பயத்தை விரட்டுவோம்!

தியானம்: 2019 ஜனவரி 29 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 20:18-23

…சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால், கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19).

பல தாலந்துகளைக்கொண்ட கெட்டிக்கார வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் நன்றாகப் பயிற்சி செய்து, மேடைக்கு ஏறினாலும், ஒரு இனம் புரியாத பயம் அவனைப் பிடித்துக்கொள்ளும். அதனால் மேடை ஏறியவுடன் அவனுக்குப் பாடல் வரிகளே மறந்து விடும். பாடலின் ராகம் சிக்கிப்போகப் பயந்து நிற்பான். இதயம் படபடக்க, கைகால்கள் நடுங்க, சொல்ல நினைத்ததையும் மறந்து, பேச்சும் தடுமாறி நிற்பான். இப்படிப் பலமுறை மேடையில் அவமானப்பட நேர்ந்தது. இதனால் முன்நின்று பாடுவதற்கு சாக்குச்சொல்லி மறுத்துவிடுவான். அவனுக்குப் பாடத்தக்க வரம் இருந்தும், அவனுக்குள்ளிருந்த இனம் புரியாத பயம், தானே தனக்குப் பூட்டுப்போட அவனை தூண்டிவிட்டது.

மரித்த இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட பின்னரும், சீஷர்கள், வெளியே வருவதற்கு யூதருக்குப் பயந்தனர். பூட்டப்பட்ட அறைக்குள்ளே தங்களைப் பூட்டி வைத்துக்கொண்டிருந்தனர். எழுந்து செயற்பட முடியாதபடி யூதரைக் குறித்த பயம், தங்களுக்கு இனி என்னவாகுமோ என்ற ஒரு பயம், இப்படியாக பயம் அவர்களை கட்டிப் போட்டிருந்தது. ஆனாலும் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. பூட்டியிருந்த அறைக்குள்ளேயே அவர்களைத் தேடி வந்தார் இயேசு; அவர்களைத் தைரியப்படுத்தி, அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்தை நினைவுபடுத்தி, அந்த ஊழியத்தை வல்லமையோடு செய்வதற்கு தாம் அருளப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த முன் அனுபவத்தையும் கொடுத்தார்.

இன்று கிறிஸ்துவின் வல்லமையை அதிகமாக அனுபவிக்கின்ற நாமும், அவருக்காய் எழும்பிச் சாட்சி பகிர வேண்டியிருக்க, பயத்துக்கு இடங்கொடுத்து, நம்மையும் தேவன் தந்த திறமைகளையும் பூட்டிவைப்பது நியாயமா? அன்று பூட்டிய அறைக்குள் வந்த இயேசு, இன்று நமது இருதயத்தின் வாசலில் நிற்கிறார். அவருக்கு நாமேதான் இடமளிக்கவேண்டும். அப்போது பயம் நீங்கிப்போகும். அடுத்தது, ஆண்டவர் அருளிய சமாதானத்தை நாம் இழந்துவிடக் கூடாது. மேலும், நாம் அவருக்காய்ச் செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உண்டு. அதற்காய் நம்மைப் பெலப்படுத்தி வழிநடத்த இன்று பரிசுத்தாவியானவர் நமக்கு இருக்கிறார் அல்லவா! பின்னர் என்ன பயம்? பயம், சாத்தானின் ஆயுதங்களில் ஒன்று. அதை முறியடித்து எழும்புவோமாக.

“நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி. 22:13).

ஜெபம்: விடுதலையின் தேவனே, நீர் என்னோடு இருக்கிறபடியால் பயத்துக்கு இடமளித்து, உமக்காய் உழைக்கின்ற தருணங்களை நான் இழந்துவிடாதிருக்க கிருபை தாரும். ஆமென்.