எதுவும் வீணுக்கல்ல!
தியானம்: அக்டோபர் 18 புதன்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 17:31-58
“இவ்விதமாக தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, …கொன்றுபோட்டான். தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது” (1சாமு. 17:50).
திடீரென்று செயற்படவேண்டிய சந்தர்ப்பங்களுமுண்டு; ‘ஆயத்தம்’ என்று ஒன்றில்லாமல் செயற்படக்கூடாத சமயங்களும் உண்டு. அதேசமயம், திடீரென்று நேரிடுகின்ற காரியங்கள், பெரிய காரியங்களுக்கு நம்மை ஆயத்தப் படுத்துகின்றதாகவும் அமைந்து விடுகிறது.
ஒரு பெலிஸ்தனை எதிர்கொள்ள நேரிடும் என்று நினைத்திராத தாவீது, தன் அப்பா சொற்கேட்டு அண்ணன்மாரைப் பார்க்கச் சென்றான். போனவன் தன் பணி முடிந்ததும் திரும்பியிருக்கலாம். என்ன நடக்கிறது என்று விசாரிக்க முற்பட்டவன், தான் பெற்ற வெற்றிகளைக் கூற, பின் சவுலின் சம்மதமும் கிட்டியது. இவையெல்லாம் எப்படி நடந்தது? போர்க்கவசம் அணிந்துசெல்ல ஆயத்தம் தேவை (வச.39). ஆனால், இஸ்ரவேல் சேனையையே நடுங்கவைத்த ஒரு பெலிஸ்தனை எதிர்கொள்ள ஆயத்தமின்றி எப்படிப் போனான்? ஆம், அந்த எதிர்பாராத சமயத்தில் தேவன், தாவீதை ஒரு ஆயத்தத்தினூடாக நடத்தினார். “பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்பு வித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான் (வச.37). இஸ்ரவேலின் தேவனில் அவன் கொண்டிருந்த விசுவாசம் இன்னமும் உறுதிப்பட இச்சந்தர்ப்பத்தைத் தேவன் அவன் வாழ்வில் அனுமதித்திருந்தார்.
தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வில் எதுவும், அது நன்மையாகத் தெரியலாம்; அல்லது, இது ஏன் என்று எண்ணுமளவுக்கு நமது கண்களுக்குத் தீமை போலவும் தெரியலாம், எதுவானாலும் வீணுக்கு நேரிடுகிறதில்லை. தற்சமயம் என்று எதுவும் நமக்கு இல்லை. எல்லாமே தேவதிட்டப்படியே நடக்கின்றன என்ற விசுவாசம் நமக்கு வேண்டும். சிங்கமும் கரடியும் ஆடுகளைத் தாக்க வந்திருக்காவிட்டால் இஸ்ரவேலின் தேவனுடைய பாதுகாப்பை தாவீது அனுபவித்திருக்க வாய்ப்பேது? கோலியாத்தைச் சந்திக்க அதுவே அவனுக்கு பயிற்சியாயிருந்தது. கோலியாத்தைச் சந்தித்ததும் தேவதிட்டம்தான். அவனுக்குள் இருந்த விசுவாசம் திடப்படவும், எதிர்காலத்துக்காக அவன் தயார்ப்படவும் இது ஏதுவாயிற்று. அன்று தாவீதுக்கு விளங்காத இந்த இரகசியம் இன்று நமக்கு விளங்குகிறது. அப்படியிருக்க, நெருக்கடிகளும், எதிர்பாராத சம்பவங்களும் நேரிடும்போது இன்று நாம் சோர்ந்துபோகலாமா? கர்த்தர் நம்மைப் பெரியதொரு காரியத்துக்காக ஆயத்தமாக்குகிறார் என்று நம்பி, விசுவாசத்தில் உறுதியாய் நின்று ஜெயம்பெறுவோமாக.
“நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்” (2தீமோ.1:12).
ஜெபம்: ஜெயம் தரும் தேவனே! என் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினூடாகவும், தாவீதைப்போல ஒரு பெரிய காரியத்துக்காக நீர் என்னை ஆயத்தப்படுத்துகிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.