தாமதம் ஏன்?
தியானம்: 2019 மார்ச் 13 புதன் | வேத வாசிப்பு: யோவான் 11:35-48
‘இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, …அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்’ (யோவான் 11:32).
ஆண்டவருடைய வழிநடத்துதல்களையும், ஆலோசனைகளையும், அவர் பதிலளிக்கும் விதங்களையும் நாம் வேதாகமத்தில் ஆராயும்போது, எதுவுமே அவசர பதில்களாகவோ, ஆத்திரப்பட்டு செயற்படுத்தப் படுகிறவைகளாகவோ காணப்படவில்லை என்பதை நாம் கவனிக்கலாம்.
லாசரு வியாதிப்பட்டதுமே அவனது அக்காமார் இயேசுவுக்கு தகவல் அறிவித்து விட்டனர். அவர் அக்குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராகவும் லாசருவை மிகவும் நேசித்தவராக இருந்தாலும், உடனடியாக வந்து அவனைக் குணமாக்குவார் என்று சகோதரிகள் நினைத்ததில் தவறில்லை. ஆனால் நடந்ததோ வேறு. செய்தி அறிந்த பின்பும் இயேசு இன்னமும் நான்கு நாட்கள் தங்கிவிட்டுத் தாமதமாகவே வருகிறார். அவர் வருகிற சமயத்தில் லாசரு மரித்து நான்கு நாட்களாகிவிட்டிருந்தது. இயேசுவைக் கண்ட சகோதரிகள், அவர் அங்கே இருந்திருந்தால் லாசரு மரித்திருக்கமாட்டான் என்கிறார்கள். ஆனால் இயேசுவின் தாமதம் எந்தவொரு இழப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, தேவநாமம் மகிமைப்பட ஏதுவாயிற்று என்பதைக் காண்கிறோம். அன்று நடந்த சம்பவத்தில் அந்த சகோதரிகள் மெய்யாகவே கலக்கமுற்றிருந்திருப்பார்கள். ஆண்டவர் அவர்களைப் பார்த்து: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்றார்.
ஜெபத்திற்கான பதில் தாமதப்படும்போதும், இன்று நாமும் அவசரப்படுகிறோம்; தேவன் கைவிட்டாரோ என்று சோர்ந்துபோகிறோம். பல வேளைகளிலும் முற்றிலுமாக விசுவாசத்தை இழந்துவிடுகிறோம். நமக்கும் தேவன் தரும் ஆலோசனை, “நீ விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய்” என்பதே.
“அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்”; “பரிசுத்த ஆவியானவருக்காக எருசலேமிலே காத்திருங்கள்”; “சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” – இப்படியாகவே பல வேளைகளிலும் ஆண்டவருடைய பதில் அமைந்துள்ளது. அமர்ந்திருக்கவும், காத்திருக்கவும், விழித்திருக்கவும் நாம் தயாரா? தாமதமான பதிலால் ஆசீர்வாதம் கண்டோர் அநேகர். அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கும் உலகிலே ஜெபத்துக்கான பதிலும் அவசரமாய் கிடைக்கவேண்டும் என்று அங்க லாய்ப்பது தவறு. ஆனால் நாம் ஆராதிக்கும் தேவன் நீடிய பொறுமையுள்ளவர் அல்லவா!
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்” (நீதி. 13:12).
ஜெபம்: மகிமையின் தேவனே, என் ஜெபத்திற்கு பதில் கிடைக்காததால் சோர்ந்து போகாதபடிக்கு காத்திருந்து உமது மகிமையைக் காண எனக்கு கிருபை தாரும். ஆமென்.