கிறிஸ்துவின் நேசம்

தியானம்: செப்டம்பர் 20 புதன்; வேத வாசிப்பு: மத்தேயு 26:20-25: 45-50

“இயேசு அவனை (யூதாஸை)  நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்” (மத்தேயு 26:50).

‘இரட்சிக்கப்பட்டவர்களாம்; ஆனால், வருத்தப்படுக்கையில் இருக்கிற தாயைக் கவனிக்க நேரமில்லையாம். இதுவா மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ தன்மை? நான் வாழும் கிறிஸ்தவ வாழ்வு எனக்குப் போதும்.’ என்று மனக்கிலேசத்துடன் ஒரு கிறிஸ்தவ சகோதரி கூறினார். கிறிஸ்தவம் மதம் அல்ல; கிறிஸ்துவுடனான வாழ்வு. இரட்சிப்பு கேலியாகக்கூடாது.

தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று தெரிந்திருந்தும், யூதாஸை இயேசு சத்துருவாக எண்ணினாரா? இல்லை. யூதாஸே தன்னைச் சத்துருவாக்கிக்கொண்டான். இயேசுவோ சத்துருவாகிய யூதாஸை சிநேகித்தார் என்பதைவிட, தனக்குச் சத்துருவாவான் என்பதை முன்னரே அறிந்திருந்தும், அவனை முன்கூட்டியே சிநேகித்தார் என்பதுதான் உண்மை. மனுஷரின் இருதயத்தை அறிந்திருந்த இயேசு (யோவா.2:25) யூதாஸ் செய்யப்போவதை அறியாமல் இருந்திருப்பாரா? அப்படியிருந்தும், அவனையும் தமது சீஷனாகத் தெரிந்தெடுத்தார்! மூன்று வருடங்களாக யூதாஸ் இயேசுவோடே இருந்தான். அவனுக்கு அநேக தருணங்கள் கிடைத்தன. இறுதியில், அவன் அவரை முத்தம் செய்தபோது, இயேசுவோ, ‘சிநேகிதனே’ என்றார்! இதைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? அந்தவேளை மனுஷனுக்குரிய உணர்வுகளுடனிருந்த இயேசு எவ்வளவாய் உடைந்திருப்பார். ஆனால் இதுவே மெய்யான அன்பு. இதுவே முழுமையான மன்னிப்பு.

முன்கூட்டியே தெரிந்திருந்தும் இயேசு யூதாஸை சிநேகித்தார். நாமோ எதுவும் தெரியாமலேயே பிறரை நேசிக்கத் தயங்குகிறோம். அடுத்தது, நாம் நேசித்த ஒருவர் நமக்கு தவறிழைத்துவிட்டால், ‘நம்பிக்கைத் துரோகி’ என்று முத்திரை குத்திவிடுகிறோம். தேவபிள்ளையே, தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று தெரிந்தும் நேசித்த கிறிஸ்துவுக்குள்ளிருந்த அந்த அன்பு நமக்குள் ஊற்றெடுப்பது கடினம்தான். ஆனால் அன்பு இல்லாத மன்னிப்பு முழுமையான மன்னிப்பு அல்ல. ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அது மிகவும் குறைவானதுதான். நம்மைக் குறித்துச் சிந்திப்போம். நானும் நீங்களும் ஆண்டவரைத் துக்கப்படுத்துவோம் என்று தெரிந்திருந்தும் நம்மை முன்கூட்டியே மன்னித்து, அவர் நமக்காகத் தம்மையே பலியாகக் கொடுத்தாரே. மன்னிப்பு இல்லாமல் இயேசுவின் மரணம் நிகழ்ந்திருக்குமா? இதை நினைக்கும்போதாவது நமது உள்ளத்தில் அந்த அன்பு ஊற்றெடுக்கக்கூடாதோ! ஏன் வீணான வழக்குகளும் வாதங்களும்? ஏன் விரோதங்களும் பழிவாங்கல்களும்? இவற்றை நாம் விட்டுவிடுவோம். நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள் அல்லவா?

“அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார்” (லூக்கா 23:34).

ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, விரோதியையும் மன்னித்து நேசிக்கும் கிறிஸ்துவின் பண்பை நாங்களும் பெற்றுக்கொள்ள இன்றே உம் பாதம் வருகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.