தேவசித்தம் செய்வதே…
தியானம்: அக்டோபர் 29 ஞாயிறு;
வேத வாசிப்பு: 1சாமு.13:13-14; அப்.13:16-23
“…தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங்கொடுத்தார்” (அப்.13:22).
சாமர்த்தியம், காரியசித்தி, அறிவு எல்லாம் இருந்தும், கீழ்ப்படியாத மாணவன், பெற்றோரை மதிக்காத பிள்ளை இவர்களைக் குறித்து பெருமைப்பட முடியுமா? உலகமே ஒரு மனுஷனிடம் எதிர்பார்க்கின்ற அடிப்படைக் குணாதிசயம் “கீழ்ப்படிதலாக” இருக்கும்போது, அந்தக் “கீழ்ப்படிதலை” தேவாதி தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தவறாகுமா?
தாவீது, அப்பழுக்கற்றவன் அல்ல. அவனும் பாவம் செய்தான்; தவறு செய்தான்.தனக்கும் தன் குடும்பத்துக்கும், தேவனுடைய நாமத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தினான். அப்படியிருந்தும், “என் இருதயத்துக்கு ஏற்றவன்” என்று தேவனிடமிருந்தே நற்சாட்சி பெற்றான் என்றால் அது எப்படி? வயலில் இருந்தபோதுதான் தேவன் தாவீதைக் கண்டாரா, இல்லை. சவுல் கீழ்ப்படியாமற் போனதால் தேவன் தாவீதைத் தேடிக் கண்டுபிடித்தாரா, இல்லை. தேவனுடைய அநாதித் திட்டங்கள், அவர் மனுக்குலத்தின் மீட்புக்காகக் கொண்டிருந்த மனநோக்குகள், இவற்றில் தேவன் தாவீதுக்கு அநாதியாய் ஒரு இடம் வைத்திருந்தார். அது தேவ கிருபை. அதற்காக அவனுக்குள் பாவ சுபாவம் இருக்கவில்லை எனலாமா, இல்லை. மேலும், ‘தன் இருதயத்துக்கு ஏற்றவன்’ என்பதால் கர்த்தர் அவனது பாவத்தை மறைத்து வைக்கவில்லை. சந்ததி சந்ததியாக அறிந்து, சந்ததிகள் சரியாக நடக்கவேண்டும் என்பதற்காக அவற்றை எழுதியே வைத்துவிட்டார். தாவீது செய்தது என்ன? கதறி அழுது, மறுபடியும் தேவனைப் பற்றிக்கொண்டான்; தனக்குள்ளான இயல்பான குணநலன்கள் மாசடையவிடவுமில்லை; தேவனைப் பற்றிப்பிடித்திருந்த தன் கைகளைத் தாவீது தளர்த்தவேயில்லை. அதுதான் இரகசியம். அதனால்தான், “எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” என்று தேவனிடத்திலேயே நற்சாட்சி பெற்றவனானான். சவுல் தோற்றுப்போனதும் இந்த இடத்தில்தான்.
நம்மிலும் பாவசுபாவம் உண்டு; என்றாலும், நமக்காகவும் தேவன் அநாதியாய் ஒரு திட்டம் வைத்திருந்ததால்தான் நாம் இன்று தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் (எபே.1:4). பின்னர், சுயஇஷ்டத்துக்கு வாழுவது எப்படி? தாவீதுக்கும் கிடைக்காத “விசேஷித்த நன்மை” நமக்குண்டு. அப்படியிருக்க, ‘நாம் மனுஷர், இப்படித்தான் இருப்போம்’ என்று சொல்லமுடியாது. தேவனைப் பிரியப்படுத்த பெரிய சாதனைகள் படைக்கவேண்டியதில்லை. தேவ சித்தத்தைச் செய்தாலே போதும். அதைத்தான் தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார்.
“தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவான் 2:17).
ஜெபம்: அன்பின் தேவனே! “உம் சித்தம் தேவா, நீர் நடத்தும்”. இதுவே எனது இருதயத்திலிருந்து எழும்பும் வாஞ்சையுள்ள ஜெபம். ஆமென்.