துதிக்கப்படத்தக்கவர்!
தியானம்: ஆகஸ்டு 2 புதன்; வேத வாசிப்பு: ரோமர் 11:25-33
“ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!…” (ரோமர் 11:33).
ஒரு குறிப்பட்ட பால்மாவைக் குடித்ததாலே, பலூனின் உதவியுடன் பொம்மைக் காரை ஓட்டலாம் என்று ஒரு சிறுவன் கண்டுபிடித்துவிட்டானாம்; இது ஒரு வியாபார விளம்பரம். நீங்கள் எதையாவது புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? இன்று மனிதன் பல ஆச்சரியங்களை நிமிடத்துக்கு நிமிடம் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்துகிறான். ஆனால், தனது படைப்பின் ஆச்சரியத்தையோ, தன்னை ஆளுகை செய்கிறவரின் ஆழத்தையோ அவனால் ஆராய்ந்து பார்க்கவோ, அளவிடவோ முடிகின்றதா?
பெந்தேகொஸ்தே அனுபவத்துடன் ரோமாபுரிக்குத் திரும்பிச் சென்ற யூத கிறிஸ்தவர்களால் உருவானது ரோம சபை. பவுல் அந்தச் சபையினரைச் சந்திக்கும் முன்னதாக அவர்களுக்கு எழுதிய இந்த நிருபம், கடித முறைப்படி அல்லாமல் ஒரு சட்ட வல்லுனர் எப்படி காரியத்தை நிரூபிப்பாரோ அந்த வகையில், சுவிசேஷத்தையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் குறித்தும், விசுவாசத்தினாலேதான் ஒருவன் இரட்சிக்கப்படுகிறான் என்றும் ஆணித்தரமாக இந்த நிருபத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷம் புற ஜாதியாருக்கு அருளப்பட்டாலும், இஸ்ரவேலுக்கு தேவன் அருளிய கிருபை மாறாதது என்று ஒரு நீண்ட இறையியல் விவாதத்தை முன்வைத்த பவுல், சடுதியாக தன் எழுத்தின் போக்கை மாற்றிவிட்டார். தேவனுடைய இரட்சிப்புக்காக தேவன் வகுத்த திட்டத்தில் தேவனுடைய ஆச்சரியமான அறிவு ஞானத்தைப் புகழ்ந்து, உடனடியாக தேவனைத் துதிக்க ஆரம்பித்துவிட்டார் பவுல். தேவனுடைய ஆழங்களை எவராலும் ஆராயமுடியாது என்றாலும், அவர் சர்வாதிகாரி அல்ல; மாறாக, தாம் படைத்த இந்த அண்டசராசரத்தையும், நமது வாழ்வையும் தமது பூரணமான ஞானத்தினாலும், நம்மீது கொண்ட அநாதி அன்பினிமித்தமும் நீதியாய் ஆளுகை செய்கிறார் என்று பவுல் மனதார தேவனைத் துதிப்பதைக் காண்கிறோம்.
தேவனுடைய ஞானம் அறிவு நமக்கு எட்டாதது. ஆனால், தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பை நம்மால் உணரமுடியாது என்று சொல்லமுடியாது. ஆராய்ந்து முடியாத பெரிய அதிசயங்களைச் செய்கின்ற தேவனுடன் மனுஷன் போராடுவது எப்படி? அவருடைய அனந்த ஞானத்தைச் சோதிக்க முயலுவது எப்படி? நமது கண்கள் காண்கின்ற அதிசயங்களே தேவனைத் துதிக்கப்போதும்! தேவனுடைய அதிசயங்களை எண்ணிஎண்ணித் துதிக்கும்போது நமது துக்கங்களும் துயரங்களும் சிறிதாகி, அர்த்தமற்றவையாகிவிடும்.
“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்” (சங்கீதம் 92:5).
ஜெபம்: ஆரய்ந்து முடியாத பெரிய அதிசயங்களைச் செய்கின்ற தேவனே, என் வாழ்வின் எந்த நிலையிலும் உம்மை மனந்தளராமல் துதிப்பேன். ஆமென்.