தோல்வியும் வெற்றியும்!
அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2019)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: யோசுவா 8: 1-35
அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான் (யோசுவா 8:!0)
‘தோல்வி என்பது வெற்றிக்கான பின்வாசல்’ என்பது ஒரு மூதுரையாகும். இப்பழமொழியை ஆயி பட்டணம் பிடிபட்ட நிகழ்வின் மூலமாக வேதாகமம் அழகுடன் விளக்குகிறது. மூவாயிரம் இஸ்ரவேல் மக்கள் ஆயி பட்டணத்தை வெற்றிகொள்வதை ஒரு மனிதனின் பாவம் தடுத்தது. ஆகான் என்ற ஒரு மனிதன் தேவ மக்களின் வெற்றிக்குத் தடையாக இருந்தான். ஆனால் அப்பாவம் நீக்கப்பட்டபின் இஸ்ரவேலுக்கு வெற்றி எளிதானது.
ஆயிபட்டணத்தில் கண்ட தோல்வி யோசுவாவின் தலைமைக்கு மிகப்பெரிய அவமானமாகும். கானானியர் இஸ்ரவேலரின் இத்தோல்வியைக் கேள்விப்பட்டால் பூமியிலிருந்து தங்களது பெயர் நீக்கப்பட்டு போகும் என்று யோசுவா பயந்தார். ஆனால் அதைவிட யெகோவா தேவனுடைய மிகப்பெரிய நாமத்துக்கும் அத்தோல்வி இழுக்கைத் தரும் என்று பயந்தார். ஆனால் ஆயி பட்டணத்தின் மீதான இரண்டாவது போரில் வெற்றியை அளிப்பதாக தேவன் கொடுத்த வாக்கு அவருடைய பயத்தைக் குறைத்தது.
எரிகோ பட்டணத்தைப்போல் அல்லா மல் இப்போரின் திட்டம் வித்தியாசமானது. கர்த்தர் யோசுவாவை நோக்கி, யுத்த வீரர்களில் முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதுங்கியிருக்கச் சொன்னார். மீண்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதுங்கியிருக்கச் சொன்னார்.
இதற்கிடையில் ‘அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம் பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான்’ (யோசு வா 8:10). அதனைக் கண்ட ஆயியின் அரசனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம் பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான் (யோசுவா 8:14). இஸ்ரவேலர் ஏற்கனவே தோல்வியடைந்திருந்ததால் பின்வாங்கி ஓடியதுபோல யோசுவா ஆயிக்கு வடக்கே தனது போர்வீரர்களுடன் ஆயிக்கு வடக்கே தனது போர் வீரர்களுடன் பாசாங்கு செய்தார். ஆயியின் சேனையும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.
இது நிகழ்ந்து கொண்டிருக்கும்பொழுது, பதுங்கியிருந்த இஸ்ரவேலர் காலியான ஆயியின் பட்டணத்திற்குள் நுழைந்து அதனை தீக்கொளுத்தினர். தங்கள் பட்டணம் புகைவதைக் கண்ட ஆயியின் அரசனும் அவனது வீரர்களும் தங்களுடைய தோல்வி தவிர்க்க முடியாதது எனக் கண்டுகொண்டனர். அவர்களது பட்டணம் இஸ்ரவேல் வீரர்களால் சூழப்பட்டிருந்தது. மறைந்திருந்த வீரர்களும் ஆயியை நோக்கி படையெடுத்தனர். யோசுவா தனது படைகளுடன் திரும்பித் தாக்க ஆரம்பித்தார். ஆயியின் அரசனையும் அவனது வீரர்களையும் பிடித்தார். ஆயியின் மக்கள் தோற்கடிக்கப்பட்டு யோசுவாவின் வெற்றி உறுதியானது.
யோசுவா ‘தோல்வியின் கல்லை வெற்றியின் படிக்கட்டாக’ மாற்றினார். இவ்வாறு செய்ததன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற தோல்வி அடைவதல்ல; ஆனால் விழும் ஒவ்வொரு முறையும் எழும்புவதேயாகும் என்ற முக்கியமான பாடத்தைப் படித்துக்கொண்டார். இவ்வுண்மையை அநேகர் தங்கள் வாழ்வில் நிரூபித்துள்ளனர்.
1832ம் ஆண்டு ஓர் இளம் அமெரிக்கர் சட்டசபைக்குப் போட்டியிட்டார். அதில் தோல்வியுற்றார். மீண்டும் 1834ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1847ம் ஆண்டு அமெரிக்கா ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் சபையில் ஒரு பருவத்துக்கு உழைத்தார். மீண்டும் அவர் தனது கட்சிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. அதிபர் சகேரி டெய்லா என்பவருக்காக பரப்புரை செய்தார். பொது நில அலுவலகத்தின் கமிஷனராக நியமனம் செய்யப்படுவோம் என எதிர்பார்த்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே தனது வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1854ல் மீண்டுமாக சட்ட மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் நப்ராஸ்காவின் புதிய எதிர்கட்சி செனட் தேர்தலில் தன்னை ஆதரிக்கும் என்ற எண்ணத்தில் அதனை ராஜினாமா செய்தார். ஆனால் அக்கட்சி அவரை ஆதரிக்கவில்லை. 1856ம் ஆண்டு ஐக்கிய நாட்டின் துணைஅதிபர் தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்டு தோல்வியடைந்தார். 1858ம் ஆண்டும் அவ்வாறே தோல்வியைத் தழுவினார். 1860ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிறந்த மகனாக பரிந்துரைக்கப்பட்டார். அந்த ஆண்டிலேயே அவர் ஐக்கிய நாட்டின் அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன். தனது கடந்தகால தவறுகள் எதிர்கால முயற்சியைப் பாதிக்காதவாறு எச்சரிக்கையாயிருந்தார்.
தேவனைவிட்டு விலகும் வெற்றியை விட மிக மோசமான தோல்வி எதுவும் கிடையாது. அதுபோல நமது வாழ்வில் தேவனுடைய வல்லமையை அறிந்து கொள்வதைவிட சிறப்பான வெற்றி எதுவுமில்லை. நாம் தோல்வியடைந்தால் அதனை வெட்கப்படாமல் அறிக்கையிட வேண்டும். இது ‘நேற்றைவிட இன்று நாம் புத்திசாலிகள்’ என்பதை அறிவிக்கும் ஒரு செயலாகும்.
அதிகாலைப் பாடல்:
என்றென்றும் ஜீவிப்போர், அதரிசனர்,
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்,
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வ வல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை