முன்செல்லும் தேவசமுகம்
தியானம்: 2017 நவம்பர் 14 செவ்வாய்;
வேத வாசிப்பு: யாத்திராகமம் 33:1-14
“ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்…” (யோசுவா 6:4).
ஐம்பத்திரண்டு பேர்கள் இணைந்த ஒரு குழுவாக பிற நாட்டுக்குச் சுற்றுலாப் பயணம் சென்றோம். எங்களுக்கு வழிகாட்டும் சுற்றுலா ஸ்தாபனம் அனைவரையும் அழைத்து, பயணிகளைத் தலைமை தாங்குகிறவரை அறிமுகம் செய்தது. மாத்திரமல்ல, எல்லோருக்கும் சிவப்பு நிறத்தில் ஒரு தொப்பி உட்பட பல ஒரே மாதிரியான பொருட்களைத் தந்தனர். “பேருந்திலிருந்து இறங்கியதும் இந்தத் தொப்பியை அணியவேண்டும். எங்களது தலைவரும் இந்தச் சிவப்புத் தொப்பி அணிந்திருப்பார். எங்கேயாவது கூட்டத்தில் வழி மாறினாலும் இந்தச் சிவப்புத் தொப்பி தெரிகிற இடத்திற்கு வந்துவிடவேண்டும்” என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. முதலில் இது வேடிக்கையாக இருந்தாலும், தலைவனின் சிவப்புத் தொப்பி எங்களுக்கு எவ்வளவு உதவியாயிருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்துகொண்டோம்.
எரிகோ மதிலைத் தகர்த்தெறியும்படி ஆலோசனை கொடுத்த தேவன், ஆசாரியர் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்ல உத்தரவிட்டார். ஏனெனில், அதுவே தேவ சமுகத்தின் அடையாளம். எக்காளம் யுத்தத்தை அறிவிக்கிற சின்னம். எக்காளங்களை ஊதிக்கொண்டு ஆசாரியர் செல்லும்போது, இதோ, சேனைகளின் கர்த்தர் தம்முடன் வருகிறார் என்ற உறுதி அவர்களுக்கு உண்டாயிருந்தது. உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்தமானது. அதனுள் தேவனுடைய கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகை இருந்தது. ஆசாரியர் தவிர யாரும் அதன் கிட்டக்கூட நெருங்க முடியாது. அந்தப் பெட்டியை இழந்தால் தேவனுடைய சமுகத்தை இழந்ததற்குச் சரியாயிருந்தது. அந்தப் பெட்டியைத் தவறாகப் பயன்படுத்தினவர்கள் செத்துமடிந்தார்கள். கர்த்தருடைய சமுகம் அவர்களுடன் இருந்ததை அன்று உறுதி செய்தது அந்த உடன்படிக்கைப் பெட்டிதான். தாவீது ராஜாவானதும், தொலைந்த நிலையிலிருந்தப் பெட்டியைத் திரும்பவும் எடுத்து வந்ததும், அதற்கான கனத்தைக் கொடுத்ததும் அதற்காகத்தான்.
தேவசமுகம் நம்முன் செல்லாவிடின் நாம் ஒருபோதும் ஜெயமுள்ள வாழ்வு வாழ முடியாது. இன்று நமக்குப் பெட்டி இல்லை. ஆனால், அவருடைய சமுகம் என்றும் நம்முடன் இருக்கிறது என்பதற்கு இன்று நமக்கு விசேஷித்த அடையாளங்கள் அவசியமில்லை. தினமும் தேவ வார்த்தையை வாசித்துத் தியானித்து ஜெபிக்கும்போது நாம் தேவசமுகத்தை உணருகிறோம். நாம் தேவ பிள்ளைகளாக ஒன்று சேர்ந்து தேவனை ஆராதிக்கும்போது தேவசமுகத்தை அனுபவிக்கிறோம். எந்நிலையிலும் கர்த்தர் நம்முடன் இருப்பதை உறுதிசெய்து கொண்டோமானால், நாம் தடுமாறவேண்டியதில்லை.
“அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்” (யாத்.33:14).
ஜெபம்: ஆண்டவரே ஒவ்வொரு நாளிலும் தேவசமுகத்தையும் பிரசன்னத்தையும் உணரும் உன்னத பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.