நியாயத்தீர்ப்பா! எனக்கா!

தியானம்: 2018 ஜூலை 26 வியாழன்; வேத வாசிப்பு: ஓசியா 4:1-7

“…எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள். அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்” (ஓசி.4:7).

இந்த முதிர்வயதிலும் இயலாமையிலும் நீண்ட பயணம் வேண்டாம் என்றால், ஒரு அம்மா, “என் ஆண்டவர் எனக்கு ஒரு தீங்கும் வரவிடமாட்டார்” என்றார். தன்னுடைய வைராக்கியத்திற்குத் தேவனை துணை சேர்ப்பது அவர்களது பேச்சிலே தொனித்தது. அப்படியே பயணித்து வியாதியிலும் விழுந்தார்கள். கர்த்தர் புத்தி ஞானம் எல்லாம் தந்திருக்கிறார். அப்படியிருக்க தேவ அன்பை நாமே சோதித்துவிட்டு, தேவன் சோதித்தார் எனலாமா?

இஸ்ரவேலோ இதிலும் மேலாக தேவனைவிட்டே விலகிச் சென்றுவிட்டார்கள். தேவனுடைய அன்பு, பரிசுத்தம், நீதி எவற்றையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. அவருடைய அன்பும் நீதியும் நாணயத்தின் இரு பக்கங்கள். அவர் நீதியுள்ள தேவன் என்றால், அநீதியை அவர் நியாயந்தீர்க்க வேண்டியது கட்டாயம். அவர் பரிசுத்த தேவன் என்றால், பாவத்தை நியாயந்தீர்க்க வேண்டியது கட்டாயம். அவர் அன்புள்ள தேவன் என்றால், தமது மக்களை அழிவுக்கு விட்டுவிட முடியாது. பாவம் களையப்பட நியாயத்தீர்ப்பு அவசியம். ‘விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது போன்றது அல்ல இது. நியாயத்தீர்ப்பு என்பது தேவனுடைய இயல்பு. அந்த இயல்பின்படியே நம்மை அவர் நியாயந்தீர்க்கிறார். நீதியின் தேவன் இஸ்ரவேலின் செயல்களினால் வெறுப்படைந்தாலும், திரும்பத்திரும்ப மனந்திரும்புதலுக்கு அழைப்பதை நாம் ஓசியா புத்தகம் முழுவதிலும் வாசிக்கிறோம். “விசாரிப்பின் நாட்கள் வரும். நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்து கொள்வார்கள்” (ஓசி.9:7) என்றும், “…அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்” (ஓசி.9:9) என்றும் தேவன் தமது நியாயத்தீர்ப்பின் இயல்பை வெளிப்படுத்தினாலும், “…கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும் அவரைத் தேடக் காலமாயிருக்கிறது” (ஓசி.10:12) என்று மனந்திரும்புதலுக்குத் தருணமும் கொடுத்தார்.

இதுவே தேவ அன்பு. இன்று பரலோக அன்பும் பரலோக நீதியும் சந்திக்கும் இடமாகிய சிலுவையண்டைக்கு நாம் வந்திருக்கிறோம். தேவநீதி தமது குமாரனை நமது பாவத்துக்காகப் பாலியாக்கி நம்மை மீட்டிருக்கிறது. ஆனால் நாமோ இன்னமும் மனந்திரும்ப மனமில்லாமல் இருப்பது எப்படி? ஒருநாள் உண்டு. அன்று இந்த அன்புள்ள தேவனே நியாயாதிபதியாய் உட்கார்ந்திருப்பார். நாம் இன்று இஸ்ரவேலைப்போல அவரைவிட்டுப் போகாமல், அவருடன் இருந்துகொண்டே அவருடைய கட்டளைகள், நீதி என்பவற்றுடன் நாமே மோதிக்கொண்டிருக்கிறோம். இதன் விளைவு பயங்கரமாயிருக்கும். ஆகவே இந்த நாள் நமக்கு ஒரு தருணம் என்று நினைத்து, மனந்திரும்புவோமாக.

“கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்” (ஓசி.6:1).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே தேவ அன்பையும் நீதியையும் பிரித்துப்பார்த்து, எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளாமல், எங்களுக்கு கிடைக்கும் தருணங்களை பயன்படுத்தி மனந்திரும்ப உதவிச்செய்யும். ஆமென்.