விடியற்காலத்தில் உண்டாகும் களிப்பு!
அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2018)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி : சங்கீதம் 30:1-12
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங்.30:4,5).
அநேக சங்கீதங்களில் காணப்படுவது போன்றே தாவீது 30ஆம் சங்கீதத்திலும் தான் தேவனைத் துதிப்பதாகக் கூறியுள்ளார். மிகப்பெரிய விடுதலையை அவர் அனுபவித்திருந்ததால் தேவனுக்கு நன்றியுள்ளவராய் இருக்கிறார். தனது ஆபத்தில் அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஆண்டவர் அவரைக்கேட்டருளி அவரது ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்டெடுத்தார்.
எனவேதான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங் காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5) என்று ஆச்சரியப்படுகிறார்.
நாமும் அநேக வேளைகளில் இவ் வசனத்தின் உண்மையை அனுபவித்திருக்கிறோம் அல்லவா! பாரமான அழுத்தங்களுடன் தாங்க முடியாத கவலைகளுடன் இரவில் நித்திரைக்குச் செல்லும்பொழுது சமாதானமில்லாமையால் உறக்கம் வராது புரண்டு புரண்டு படுக்கிறோம். நமது சரீரமும் ஓய்வு எடுப்பதில்லை. உதவியற்றவர்களாய் ஒரு பரிதாபமான நிலையை உணருகிறோம். பலமணி நேரமாய் கஷ்டப் பட்டபின் சிறிதே கண்ணயர்வோம்.
கிறிஸ்தவ வாழ்வும் வியாதி – சுகம், பலவீனம் – பலம், அவமானம் – புகழ், தேவை – நிறைவு என்று பலவிதமான மேடுபள்ளங்களைக் கொண்டது. சில நேரங்களில் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற உரிமையின் நன்மைகளை அனுபவிக்கிறோம். சில வேளைகளில் அந்த சலுகைகளால் சிலுவையை சுமக்கிறோம். சில வேளைகளில் தேவனுடைய கிருபை என்னும் தென்றல் காற்று நாம் வாழ்வில் வீசுகிறது.
சில வேளைகளில் பாதகமான வட காற்று வீசுகிறது. நடுக்கும் குளிர்ச்சியான வடகாற்று நமது இரவை நித்திரையில்லாமல் செய்யும்பொழுது நாம் சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் என்ற வாக்குறுதியைப் பற்றிக்கொள்ளலாம். தமது பிள்ளைகளின் துன்பங்களுக்கும் ஓய்வின்மைக்கும் தேவன் எப்பொழுதும் ஒரு கால எல்லையை வைத்திருக்கிறார்.
நித்திரையில்லா இரவுக்குப் பின்னர் நாம் எழும்பொழுது இரவின் குழப்பங்களுக்கு ஒரு சிறிய தெளிவு கிடைத்திருக்கும். நமது எண்ணங்களைத் திரும்பிப் பார்க்கும்பொழுது நாம் உறக்கம் கொள்ளாமல் இருந்ததற்கு காரணமும், நாம் உதவியற்று பரிதாபமான நிலையில் இருந்ததற்கும் ஒரு விடை கிடைக்கும். கையாளக்கூடாதவையாக இருந்த காரியங்களுக்கு தெளிவு கிடைக்கும். இம்மாறுதலுக்குக் காரணம் யாது? நம்முடைய கவலைகளை தேவன் மீது வைத்து அவர் கவனித்துக்கொள்வார் என்ற எண்ணங்களைக் கொண்டு வரும் காலை நேர மகிழ்ச்சியாகும் (1 பேதுரு 5:7; யோபு 33:26; ஏசாயா 26:20; 54:7).
இரவின் கவலைகள் தற்காலிக மானது மாத்திரமல்ல; அவை தேவனிடத்திலிருந்து வரும் பரிசும் ஆகும். ஆத்துமாவை அதிரவைக்கும் அனுபவங்களை சகித்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. கிறிஸ்தவ வாழ்வில் அழுகையின் நாட்கள் நிச்சயம் உண்டு. கண்ணீர் விடும் இரவுகள் அநேகமாயும் அடிக்கடியும் காணப்படும். ஆனால் காரணமில்லாமல் அவை நீண்டு காணப்பட தேவன் அனுமதிப்பதில்லை.
இலண்டன் மாநகரிலுள்ள தூய பேதுரு பேராலயத்தின் மேல் விதானத்தை சர்.ஜேம்ஸ் தார்ன்ஹில் என்பவர் வண்ணந்தீட்டினார். அதனை அவர் ஒரு தொங்கு பலகை மீது நின்று செய்யவேண்டும். ஒருநாள் மிகக் கடினமான ஒரு பகுதியை மிகவும் சிரத்தையுடன் செய்து முடித்தார். தன்னுடைய அழகிய அவ்வேலைப்பாட்டை ஆராய்வதற்கு மெதுவாக பின்னோக்கி நகர்ந்தார். இன்னும் ஓரடி நகர்ந்தால் சர்.ஜேம்ஸ் கீழே விழுந்து மரணத்தை சந்திப்பார் என்பதை அறிந்த அவருடைய உதவியாளர், மிக விரைவாக ஒரு தூரிகையை எடுத்து அப்படத்தின் மீது வண்ணத்தை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த கலைஞர் கலங்கியவராய் கதறிக்கொண்டு முன்னால் நகர்ந்தார். அவருடைய உதவியாளர் பின்னர் நிலைமையை விளக்கிய பொழுது சர் ஜேம்ஸ் நன்றியுடன் கண்ணீர் விட்டார்.
ஒரு மருத்துவர் தமது நோயாளிகளுக்குத் துல்லியமாய்ப் பரிந்துரை செய்யும் அக்கறையைவிட இருமடங்கு தேவன் நம்முடைய நித்திரையில்லா இரவுகளின் நிலையை அறிந்து பதிற் செய்பவர். ஒருவேளை விடியலின் வெளிச்சம் அதிக தொலைவில் இருப்பது போன்று நமக்குத் தெரியும். ஆனால் தேவன் வாக்களித்த மகிழ்ச்சியுடன் காலை நிச்சயம் வரும். தேவனுடைய வார்த்தையை நீங்கள் நம்பலாம்.
அதிகாலைப் பாடல்:
பாரங்கள் அழுத்த, வேதனைகள் பெருகிட
கவலைகளில் நான் மூழ்கி அழும்பொழுது,
பகல்வேளையும் சோர்வுற்று நீண்டு காணப்படும்பொழுது
என் இதயத்தின் வேதனையை இயேசு கவனிப்பாரா?
ஆம்; அவர் அறிவார் என்பதை நான் அறிவேன்.
என் வேதனை அவர் இதயத்தைத் தொட்டது.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை