரு பொறுப்பான பணிக்கு அழைத்தார். மூன்றுதரமாகக் கேள்வி கேட்ட ஆண்டவர், மூன்றுதரமும் ஒரே வார்த்தையையே சொல்லுகிறார். “ஆட்டுக்குட்டிகளை, ஆடுகளை” என்று வெறுமனே சொல்லாமல் “என் ஆடுகளை” என்று கர்த்தர் சொன்னதிலிருந்து அவர் தம் பிள்ளைகளை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதுவும், அவர்களை வெறுமனே கைவிட்டுச் செல்லவில்லை என்பதுவும் தெளிவு. ஆக, தாம் பரத்துக்கு ஏறிப்போனபின்பு, தம் பணியைத் தொடருவதற்கு தம்முடையவர்களைப் பெலப்படுத்துவது அவருக்கு அவசியமாயிருந்தது. அதற்காக அவர் தெரிந்தெடுத்த முக்கிய பாத்திரம், பேதுரு; மறுதலிக்காதபடி தடுக்காமலிருந்ததும், மறுதலித்து முடிக்குமட்டும் பேசாமலிருந்ததும், பின்னர் பேதுருவைத் திரும்பிப் பார்த்ததும் சும்மாவல்ல. பேதுருவின் விழுகையிலும், அவனடைந்த மனஸ்தாபத்திலும் கண்ணீரிலும்தான் அவனுடைய எழுந்திருக்குதலும் ஒளிந்திருந்தது. இப்போ அவன் தன் நேசத்தை நிரூபிக்க கர்த்தர் ஒரு தருணமளித்தார். தம் பணிக்கென்று பேதுரு தன்னை ஒப்புக்கொடுக்கும்படி அழைக்கிறார்.

தேவபிள்ளையே, நாம் ஆண்டவரை நேசிப்பது உண்மை; ஆனால் அது வாயுடன் நிற்கும்வரைக்கும் அதற்கு அர்த்தம் இல்லை. அது கிரியையில் வெளிப்படவேண்டியது அவசியம். அதற்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். பேதுரு மறுதலித்தான்; நாம் அதிலும் கேடாக ஆண்டவரைத் துக்கப்படுத்தியிருந்தாலும்கூட, அவர் சிந்திய இரத்தம் நம்மை மன்னித்து ஏற்று, நமது வாழ்வை மாற்ற வல்லமையுள்ளது. ஆனால், நாம் நம்மை ஒப்புவிக்கும் வரைக்கும் கர்த்தரால் நம் வாழ்வில் எதுவும் செய்யமுடியாது.

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1தீமோத்தேயு 1:12).

ஜெபம்: ஆண்டவரே, உம்மை நேசிக்கிறோம் என்று வெறுமனே பாடாமல், அதை எங்கள் செயல்களிலே வெளிப்படுத்தி உம்மை மகிமைப்படுத்த உதவி செய்யும். ஆமென்.