அழைத்தவர் நடத்துவார்!
தியானம்: 2018 டிசம்பர் 20 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 2:1-7
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் (லூக். 2:7).
ஒருநாள் நிகழ்வுக்காக, ஒரு சபையார் ஒரு மாதமாக ஜெபித்து வந்தனர். காரியங்கள் கைகூடிவரும் சமயம் பெருமழை, பல இடங்களில் வெள்ள அழிவு. பல தடைகளின் மத்தியில், குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர். ‘இந்த மழையை நிறுத்தும் என்று அல்ல, தேவசித்தம் நிறைவேறட்டும் என்று ஜெபித்தேன்’ என்றார் ஒருவர், “பிதாவே, இக்காலநிலையும் உமது கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறது என்று ஜெபித்தேன்” என்றார் மற்றவர். நிகழ்வு மிக அற்புதமாக ஆச்சரியமாக நடந்து மகிழ்வோடு வீடு திரும்பினர்.
“தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தும் ஏன் காரியங்கள் கடினமாக இருக்கிறது? தேவன் என்னைக் கைவிட்டாரா?” என்று நாம் சில சமயங்களில் தடுமாறுகிறோம். அது தவறு. யோசேப்பும் மரியாளும் ராயனின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்துதான் புறப்பட்டு வந்தார்கள். ராயனுக்குக் கீழ்ப்படிவது தேவசித்தம். அதற்காக ஒரு ஐந்து நட்சத்திர விடுதி வேண்டாம்; ஒரு சாதாரண வீட்டிலாவது ஒரு இடம் கிடைத்திருக்கலாம் அல்லவா!
யோசேப்பும் மரியாளும், சத்திரங்களில் இடம் தேடி அலைவதுபோலவும், ஏதோ பெரிய காரியம் செய்வதுபோல ஒருவன் ஒரு முன்னணையைக் காட்டுவதுபோலவும் சிறுவயதில் கிறிஸ்துமஸ் நாடகங்கள் நடித்தது என் நினைவுக்கு வருகிறது. அவை கற்பனை என்றாலும், அதில் உண்மை உண்டு. மரியாளின் நிலையை நினைத்துப்பாருங்கள். தேவனுக்குத் தன்னை அடிமையாக ஒப்புக்கொடுத்ததற்கு இதுதானா பதில்? காரியம் அதுவல்ல. எளிமையும் தாழ்மையுமான கோலத்திலேதான் மேசியா உலகில் பிறக்கவேண்டியது தேவ திட்டம! ஆகவே, மேடு பள்ளம் நிறைந்த அவளது பாதையைத் தேவன் செவ்வைப்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக, இருவரையும் திடப்படுத்தினார். அவர் கள் தேவதிட்டத்துக்குள் இருந்தார்கள். ஆகவே அவர்களுடைய பாடுகள் தேவ திட்டம் நிறைவேறப் பயன்பட்டது என்பதுதான் உண்மை.
தேவனுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதால் எல்லா வசதி வாய்ப்புகளும் கிட்டும் என்பது அர்த்தமல்ல. ஆனால் ஒவ்வொரு கஷ்டங்கள் வசதியீனங்களுக்குள்ளும் தேவனுடைய திட்டம் இருக்கிறது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அவர் நமது தேவைகளைத் தேவைக்கேற்றபடி நடத்துவார். நாம் அவரை நம்பவேண்டும். அவ்வளவுதான். மற்றவற்றை தேவன் பார்த்துக்கொள்வார். எல்லாமே தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது.
“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).
ஜெபம்: நல்ல ஆண்டவரே, தேவனின் அழைப்பை உறுதிப்படுத்தியும் இத்தனை கஷ்டங்கள் ஏன் என்று கலங்கியிருக்கிறோம். ஆனால் கஷ்டங்களிலும் தேவனுடைய திட்டமே நிறைவேறுகிறது என்பதை தெளிவுபடுத்தியமைக்காக உமக்கு நன்றி. ஆமென்.