இயேசுவே என் இரட்சகர்!
தியானம்: ஆகஸ்டு 5 சனி; வேத வாசிப்பு: 1 தீமோத்தேயு 1:12-17
“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (1 தீமோ.1:17).
அவசரங்களும், அவலங்களும் நிறைந்த இன்றைய வாழ்க்கை ஓட்டத்திலே எவ்வளவு தூரம் நாம் நின்று நிறுத்தி தேவனைக் குறித்துத் தியானிக்கிறோம்! நமது தேவைகளுக்காக வேண்டுதல்செய்ய மறக்காத நாம், இதுவரை தேவன் செய்த நன்மைகளை எவ்வளவு தூரம் நன்றியறிதலுடன் சிந்திக்கிறோம்!
சுவிசேஷத்தினிமித்தம் பல பாடுகளுக்கும் கட்டுகளுக்கும் உட்பட்ட நிலையிலும், சபைகளைப் பெலப்படுத்தியும் கண்டித்தும் வழிநடத்தியும் எழுதிய நிருபங்களில், அடிக்கடி ஒரு நிறுத்தம் கொடுத்து, தேவனுடைய மகிமையை நினைத்து அவரை உயர்த்திப் போற்றி பவுல் எழுதியிருக்கிற வார்த்தைகளை சற்றுக் கோடிட்டுப் பாருங்கள். நித்தியமாய் இருக்கின்ற, அழிவில்லாத, காணப்படாத, ஒரே தேவன் என்று தன் எழுத்தை சற்று நிறுத்தி, அவருக்கே மகிமை செலுத்த இந்த இடத்திலே பவுலுக்குத் தூண்டுகோலாய் இருந்தது எது?
பவுல் தனது முன்னிலைமையைச் சிந்திக்கிறார். விசுவாசிகளைத் தூஷித்துக் கொடுமைப்படுத்திய தன்னில் கர்த்தருடைய அன்பும் கிருபையும் பெருகியதை நினைத்துப் பார்த்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்பது சத்தியமாய் இருக்கும்பட்சத்தில், அந்தப் பாவிகளில் பிரதான பாவியாகிய தன்னை அந்தக் கிருபை சந்தித்ததை நினைத்துப்பார்த்தார். கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு என்னவாகும் என்று திருஷ்டாந்தமாயிருப்பதற்கு தேவன் தன்னில் காட்டிய நீடிய பொறுமையையும் இரக்கத்தையும் நினைத்துப் பார்க்கிறார். இப்போது பவுலினால் தேவனைத் துதித்துப் போற்றாமல் இருக்க முடியவில்லை. இதுதான் நடந்தது.
இந்த தேவன்தான் நம்முடைய தேவனும். அவரிடமிருந்து நாம் பெற்ற நன்மை கள் ஏராளம். அதிலும், பாவிகளில் அல்ல; பிரதான பாவிகளிலும் பிரதான பாவிகளாகிய நம்மில் அவர் காட்டிய அன்பும் இரக்கமும் போதுமே, வாழ்நாளெல்லாம் நமது இரட்சகரைப் போற்றித் துதிக்க! அப்படியிருக்க, அந்த நன்றியும் துதியும் நம்மில் பெருகியிருக்கிறதா? அல்லது இன்னமும் குறைவுகளையும் துயரங்களையும் நினைத்து வேதனைப்படுகிறோமா?
“முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:10).
ஜெபம்: கிருபையாலும் நன்மையாலும் என்னை முடிசூட்டிய இரட்சகரே, பாவச் சேற்றினின்று எங்களைத் தூக்கி எடுத்து, உம்முடைய பிள்ளையாய் மாற்றினபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.