பாவமன்னிப்பின் செய்தி

தியானம்: 2018 டிசம்பர் 9 ஞாயிறு | வேத வாசிப்பு: லூக்கா 7:36-50

…அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்… (லூக். 1:77).

பல வருடங்களுக்கு முன்னர், பெரிய ஆலயத்தில், ஏறத்தாழ பற்றவைக்கப்பட்ட நூறு மெழுகுவர்த்திகளைக் கையில் பிடித்தபடி, உருகிய மெழுகு கைகளைச் சுடுவதையும் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டு நின்றிருந்தாள் ஒரு பெண். பின்னர், பல ஆண்டுகளின் பின்பு அவளை மீண்டும் சந்திக்க நேர்ந்தபோது, அப்போதும் கண்ணீர்விட்டு அழுதாள். ஆனால், இன்று மெழுகு வர்த்திகள் இல்லை. அவள் சொன்னது: “அன்று பாவ மன்னிப்பின் விடுதலைக்காக தெய்வமில்லாத தெய்வங்களையெல்லாம் நாடி அழுதேன். இன்று மெய்யான தேவன் எனக்கருளிய மன்னிப்பு, விடுதலை, புதிய வாழ்வு சகலத்தையும் எண்ணி ஆனந்தக் கண்ணீர் விடுகிறேன்” என்றாள்.

தன்னை நீதிமான் என்று பெருமைபாராட்டுகின்ற பரிசேயன் வீட்டிலே பாவி என்று அறியப்பட்ட ஒரு பெண். நம்பமுடியாத விஷயம். அவள் இப்போது எவருக்கும் பயப்படவில்லை. அவளுக்குள் நன்றி பெருக்கெடுத்து ஓடியது. அவளுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது, எதுவும் தெரியாது. ஆனால், பாவ மன்னிப்புப் பெற்று விடுதலையாகியிருந்தாள் என்பது மட்டும் விளங்குகிறது. இது அந்தப் பரிசேயனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு அவள் ஒரு கெட்ட பெண் அவ்வளவுதான் தெரியும். ஆனால் அவளுக்கோ தான் இயேசுவைக் காணவேண்டும், அவர் பாதம் பணியவேண்டும். அவளுக்குள் கிடைத்த மன்னிப்பின் விடுதலை அவளுடைய பயத்தையெல்லாம் நீக்கிப்போட்டது.

யோவான் ஸ்நானனைக்குறித்து சகரியா சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை இந்தப் பெண்ணில் நிறைவேறினதைக் காண்கிறோம். இந்தப் பெண் மன்னிப்புப் பெற்றபோது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. இன்றைக்கோ முழு உலகத்தின் பாவத்தையும் ஆண்டவர் சுமந்து தீர்த்துவிட்டார். அப்படியிருக்க அந்தப் பெண்ணுக்கு இருந்த தைரியம் இன்று நமக்குண்டா? மெய்யான மன்னிப்பு எப்போதும் விடுதலையுடன் இணைந்திருக்கும். அதை அருளுவதற்கே இயேசு வந்து பிறந்தார். இந்த மன்னிப்பும், விடுதலையும் இல்லாமல் எத்தனை ஆத்து மாக்கள் தேவன் அல்லாத தேவர்களையும், பல சுய பிரயத்தனங்களையும் எடுத்தும் தோற்றுப் போய் தமக்குள்ளே புழுங்கித் தவிக்கிறார்கள். எத்தனைபேர் சுயநினைவையே இழந்து நிற்கிறார்கள். கிறிஸ்து அருளிய மன்னிப்பையும் விடுதலையையும் இவர்களுக்கு அறிவிக்கிறவர்கள் யார்? மன்னிப்பும் விடுதலையும் நாம் பெற்றது மெய்யானால், கிறிஸ்து அருளிய விடுதலையைக் கிறிஸ்துமஸ் செய்தியாகக் கூறி அறிவித்து, பிறரையும் இயேசுவண்டை கொண்டுவரலாமே!

“…இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசி. 1:7).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட பாவமன்னிப்பின் சந்தோஷத்தை கிறிஸ்துமஸ் செய்தியாக மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களை இயேசுவண்டை வழிநடத்த எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.