மாறுதலுக்குக் காரணர்

தியானம்: 2017 டிசம்பர் 4 திங்கள்; வேத வாசிப்பு: யோவான் 2:1-11

“அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்” (யோவான் 2:4).

திருமணம் முடிக்க இருந்த இருவர் ஆலோசனைக்காக தேடி வந்தனர். பின்னர், திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் இருவரும் தனித்தனியே தத்தமது குடும்பத்தினருடன் பிரச்சனைகளைக்குறித்து பேசுவதற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பினோம். ஆனால், தொடர்ந்து அவர்களுக்காக ஜெபித்தோம். மீண்டும் ஒருவருடம் முடிந்து அவர்களது திருமணநாள் வந்தபோது, அந்தப் பெண்ணுடன் பேசுவதற்காக தொலைபேசியில் அழைத்தேன். அப்போது அவளது தந்தை, “அவள் இங்கே இல்லை. புருஷன் வீட்டில் இருக்கிறாள். அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்” என்றார். ஆண்டவரே மாறுதல்களுக்குக் காரணர்.

கலியாண வீட்டிற்கு வந்தவர்களைச் சரியாக உபசரிக்கவேண்டியது ஒரு கடமை. அதிலும் திராட்சரசம் குறைவுபட்டால் உபசரிப்பிலும் குறைவு ஏற்பட்டுவிடும். அக்குறைவை அன்று ஆண்டவர் நிவிர்த்தி செய்தார்; தண்ணீரை சுவையான திராட்ச ரசமாக மாற்றிக்கொடுத்தார். அவர்கள் கொடுத்த திராட்ச ரசத்தைவிட ஆண்டவர் மாற்றிக்கொடுத்த திராட்சரசம் சுவையானதாய் இருந்ததை அதைப் பருகினவர்கள் ருசித்தார்கள். திராட்ச ரசம் தீர்ந்துவிட்டதே என்று யாராவது எழுந்துபோயிருந்தால், அந்த சுவையான திராட்சரசத்தை அவர்கள் இழந்துபோயிருப்பார்கள். ஆண்டவரின் ஆசியைப் பெறவேண்டுமானால் பொறுத்திருத்தல் அவசியம். இதை நாம் உணர்ந்திடவேண்டும்.

அருமையானவர்களே, நமது வாழ்விலும் எதிர்பாராத மாறுதல்களை ஏற்படுத்தவும், நாம் வியக்கும் வகையில் நம்மை வழிநடத்தவும் தேவன் வல்லவராக இருக்கிறார். இதை நாம் நம்புகிறோமா? தேவனின் வழிநடத்துதலை எதிர்பார்க்கின்ற நாம் அவரது வேளைக்காகக் காத்திருக்கவும் தயாராக இருக்கவேண்டும். இன்றைய அவசரமான உலகில் ஆண்டவரும் அவசரமாக உடனடியாக செயற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. ஆண்டவரின் வழிநடத்துதல்கள் எப்போதும் அமர்ந்து காத்திருப்பதற்குரியதாகும். ஆண்டவரின் வேளைக்காகப் பொறுமையோடு காத்திருக்கும்போது, ஏற்றகாலத்தில் நாம் நினைப்பதற்கும் அதிகமான ஆசீர்வாதங்களையும், வழிநடத்துதல்களையும் அவர் தருவார்.

நமது வாழ்வில் நாம் இதை உணர்ந்திருக்கிறோமா? ஆண்டவரின் வேளைக் காகப் பொறுமையாயிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட அனுபவம் நமக்கு உண்டா?

“நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்” (சங்.46:10).

ஜெபம்: தேவனே, உமது வேளைக்காகப் பொறுமையோடு காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு என் வழிகளைத் தேடி உமது ஆசீர்வாதங்களை இழந்து போன தருணங்களுக்காக வருந்துகிறேன். ஆமென்.