ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2017)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்வருடத்தின் இறுதிவரையிலும் கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். நாம் அறிந்துவருகிறபடி இந்நாட்களில் வாதைகளும் கொள்ளை நோய்களும் பெருகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டிலே டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துககொண்டே இருக்கின்றன. இந்த நமது மாநிலத்திலே காய்ச்சல் பரவாதபடியும் தேவன் தம்முடைய பிள்ளைகளை கண்மணியைப்போல் காத்தருளவும் நாம் அனுதினமும் கர்த்தருக்கு முன்பாக நின்று மன்றாட வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20).

நவம்பர் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், டிசம்பர் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் அனுதின வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாகவும் கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்கிறதாகவும் இருக்கும். நாங்களும் அதற்காக ஜெபிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

சத்தியவசன விசுவாச பங்காளர்கள் நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்