தரிசனமா அல்லது விசுவாசமா?
அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2018)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி : ஏசாயா 37:1-38
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (ஏசாயா.37:36).
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி. 11:1). இதை ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் 36 மற்றும் 37ஆம் அதிகாரங்களில் தரப்பட்ட நிகழ்வுகள் அழகாக விளக்குகின்றன. அசீரிய அரசர் சனகெரிப் யூதாவின் சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்துக்கொண்டார். எருசலேமுக்கு தென்மேற்கேயுள்ள லாகீஸ் என்ற பட்டணத்தை முற்றுகையிட்டார். ரப்சாக்கே என்னும் அதிகாரியின் தலைமையில் ஒரு பெரிய சேனையை அனுப்ப திட்டமிட்டார். யூத நாட்டு சேனை வீரர்களை ரப்சாக்கே அதைரியப்படுத்தினால் யுத்தம் இல்லாமலேயே எசேக்கியா ராஜா சரணடைந்து விடுவார் என அசீரியர்கள் எண்ணினர்.
அதன்படியே ரப்சாக்கே யூதாவின் சேனைகளிடம் அவர்கள் வெற்றி பெற முடியாததன் காரணத்தை விளக்குகிறார். நெரிந்த நாணல் கோலைப் போன்று இருக்கும் எகிப்திய அரசர் பார்வோனை நம்புவது வீண். வலிமை வாய்ந்த அசீரிய சேனைக்கு எதிராக வந்த அனைத்து நாட்டையும் அவர் களது தெய்வங்கள் தப்புவிக்கவில்லை. இஸ்ரவேல் தேவனையும் நம்புவதில் அர்த்தமில்லை என்று சோர்வான வார்த்தைகளைக் கூறினார். எசேக்கியாவும் அவனது ஜனங்களும் என்ன செய்ய முடியும்? எசேக்கியாவின் ஊழியக்காரர் தேவமனிதனாகிய ஏசாயாவிடம் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டனர்.
அவர்களிடம் தம்மை நிந்தித்த ரப்சாக்கேயை தேவன் பார்த்துக் கொள்வார். அவருடைய நிந்தனை சொற்களுக்காக அசீரிய சேனைகளை தேவன் அழிப்பார் என்றும் ஏசாயா உறுதியளித்தார். அசீரியர்களை அழிப்பதன் மூலம் நீர் ஒருவரே கர்த்தர் என்பதை பூமியின் இராஜ்யங்களெல்லாம் அறியும் (ஏசாயா 37:20). அசீரியா ராஜா தேவனுடைய பரிசுத்த நகரத்துக்குள் வருவதுமில்லை, அதன் மேல் அம்பு எய்வதுமில்லை என்றும் ஏசாயா முன்னுரைத்தார். தனக்கு விரோதமாகச் சொன்ன நிந்தனை சொற்களுக்காக தேவன் ஆச்சரியமான முறையில் யூதாவை பாதுகாப்பார். எசேக்கியா அரசரும் அவருடைய மக்களும் ஒரு விசுவாச வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால் அந்த விடுதலை வரும்விதம் அவர்களுக்குக் கூறப்படவில்லை. அவர்கள் தேவனை முழுதும் விசுவாசிக்க வேண்டும்.
அன்று இரவிலேயே தீர்க்கதரிசி முன்னுரைத்த அந்த அழிவு நேரிட்டது. அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (ஏசாயா37:36). யூத ஜனங்கள் சந்தேகம் எண்ணம் கொண்டிருந்தாலும் தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டார். அதிகாலையில் அவர்கள் எழுந்திருந்து பார்த்தபொழுது இலட்சத்தெண்பத்தையாயிரம் அசீரியர்களின் பிரேதர்களைக் கண்டனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்த நகரத்துக்கு விரோதமாக எழும்ப வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் நமது தேவன் வாக்குறுதியைக் காப்பவர்.
1952ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் நாள் ஃபிளாரன்ஸ் சாட்விக் என்ற பெண்மணி காத்லினா தீவிலிருந்து கலிபோர்னியா கடற்கரையோரத்துக்கு நீந்திச்சென்று சாதனை படைக்க முயன்றார். அந்த தூரம் அவருக்கு பெரிய சவால் அல்ல. ஆனால் பசிபிக் கடலின் பனியானது எலும்பையும் நடுக்க வைத்தது. அது மட்டுமல்லாது அடர்ந்த மூடுபனியானது அந்த பகுதி முழுவதையும் கரையைக் காணாத அளவுக்கு மூடிவிட்டது. சுமார் 15 மணி நேர நீச்சலுக்குப் பிறகு தன்னுடைய இலக்கை அடைய அரைமைல் தூரம் இருக்கும் பொழுது அவர் தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டார். கரைமட்டும் என் கண்ணில் தென்பட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்று பின்னர் அவர் ஒரு நிருபருக்கு பேட்டி அளித்தார்.
சில காலம் கழித்தபின்னர் தனது முயற்சியை மீண்டும் துவக்கினார். பனி கடற்கரை முழுவதையும் மூடியிருந்தாலும், கண்ணால் தனது இலக்கைக் காண இயலாவிட்டாலும் அவர் தனது நீச்சல் நிகழ்வை வெற்றிகரமாக சாதித்து முடித்தார். ஏனெனில் கரை அருகிலேயே உள்ளது என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டார். அந்த நம்பிக்கை அவரை தைரியமாக நீந்தச் செய்து இலக்கை அடைய உதவியது. உண்மையில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமான கால வித்தியாசத்தில் ஆண்களுடைய முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.
சில வேளைகளில் நாமும்கூட நமக்காக கிரியை செய்யும் தேவனுடைய கரத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாததால் நம்முடைய இலக்கை அடையாமல் போகிறோம். நம்முடைய இலக்கை அடைய முழு விருப்பம் கொண்டிருந்தாலும் நாம் அதனைக் காணமுடியாதவாறு சந்தேகம் என்னும் பனி தடுத்து விடுகிறது. ஆயினும் தேவனை நம்பி நமது இலக்கை நோக்கி நாம் ஓடும் பொழுது அதிகாலையில் நமது இலக்கு அடைந்ததையும் எதிரியின் பிரேதங்களால் போர்க்களம் நிரம்பியிருப்பதையும் நாம் காணலாம். காரிருளிலும் நாம் தேவனை நம்ப வேண்டும். விசுவாசம் என்பது காணப்படாதவைகளின் உறுதி என்பதை நாம் அறிய வேண்டும்.
அதிகாலைப் பாடல்:
தேவன்மேல் உள்ன ஆழமான விசுவாசம்
எத்தகைய துன்பங்களைக் கண்டும் தளராது;
அநேக எதிரிகளின் எதிர்ப்புக்கும் அஞ்சாமல்
அவரையே நம்பி அசையாமல் இருக்கும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை