வேறெதைக் கர்த்தர் கேட்கிறார்!

தியானம்: 2018 டிசம்பர் 4 செவ்வாய் | வேத வாசிப்பு: மீகா 3:1-12

…தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள் மேல் பகல் காரிருளாய்ப் போகும் (மீகா 3:6).

சிறுவயதிலே இரயில் வண்டி விளையாட்டு விளையாடியது ஞாபகத்தில் உண்டு. நாம் வரிசையாக ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு, வாயால் ஓசை எழுப்பிக்கொண்டு போவோம். எஞ்சினாக முன்னே போகிறவர் திரும்புகின்ற வழியெல்லாம் திரும்புவோம். திடீரென எஞ்சினானவர் தொப்பென்று விழுவார். அப்போது நாம் எல்லோரும் விழுவோம். அது நமக்கு வேடிக்கையும் சிரிப்புமாக இருக்கும். ஆனால், நிஜவாழ்விலே இது நடந்தால், அதாவது நம்மை வழிநடத்த வேண்டியவர்களே விழுந்தால்?

அன்று தேவனுடைய வாயாய் வார்த்தையாய் நின்று இஸ்ரவேலையும் யூதாவையும் நடத்திய தீர்க்கதரிசிகளே அவர்களை நம்பிய ஜனத்தை மோசம் போக்கினார்கள். தங்கள் இஷ்டம்போல நடந்தார்கள். தங்கள் சுயலாபத்திலே கண்ணோக்கமாயிருந்தார்கள். இதனால் அவர்களுக்குக் கெடுதல் வருமானால் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள். ஆனால் கர்த்தரோ மறு உத்தரவு கொடார். இப்படியாக பொய் தீர்க்கதரிசனம் கூறி, மக்களைத் தவறாய் நடத்தி, ஜனத்தை மோசம் போக்கிய அன்றைய தீர்க்கதரிசிகள்மீது தேவன் கோபங்கொண்டார். இன்றைக்கோ மக்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தீர்க்கதரிசனம் என்று சொல்லி வார்த்தைகளை உதிர்த்து, தங்கள் இலாபத்தில் மாத்திரம் கண்ணாயிருக்கிற அநேகர் தங்களை தீர்க்கதரிசிகளாக உயர்த்தி, மக்களை தேவனைவிட்டு விலக்கி வருவதை நாம் மறுக்கமுடியாது. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நேசிக்கிறவர். எந்த விதத்திலும் தமது மக்களுக்குத் தீங்கு செய்கிறவர்களைக் கர்த்தர் விசாரிப்பார். இப்படிப்பட்டவர்கள்மேல், “சூரியன் அஸ்தமித்து, பகல் காரிருளாய் மூடும்” என்றார் கர்த்தர்.

அன்பானவர்களே, இது இன்றைய தலைவர்கள், ஊழியர்கள், மாத்திரமல்ல, குடும்பத்தை வழிநடத்தும் குடும்பத்தலைவர்களுக்கும் பொருந்தும். தேவனுடைய வழியில் நாம் அவர்களை நடத்துவோம் என்று நம்மில் நம்பிக்கை வைத்திருக்கின்றவர்களை நமது சுயலாபத்திற்காக மோசம்போக்குவது எப்படி? ஆண்டவர் நம்மிடம் என்ன பெரிதாகக் கேட்கிறார்? “மனுஷனே, …உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8). அவ்வளவும்தான். தேவனுக்கு உண்மையாயிருந்த மீகாவுக்கு நம்பிக்கை இருந்தது. “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு …தேவனுக்குக் காத்திருப்பேன்” (7:7) என்கிறார். நமது வாழ்வில் இருள் சூழுமானால் விழிப்போடு ஆராய்ந்து மனந்திரும்புவோமாக. அந்த இருளையெல்லாம் தேவன் வெளிச்சமாக மாற்றுவார். அதற்காகத்தானே இயேசு உலகிற்கு வந்தார். ஆனால் நாமேதான் அவரிடம் திரும்பவேண்டும்.

“நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்” (மீகா 7:8).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, மீகா தீர்க்கதரிசிக்கு இருந்த நிச்சயத்தையும் நம்பிக்கை யையும் இன்று எங்களுக்குத் தாரும். ஆமென்.