நமக்கு ஒத்தாசை தரும் தேவன்

தியானம்: 2017 நவம்பர் 10 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 121:1-6

“…இதோ ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். …நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்” (யோசுவா.5:13,14).

பலவேளைகளிலும் நமக்கு முன்னே இருக்கின்ற உதவியை ஒத்தாசைகளைக் காணமுடியாதபடி கடினமான சூழ்நிலைகள் நமது கண்களை மறைத்துப்போடுகிறது. தேவன் தமது பிள்ளைகளை ஒருபோதும் தனியே தவிக்கவிடுகிறவர் அல்ல. நமது கண்கள் எப்பொழுதும் நமக்கு ஒத்தாசை தருகின்ற கர்த்தரை ஏறிட்டுப் பார்க்க வேண்டும்.

எரிகோவின் வெளியில் நின்றிருந்த இஸ்ரவேல் இந்த எரிகோ மதிலை எப்படி தகர்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், யோசுவா தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான் என்று காண்கிறோம். அங்கே ஒரு நாளும் கண்டிராத ஒருவர் அந்த வெளியிலே நின்றுகொண்டிருந்தார். கையிலே ஒரு பட்டயம். இப்போது இவர் யார் பக்கத்து மனுஷன் என்று அறியும்படி யோசுவா அவரை அணுகினான். அவர் சாதாரணமானவரல்ல; “கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்று கண்டுகொண்டதும், மறுசிந்தனையின்றி தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டான் யோசுவா. என்ன ஆச்சரியம்! கர்த்தர் ஒரு தேவ தூதனை அனுப்பவில்லை. சேனையின் அதிபதியானவரே, தாமே தமது ஜனத்துக்கு ஒத்தாசையாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

நம்மை அழைத்தவர் உண்மையுள்ள தேவன். இதனை நாம் அடிக்கடி மறந்து விடுவதனால்தான், எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது நமது பார்வையை நமக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதத்தை நோக்கித் திருப்பாமல், சூழ்நிலைகளின் மீது செலுத்தி, “கர்த்தாவே, எனக்கு இரங்கும், என்னை நடத்தும், சத்துருவுக்கு விலக்கிக் காத்துக்கொள்ளும்” என்றெல்லாம் கலங்கி நிற்கிறோம். இதனால் நமக்கு தேவன் அருளும் ஒத்தாசைகளை உதவிகளைக்கூட காணமுடியாது தவிக்க நேரிடுகிறது. இதனாலேதான் நம்மில் அநேகர் இன்றும் கலங்கி சோர்ந்துபோய் நிற்கிறோம். வியாதியோ வேதனையோ எந்த சூழ்நிலையிலும் தேவன் நமக்கு ஒத்தாசையாய் இருக்கிறார். நாம் அதைக் காணவேண்டுமானால், உணரவேண்டுமானால் நமது கண்கள் எப்பொழுதும் உன்னதத்தை ஏறிட்டுப் பார்க்கவேண்டும். தேவபிரசன்னத்தில் நாம் தாழவிழுந்து பணியவேண்டும். அதைவிட்டு, சூழ்நிலைகளையே பார்த்து நிற்போமானால், நமது பயணத்தைத் தொடரவே முடியாது. தேவன் நமது பலத்த அரண்; சேனைகளின் அதிபதியே நமது யுத்தங்களை நடத்துகிறவர். பின்னர் ஏன் கலக்கம்?

“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் புமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்கீதம் 121:1,2).

ஜெபம்: ஆண்டவரே, மனிதர்களின் ஒத்தாசை அற்றுப்போனாலும் வானத்தையும் பூமியையும் படைத்த உம்மிடத்திலிருந்து எங்களுக்கு ஒத்தாசை வரும் என்ற உறுதியையும், விசுவாசத்தையும் தந்திருக்கிறீர். உமக்கு நன்றி. ஆமென்.