புடமிடப்படும் பாத்திரம்
தியானம்: ஜுன் 15 வியாழன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 37:1-36
“கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும், அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.” சங்கீதம் 105:19
பொன்னும் வெள்ளியும் நெருப்பில் புடமிடப்படவில்லையானால் அதற்கு மதிப்பு இல்லை. அப்படியே மனித வாழ்வு புடமிடப்படவேண்டியது எத்தனை முக்கியம்! மனிதனுடைய வாழ்வு உபத்திரவத்தின் பாதையில் புடமிடப்படுகிறது. அப்போது மனிதன் தெய்வீக சுபாவத்தைத் தரித்துகொள்ள ஏதுவாகிறது. புடமிடப்படுதல் வேதனையாக இருந்தாலும், அதன் முடிவு எத்தனை மேன்மையானது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
யோசேப்பு தன் தகப்பனுக்குச் செல்ல மகன் மாத்திரமல்ல, அவனது இரு கனவுகளும் சகோதரரை நோகடித்ததால், அவனது சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டனர். தருணம் பார்த்திருந்த அவர்கள், யோசேப்பை இருபது வெள்ளிக்காசுக்கு இஸ்மவேலரிடம் விற்றுப்போட்டார்கள். அவர்கள் இவனை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே போத்திபார் என்ற அதிபதி இவனை விலைக்கு வாங்கினான். யோசேப்பு போத்திபாரின் வீட்டு விசாரணைக்காரனானான். அங்கே உண்மையும் நேர்மையுமாக வேலை செய்தாலும், போத்திபாரின் மனைவியின் சதியால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றான். சிறையிலும் கர்த்தர் யோசேப்புடன் இருந்தார். சிறைச்சாலை தலைவனின் கண்களில் யோசேப்பு தயவு பெற்றான். சிறைப்பட்டிருந்த பார்வோனின் இரண்டு ஊழியரின் கனவுகளுக்கும், பின்பு பார்வோனின் கனவுக்கும் உரிய அர்த்தத்தைக் கூறியதால் ஏற்றவேளையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியானான். யோசேப்பின் ஞானமான செயலினால், தேசமெங்கும் பஞ்சம் உண்டாயிருந்தபோதும், எகிப்திலே தானியம் நிறைந்திருந்தது. அதைக்கொண்டு எகிப்தியரை மட்டுமல்ல, தன்னை வெறுத்து விற்றுப்போட்ட தன் சகோதரரையும்கூட போஷித்துப் பராமரிக்கின்ற அளவுக்கு கர்த்தர் யோசேப்பை உயர்த்தினார்.
இந்த யோசேப்பின் வாழ்வில் இன்று நாம் கவனிக்கவேண்டியது என்ன வெனில், எகிப்துக்கு விற்கப்பட்ட பதினேழாம் வயதிலிருந்து எகிப்துக்கு அதிபதியான முப்பதாம் வயதுவரைக்கும் யோசேப்பு தன் வாழ்வில் புடமிடப்பட்டார் என்பதேயாகும். ஆனாலும் கர்த்தர் யோசேப்புடன் இருந்தார்; யோசேப்பும் கர்த்தரோடே இருந்தார். அன்பு, மன்னிப்பு, இரக்கம் போன்ற பல தெய்வீக சுபாவம் யோசேப்பிலே மிளிரத் தொடங்கியது. இல்லையானால் தன்னை விற்றுப்போட்ட தன் சகோதரர் தன் காலடியில் விழுந்தபோது, தருணம் பார்த்து அவரும் அவர்களைப் பழிவாங்கியிருக்கலாமே! தேவநோக்கம் இன்றி உபத்திரவத்தின் பாதையில் நாம் புடமிடப்பட மாட்டோம் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கு மானால் எந்த சூழ்நிலையிலும் நாமும் தடுமாறமாட்டோம். “இதோ உன்னைப் புடமிட்டேன். ஆனாலும் வெள்ளியைப்போல அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்” (ஏசாயா 48:10).
ஜெபம்: தேவனே, நான் உபத்திரவத்தின் பாதையில் செல்ல நேரும்போது முறுமுறுக்காமல், இது எனக்கான புடமிடுதல் என்று உம்மைச் சார்ந்துகொள்ள கிருபை தாரும். ஆமென்.