நல்ல ஈவு
தியானம்: 2019 மார்ச் 28 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 15:7-14
‘நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்” (யோவான் 14:13).
கடையில் கண்ட ஒரு சிறிய பொம்மை தனக்கு வேண்டும் என்று மகள் தாயிடம் அடம்பிடித்தாள். தாயும் வாங்கித் தருவதாகக் கூறினாள். எனவே கிறிஸ்மஸ் வந்தபோது நிச்சயமாக தான் கேட்ட பொம்மை தனக்குக் கிடைக்கும் என்று ஆவலோடு பார்த்திருந்த மகளின் ஆசை நிறைவேறியது. தான் கேட்ட பொம்மை தனக்குக் கிடைத்த சந்தோஷத்தில் மகிழ்ந்திருந்த அவளிடம், அவளின் அண்ணன் கூறினான்: “உனக்குக் கிறிஸ்மஸ் பரிசாகத் தருவதற்கு இதைவிடப் பெரிய அழகான பொம்மை ஒன்று அம்மா உனக்காக வாங்க நினைத்திருந்தார். நீயோ இதுதான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அதை விட்டுவிட்டு இதை உனக்காக வாங்கினார்” என்றான்.
“என் நாமத்தினாலே நீங்கள் கேட்பவற்றை அருளிச்செய்வேன்” என இயேசு கூறினார். பிதாவுக்கு மகிமையாக இருக்கும்பட்சத்தில், அதைக் கொடுப்பதாக கூறினார். தமது வார்த்தை நம்மில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதையும் பிதா தம்மில் அன்பாயிருப்பதுபோல தாமும் நம்மில்; அன்பாயிருப்பதாகவும், அதுபோலவே நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்ற கட்டளையையும் ஆண்டவர் தந்தார். இவையெல்லாவற்றிற்கும் நாம் கீழ்ப்படிந்து நடக்கும்போது நமது ஜெபங்களும் கேட்கப்படும் என்ற உறுதி நமக்கு கிடைக்கிறது. பரமபிதா நமக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கும்போது, குறைவானவற்றுக்காக அடம்பிடித்து தேவன் அருளும் ஈவுகளை நாம் ஏன் வீணாக இழக்க வேண்டும்? “ஆண்டவரே எனக்கு இது தேவையாயினும் உமது சித்தம் மட்டும் ஆகக் கடவது” என்று நாம் ஜெபித்து அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நமக்குத் தேவையான சிறப்பான ஈவுகளை அருளிச்செய்வார் அல்லவா!
அருமையானவர்களே, நாம் ஜெபிக்க வரும்போது தேவசித்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறோமா? அல்லது, நமது விருப்பங்களுக்கு முதலிடம் கொடுக்கிறோமா? நாம் சில வரையறைகளைப் போட்டு இதற்குள்தான் நமக்குப் பதில் வேண்டும் என்று ஜெபிப்பதால், நல்ல ஈவுகளைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் தேவனின் பதிலுக்கு காத்திருப்பதில்லையே. ஏன்? இன்று நமது ஜெப ஜீவியத்தைச் சற்றே சிந்தித்துப்பார்ப்போம். இந்நாட்களில் அதிகமாக மற்றவர்களுக்காகவும், பிற ஊழியங்களுக்காகவும், நாட்டிற்காகவும் தேவசித்தத்திற்கு அமைந்த ஜெபங்களை ஏறெடுக்க நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்.
“நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்” (அப். 6:4).
ஜெபம்: ஜெபத்தைக் கேட்பவரே, நீர் எங்களுக்கு தருபவையெல்லாம் நன்மையான தாகவே இருப்பதினால் உமக்கு ஸ்தோத்திரம். எனது ஜெபங்கள் உமது சித்தத்திற்கு உகந்ததாயிருக்க வேண்டுதல் செய்கிறேன். ஆமென்.