ஆசிரியரிடமிருந்து…

(ஜனவரி – பிப்ரவரி 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

ஜெயம் கொடுக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் வருடத்திற்குள் நம்மை அழைத்துவந்த தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக. வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12). இந்த வாக்கு இவ்வூழியத்தை தியாகத்தோடும் ஜெபத்தோடும் தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்கள் குடும்பங்களில் நிறைவேற வாழ்த்தி ஜெபிக்கிறோம்.

டிசம்பர் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்த ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்கள் நேயர்களுக்கும், இக்கூட்டம் சிறப்புற நடைபெற பிரயாசப்பட்ட, உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பித் தருகிறோம். கடந்த ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். 2019 ஆம் ஆண்டின் வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் ஒலி/ஒளிப்பரப்பில் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

ஜனவரி மாதத்தில் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு ஏற்படும் பயங்கள் என்ன? அவற்றிலிருந்து விடுதலை பெறுவதை தியானித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வரை ஜெபத்தைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், பிப்ரவரி 15 முதல் தேவனுக்குக் கொடுப்பதை தியானித்து சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள்.

இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்க்கையில் தேவனை அதிகமாக கிட்டிச்சேர்க்க உதவியாயிருக்கும். கர்த்தர்தாமே புதிய வருடத்தில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக!

கே.ப.ஆபிரகாம்