குயவனும் களிமண்ணும்
தியானம்: ஜுன் 1 வியாழன்; வேத வாசிப்பு: எரேமியா 18:1-7
“…களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.” எரேமியா 18:6
மலைகளும் குன்றுகளும், விரிந்ததும் ஒடுக்கமானதும் என்று பலதரப்பட்ட பாதைகளுக்கூடாக பயணம் செய்துகொண்டிருந்த ஒருவருடைய பயணம் சடுதியாக ஓரிடத்தில் தடைப்பட்டது. ஆனாலும், “குயவனே! குயவனே! களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே” என்று பாடிக்கொண்டு களிமண் பாதையிலே பயணத்தைத் தொடர்ந்தார்.
களிமண்ணை யார்தான் விரும்புவார்கள்? ஆனால் ஒரு குயவனோ, களிமண் இருக்கும் இடத்தையே நாடிச் சென்று, அதனைத் தன் கரங்களால் எடுத்து, அழகான, உபயோகத்துக்குரிய பாத்திரங்களாக வனைந்தெடுப்பான். மட்டுமல்ல, திரிகையிலே தான் வனைந்துகொண்டிருக்கும் களிமண் கெட்டுப்போனாலும், அதை எறிந்துவிடாமல், திரும்பவுமாக வேறொரு மண்பாண்டமாக வனைந்தெடுப்பான். சர்வ உலகத்தையும் படைத்த தேவன் தம்மை இப்படியான ஒரு குயவனாக வர்ணித்து, இஸ்ரவேல் ஜனங்களுடன் இடைபட்டார்.
கர்த்தர் எரேமியாவை ஒரு குயவன் வீட்டிற்குப் போகும்படி பணித்தார். அங்கு திரிகையிலே வனையப்பட்டுக்கொண்டிருந்த களிமண் குயவன் கையிலே கெட்டுப்போனதை எரேமியா கண்டார். அவ்விதமாகவே தேவனுக்குப் பயப்படும் பயமும், கீழ்ப்படிதலும் அற்றுப்போய், அந்நிய தெய்வ வழிபாடுகளோடு கூடிய பாவவாழ்க்கை வாழ்ந்ததால், பரம குயவனான தேவனின் கரங்களில் கெட்டுப்போன களிமண்ணாகவே இஸ்ரவேல் ஜனங்கள் இருந்ததை தேவன் அன்று வெளிப்படுத்தினார். ஆனால், அவர்களை அப்படியே அவர் எறிந்துவிடவில்லை. திரும்பவும் அவர்களைத் தமது கரங்களில் எடுத்து, தமக்குப் பிரியமானபடி வனைந்தெடுப்பதாக வாக்களித்தார் கர்த்தர்.
அந்த இஸ்ரவேலர் மட்டுமல்ல, மண்ணினால் உருவாக்கப்பட்ட நாம் அனைவருமே பரம குயவனான தேவனின் கரத்தில் தினமும் வனையப்பட்டுவரும் பாத்திரங்கள்தான். ஆனால் நாமோ, நாம் களிமண் என்பதையும், தேவன் நம் பரம குயவன் என்பதையும் மறந்துபோவதால் பலவேளைகளிலும் இஸ்ரவேல் ஜனங்களைப்போன்றே நமது பாவ வாழ்க்கையினால் தேவனின் கரத்திலிருந்து தவறிவிழுந்த களிமண்ணாகவே காணப்படுகின்றோம். இப்படியான நிலையில் இன்று நாம் இருப்போமேயாகில் இன்றைக்கே, “இப்பொழும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண். நீர் எங்களை உருவாக்குகிறவர். நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை” (ஏசாயா 64:8) என்று சொல்லி, தேவன் தமக்குப் பிரியமான பாத்திரமாக வனையும்படியாக நம்மைத் திரும்பவும் ஒப்புக்கொடுப்போமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, உமது கரங்களிலிருந்து நான் தவறி விழுந்துவிடக் காரணமாயிருக்கிற கீழ்ப்படியாமை, தேவபயமற்ற வாழ்க்கை, அந்நிய தெய்வ வழிபாடுகள், உலக இச்சை ஆகியவற்றிலிருந்து எனக்கு விடுதலை தந்து உமக்கு உகந்த பாத்திரமாய் என்னை வனைந்தருளும். ஆமென்.