கேடான இருதயம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யாத்திராகமம் 32: 1-35


மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க  தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள் (யாத்.32:6).


“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று எரேமியா தீர்க்கதரிசி உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமம் எரேமியாவின் கணிப்புக்கு அநேக சாட்சிகளைத் தருகிறது. இன்றைய செய்தித்தாட்களும் அதனையே எடுத்துரைக்கின்றன.

மனித இருதயம் எவ்வளவு கேடானது என்பதற்கு சீனாய் மலையில் இஸ்ரவேலரின் நன்றியற்ற தன்மை மிகச்சிறந்த ஓர் உதாரணம். தேவனுடைய ஜனங்கள் மலையின் கீழே முகாமிட்டிருந்த பொழுது மோசே மலையின் மேலே ஏறிச்சென்று தேவனுடைய நியமங்களைப் பெற்றுவந்தார். ஜனங்கள் தேவனுடைய பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு எல்லாரும் ஏகசத்தமாய் “கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று உத்தரவு சொன்னார்கள் (யாத்.24:3). மீண்டுமாக மோசே தேவ பர்வதத்தின்மீது ஏறிச்சென்றார். இம்முறை அவர் தேவனை ஆராதிக்கும் முறைகளுக்கான தேவனுடைய கட்டளைகளைப் பெற்றுவந்தார்.

இம்முறை மோசே மலையின் மீது தங்கிய காலம் அதிகமாய் இருந்தது. ஏறக்குறைய ஆறு வாரங்கள் கழிந்தன. மோசே திரும்பாததினால் மக்கள் பொறுமையிழந்து பயப்பட்டனர். தங்களுடைய தலைவனை இழந்துவிட்டோமா? உணவு இல்லாமல் மோசே மலையில் எவ்வாறு வாழ்வார்? தேவன் எங்கே? எகிப்திலிருந்து நடத்திவந்த அவர் மேக ஸ்தம்பமாக அம்மலையிலே இருந்தார். தேவன் தங்களை கைவிட்டு விட்டாரா என்றெல்லாம் அவர்கள் சந்தேகித்தனர்.

இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாச சோதனையை நேருக்கு நேராக எதிர் கொண்டனர். அதில் அவர்கள் மோசமான தோல்வியைத் தழுவினர். மோசே இஸ்ரவேலருடன் இருந்தவரையிலும் “தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க” அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். ஆனால் அவர் இல்லாததால் இஸ்ரவேலரின் விசுவாசமும் கரைந்துபோனது. அவர்களது இருதயத்தின் துன்மார்க்க தன்மை வெளிப்பட் டது.

இஸ்ரவேலர் மேகத்தில் முன்சென்று நடத்திய நித்திய தேவனைப்போல தங்களுக்கு தேவர்களை உண்டாக்கித் தருமாறு ஆரோனை நச்சரித்தனர். ஆரோன் அவர்களிடமிருந்த பொன்னாபரணங்களை கழற்றித் தரச்சொல்லி அதை உருக்கி ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கினான். மறுநாள் கர்த்தருக்குப் பண்டிகை என்றும் அறிவித்தான்.

புது பொம்மையைப் பெற்றுக்கொண்ட குழந்தையைப் போல இஸ்ரவேலர் மிகவும் உற்சாகமடைந்தனர். இரவு அவர்கள் சரியாக உறங்கவில்லை. “மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகன பலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்தார்கள்” (யாத்.32:6). பின்னர் அவர்கள் விளையாட ‘எழுந்திருந்தார்கள்’ என்று வேதாகமம் கூறியுள்ளது. இது அப்பாவித்தனத்தைக் குறிப்பிட்டாலும் அவர்கள் பாவமில்லாத விளையாட்டில் ஈடுபடவில்லை. அவர்கள் பாலியல் இச்சையைத் தூண்டும் செயல்களிலும் விக்கிரக ஆராதனைக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். விக்கிரக ஆராதனை முடிவில் விவரிக்கமுடியாத அருவருக்கத்தக்க களியாட்டில் கொண்டு போய்விடும்.

மோசேயும் யோசுவாவும் மலையிலிருந்து இறங்கி வந்தபொழுது மக்களின் குழப்பமான கூச்சலை யுத்தத்தின் இரைச்சல் என்று அனுமானித்தார். ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஆவேசமும் ஒழுக்கக் கேடானதுமான விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கண்டதும் மோசேக்கு சினமூண்டது. தனது கரங்களில் இருந்த கற்பலகைகளை கீழே போட்டு உடைத்தார்.

இஸ்ரவேலர் விழுந்துபோன நிலையை யாத்.32:25 நமக்கு நன்கு விளக்குகிறது. ஜனங்கள் விக்கிரகத்தை வணங்கி களியாட்டத்தில் ஈடுபட்டு ஒழுக்கக் கேடான நடனமாடி நிர்வாணமாயிருந்தனர். இது மோசேயை மாத்திரமல்லாமல் தேவனையும் அவமதித்த செயலாகும்.

தேவன் தெரிந்துகொண்ட மக்களின் இருதயத்தை சாத்தான் கெடுக்கும் அளவுக்கு எல்லையே இல்லை. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தாங்கள் பாவத்தில் விழாதபடிக்கு தங்களிடம் பெலனுண்டு என்று ஏமாந்துபோகக்கூடாது. பாவத்தில் ஈர்ப்புண்டு போகாதபடிக்கு தேவனுடைய ஆவியானவர்தாமே நம்முடைய கேடான இருதயத்தைத் தடுக்கவல்லவர். இந்த நாளிலும் நாம் “எங்களை சோதனைக்குட்படாதபடிக்கு தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்த ஜெபத்தை ஏறெடுப்போமா?

அதிகாலைப் பாடல்:

தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்;
என்னை சோதித்து என் சிந்தையை அறிந்து கொள்ளும்:
வேதனை உண்டாக்கும் வழி உண்டோ என்று பார்த்து
பாவத்திலிருந்து என்னைக் கழுவி விடுதலையாக்கிடுமே.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை